15 நாட்களில் 4 தங்கப் பதக்கங்கள்..

அதிர்ஷ்டம் ஒருமுறைதான் கதவைத் தட்டும் என்பார்கள். "ஓடும் புயல்' ஹிமா தாஸ் விஷயத்தில் அதிர்ஷ்டம் இந்த ஆண்டு நான்கு முறை தட்டி தங்கப் பதக்கங்களை வழங்கியுள்ளது.
15 நாட்களில் 4 தங்கப் பதக்கங்கள்..

அதிர்ஷ்டம் ஒருமுறைதான் கதவைத் தட்டும் என்பார்கள். "ஓடும் புயல்' ஹிமா தாஸ் விஷயத்தில் அதிர்ஷ்டம் இந்த ஆண்டு நான்கு முறை தட்டி தங்கப் பதக்கங்களை வழங்கியுள்ளது. ஆம்..! ஹிமா சத்தமில்லாமல் மீண்டும் தலைப்பு செய்தியாகியுள்ளார் !
 ஜுலை 2 - லிருந்து ஒன்றல்ல.. இரண்டல்ல... மூன்றல்ல... நான்கு தங்கப் பதக்கங்களை சர்வதேச போட்டிகளில் அடுத்தடுத்து ஹிமா தாஸ் அறுவடை செய்திருக்கிறார். பத்தொன்பது வயதாகும் ஹிமா, உலக ஜூனியர் சாம்பியன் ஆவார்.
 அசாமின் "திங் எக்ஸ்பிரஸ்' என்று கொண்டாடப்படும் ஹிமாவின் முதல் தங்க அறுவடை தொடங்கியது ஜுலை 2-இல். போலந்தில் "போஸ்னன் அத்லெடிக்ஸ் கிராண்ட் ப்ரீஸ்' ஓட்டப் போட்டியில் 200 மீ தூரத்தை 23.65 நொடிகளில் கடந்து ஹிமா முதல் தங்கப் பதக்கம் பெற்றுள்ளார். அடுத்த தங்கப் பதக்கம் ஜுலை 7-இல் போலந்து நாட்டில் நடந்த "குட்னோ அத்லெடிக்ஸ் மீட்' போட்டியில் 200 மீ தூரத்தை 23.97 நொடிகளில் கடந்து முதலாக வந்ததிற்காக ஹிமாவுக்குக் கிடைத்தது.
 ஜுலை 13 அன்று செக் குடியரசில் நிகழ்ந்த "க்ளட்னோ அத்லெடிக்ஸ் மீட்' போட்டியில் அதே 200 மீ தூரத்தை 23 .43 நொடிகளில் கடந்ததிற்காக ஹிமாவை மூன்றாவது தங்கப் பதக்கம் வந்தடைந்தது. ஜுலை 17 அன்று செக் குடியரசில் நடந்த "தபோர் அத்லெடிக்ஸ் மீட்' போட்டியில் ஹிமாவுக்கு நான்காவது தங்கப் பதக்கம் கிடைத்துள்ளது. 200 மீ தூரத்தை 23 .25 நொடிகளில் முதலாவதாகக் கடந்ததிற்காக இந்தப் பதக்கம்.
 "ஹிமாவின் தனிச் சாதனையான 23.10 நொடிகளில் 200 மீ தூரத்தைக் முன்னர் கடந்துள்ளதை ஹிமா விரைவில் முறியடிப்பார் .. அந்த அளவுக்கு ஹிமாவிடம் முன்னேற்றம் உள்ளது' என்று ஓட்ட ஆர்வலர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளார்கள்.
 பேய் மழை கொட்டித் தீர்த்து வெள்ளத்தில் மூழ்கிக் கிடக்கும் அசாமின் வெள்ள நிவாரண நிதிக்காக தனது பாதி சம்பளத்தை அன்பளிப்பு செய்திருக்கும் ஹிமா "நான் ஒரு துளி உதவியுள்ளேன். அசாம் வெள்ள நிவாரணத்திற்காக அனைவரும் நிதி அளித்து உதவுங்கள்' என்று இந்திய மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
 ஹிமாவுக்கு இந்தியன் ஆயில் நிறுவனம் அதிகாரியாக வேலை தந்து உதவியுள்ளது. சொந்த ஊரில் கள்ளச் சாராய விற்பனைக்கு எதிராக குரல் கொடுத்து வருபவர் ஹிமா.
 ஹிமா புகழின் வெளிச்சத்திற்கு வந்தது சென்ற ஆண்டுதான்..! ஃபின்லாந்தின் டாம்பையர் நகரில் நடந்த சர்வதேச தடகள கழகத்தின் (ஐ.ஏ.ஏ.எஃப்) இருபது வயதுக்கு கீழுள்ளவர்களுக்கான 400 மீட்டர் ஓட்டப் பந்தயத்தின் இறுதிப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றவர் ஹிமா தாஸ். 400 மீட்டர் தூரத்தை 51.46 விநாடிகளில் கடந்து சாதனை படைத்தார். ஹிமா, தடகள ஓட்டத்தில் இந்தியாவின் சார்பாக தங்கப் பதக்கம் பெற்றிருக்கும் முதல் வீராங்கனை. புகழின் வெளிச்சத்தில் ஹிமா உச்சத்தைத் தொட்டார். ஆசிய விளையாட்டிலும் ஹிமா தங்கப் பதக்கத்தைத் தட்டிக் கொண்டு வருவார் என்ற எதிர்பார்ப்பு இருந்தாலும் அது கனவாகவே இருந்துவிட்டது.
 நானூறு மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் பி.டி. உஷா 51.61 நொடிகளில் கடந்த சாதனையை முறியடித்தவர் பெணாமல், இவர் அதே தூரத்தை 51.23 நொடிகளில் கடந்தார். ஹிமா பயிற்சி ஓட்டத்தின் போது 51.13 நொடிகளில் கடந்தாலும், அகில இந்திய சாதனை நிகழ்த்தியிருப்பவர் மஞ்சித் கவுர், 51.06 நொடிகளில் நானூறு மீ தூரத்தைக் கடந்தார். அகில உலக சாதனை மரிட்டா கோச் என்பவரின் 47.60 நொடிகள். ஹிமாவின் அடுத்த இலக்கு ஐம்பது நொடிகளுக்கு குறைவாக நானூறு மீ தூரத்தைக் கடக்க வேண்டும் என்பதே. அதனால் தீவிர பயிற்சிகளில் ஹிமா ஈடுபட்டாலும் தற்சமயம் ஹிமா 200 மீ தூர ஓட்டத்தில் கவனம் செலுத்தி வருகிறார்.
 இதுவரை ஹிமா தொட்டிருக்கும் உயரம் சாதாரணமானது. அசாதாரண உயரங்களை ஹிமா இனி வரும் நாட்களில் எளிதாகக் கடந்து தனக்கான இலக்கை அவரே நிச்சயிப்பார்...!
 - கண்ணம்மா பாரதி
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com