மகளிர்மணி

காபியில் கலைநயம்!

31st Jul 2019 10:25 AM

ADVERTISEMENT

பாரம்பரியமான ஓவியக் கலையைப் பின்பற்றி அதில் பல்வேறு சிந்தனைகளைப் புகுத்தி சாதனை படைத்து வருகிறார் கே.ஹேமமாலினி(35).
 இவர் சேலம் அழகாபுரம் பிருந்தாவன் சாலையில் உள்ள விநாயகர் கோயில் தெருவில் வசித்து வருகிறார். வ்ரிக்ஷô மாண்டிசோரி இண்டர்நேஷனல் பள்ளியில் தாளாளராக உள்ளார். பொறியியல் பட்டதாரியான இவர், காபி ஓவியங்கள் போன்ற புதுவிதமான ஓவியங்களை வரைந்து ஓவியக் கலைக்கு புத்துயிர் ஊட்டும் வகையில் செயல்பட்டு வருகிறார். இவர் ஓவியக்கலை குறித்து கூறியது:
 "எனது பள்ளிப் பருவத்தில் ஐந்தாம் வகுப்பு படிக்கும்போது ரங்கோலி ஓவியங்களை எனது சொந்த படைப்பாற்றலால் வரையத் தொடங்கினேன். பொழுதுபோக்கிற்காகவே வரையத் தொடங்கிய நான், நாளடைவில் ஓவியக் கலை மீது ஈர்ப்பு ஏற்பட்டு, ஓவியங்கள் வரைவதை தினசரி பழக்கமாகவே மாற்றிக் கொண்டேன். பின்னர், தினமும் ஓவியங்கள் வரைவதற்கு குறைந்தபட்சமாக 2 மணி நேரம் செலவிட்டேன். பாரம்பரிய ஓவியங்களை வரைய பின்பற்றிய நான் நாளடைவில் காலத்திற்கு ஏற்றவாறு மேற்கத்திய ஓவியங்களையும் வரைந்து பழகினேன்.
 இதைத்தொடர்ந்து, நேரம் கிடைக்கும்போதெல்லாம் தஞ்சை ஓவியங்கள், வெளிச்சகக் கலை ஓவியங்கள், நுண்கலை ஓவியங்கள் போன்ற புது விதமான ஓவியங்களை வரைந்தேன். தற்போதைய காலபோக்குக்கு ஏற்றவாறு காபியினால் வரையப்படும் காபி ஓவியங்களை வரையத் தொடங்கினேன்.
 முதலில் வெள்ளைத் தாளில் கேன்வாஸ் துணியை ஒட்டவைத்து, பிறகு அதன் மீது நாம் வரைய நினைக்கும் மாதிரி வரைபடத்தை பென்சில் மூலம் அதில் வரைய வேண்டும். பின்னர், காபி பொடியை தண்ணீரில் கலந்து அதன் மீது தூரிகையைக் கொண்டு வரைய வேண்டும். பின்னர், வரைந்த ஓவியம் சேதமடையாமல் இருக்க அதன்மீது நெய்வண்ணம் தீட்டி நன்கு உலர வைக்க வேண்டும். இவ்வாறு வரையப்படும் ஓவியங்களே காபி ஓவியங்கள் ஆகும்.
 இவ்வாறு ஒரு காபி ஓவிய வரைபடத்தை வரைவதற்கு குறைந்தது 2 நாள்கள் தேவைப்படுகின்றன. அதிலும் எனக்கு மிகவும் பிடித்தமான ஆப்ரிக்கன் பெண் ஓவியத்தை வரைவதற்கு 1 வாரம் எடுத்துக் கொண்டேன். மனதில் ஏற்படும் வார்த்தையால் வெளிப்படுத்த முடியாத கருத்துகளை ஓவியத்தால் வெளிப்படுத்துவது மனதிற்கு உற்சாகமளித்தது.
 இதுதவிர, டூட்லே ஓவியக் கலையிலும் ஆர்வம் செலுத்தினேன். இயல்பாக டூட்லே ஓவியங்கள் கருப்பு வெள்ளை வடிவில் தான் இருக்கும். இதையே எனது சொந்த கற்பனையால் பல வண்ணங்களைப் பயன்படுத்தி ஜொலிக்கும் வண்ண ஓவியமாக வரைந்தேன்.
 ஒவ்வோர் ஓவியத்தையும் எனது முழு மன நிறைவுடன் வரைந்து முடிக்கும் வரை கிடப்பில் போட மாட்டேன். அதுபோன்று நான் சொந்த கற்பனையால் வரையும் ஓவியங்களை யாருக்கும் பரிசளிக்கவும் மாட்டேன்.
 தற்போது என்னைப் போன்று, எனது குழந்தைகளும் ஓவியக் கலையில் ஆர்வம் காட்டுவது மகிழச்சியாக உள்ளது. ஏனென்றால், குழந்தைகள் சிறு வயதிலேயே ஓவியங்கள் வரைவதன் மூலம் அவர்களின் சக்தி மேம்படும்'' என்றார்.
 - எஸ்.ஷேக் முகமது,
 படம்: வே.சக்தி
 
 
 

ADVERTISEMENT
ADVERTISEMENT