மகளிர்மணி

கல்லூரியில் பட்டம் பெற்ற முதல் திருநங்கை!

31st Jul 2019 10:07 AM

ADVERTISEMENT

சென்னையில் உள்ள லயோலா கல்லூரியில் முதன் முறையாக நளினா பிரஷிகா என்ற திருநங்கை பட்டம் பெற்றதோடு, முதன்முறையாக தேசிய அளவில் கல்லூரி யூனியன் தேர்தலில் வெற்றிப் பெற்று செயலாளர் பதவியையும் பெற்றுள்ளார். ஆணாக பிறந்தவர் பிறகு திருநங்கையாக மாறி கல்வி கற்க வேண்டுமென்ற ஆர்வத்தில் கல்லூரியில் சேர்ந்து, தன்னுடைய கனவை நனவாக்கிக் கொண்டது எப்படி என்பது பற்றி நளினா இங்கு கூறுகிறார்:
 "திண்டுக்கல்லில் நடுத்தர குடும்பமொன்றில் பிறந்த நான், சிறுவயது முதலே பெண்கள் ஆடைகளை அணிந்து கொள்வேன். என் அம்மாவும் நான் விளையாட்டுக்காக இப்படி செய்வதாக கருதி என் விருப்பம் போல் அனுமதித்து வந்தார். என்னுடைய 14-ஆவது வயதில், உண்மையிலேயே நான் யார் என்பதை உணர்ந்தபோது என் பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர். இரண்டாண்டுகள் கழித்து என் தந்தைக்கு தெரியாமல் நான் பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டேன். இந்த உண்மை என்அம்மாவுக்கு தெரிந்தாலும், அவர் இது பற்றி யாரிடமும் சொல்லாமல் மறைத்துவிட்டார். மூன்று மாதங்கள் கழித்து வீட்டைவிட்டு வெளியேறி திருநங்கைகள் சமூகத்தினருடன் சேர்ந்து வாழ்ந்தேன்.
 அதே சமயத்தில் எனக்கு மேற்கொண்டு படிக்க வேண்டுமென்ற ஆசையும் இருந்தது. நான் படித்த பள்ளியில் பத்தாம் வகுப்பில் நல்ல மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சிப் பெற்றிருந்தாலும், என்னுடைய பாலின மாறுதல் காரணமாக பள்ளியிலிருந்து வெளியேற வேண்டியதாயிற்று. நான்காண்டுகள் கழித்து தனி மாணவியாக பதிவு செய்து 12-ஆம் வகுப்பு தேர்வை எழுதி நல்ல மதிப்பெண்கள் பெற்றேன். அடுத்து கல்லூரியில் சேர வேண்டுமென்ற நோக்கத்தில் சென்னை லயோலா கல்லூரி நிர்வாகத்தை அணுகினேன்.
 என்னைப் பார்த்த கல்லூரி முதல்வர் டாக்டர் ஜோசப் அந்தோணிசாமி அன்புடன் வரவேற்று, கல்லூரியில் சேர அனுமதித்தார். லயோலா கல்லூரி நூறாண்டுகள் சரித்திரத்தில் ஒரு திருநங்கைக்கு அனுமதி அளித்தது இதுதான் முதல்முறை என்றும் கூறினார். பொதுவாக கல்லூரிகளில் திருநங்கைகளை அனுமதிப்பதில்லை. சக மாணவர்களின் கேலிக்கு ஆளாவதோடு, தேவையற்ற பிரச்னைகள் ஏற்படலாம் என்பதால் தவிர்த்து வந்ததாகவும் தெரிந்தது. என்னைப் பொருத்தவரை சக மாணவர்களும் மாணவிகளும் எந்த வேறுபாடுமின்றி என்னிடம் சகஜமாக பழகியதால் என்னுடைய அடையாளத்தை மறைக்க வேண்டிய அவசியம் ஏற்படவில்லை. மாணவ மாணவிகள் மட்டுமின்றி ஆசிரியர்களும் என்னை மிகவும் ஊக்குவித்தனர். அந்த கல்லூரியில் பட்டம் பெறும் முதல் திருநங்கை நான்தான் என்றாலும், பட்டமளிப்பு விழாவின்போது எனக்கென்று சிறப்பு சலுகை ஏதும் அளிக்காமல், சாதாரண நிகழ்ச்சியாக நடந்தது எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது' என்று கூறும் நளினா இரண்டாமாண்டு எம்.எஸ்.சி விஷுவல் கம்யூனிகேஷன் படித்து வருகிறார்.
 இதற்கிடையில் கல்லூரியில் நடந்த மாணவர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிப் பெற்று செயலாளர் பதவியை பெற்ற வகையில் தேசிய அளவில் கல்லூரி தேர்தலில் வெற்றிப்பெற்று பதவி வகிக்கும் முதல் திருநங்கை என்ற சிறப்பும் நளினாவுக்கு கிடைத்துள்ளது. இவர் விஷுவல் கம்யூனிகேஷனை தேர்ந்தெடுக்க என்ன காரணம்?
 "திருநங்கை என்றால் வித்தியாசமானவள் என்ற கருத்து பொதுவாக உள்ளது. ஏறக்குறைய எல்லா திரைப்படங்களிலும் திருநங்கைகளின் தோற்றம், குரல் போன்றவை கேவலமாக சித்தரிக்கப்படுகிறது. சமூக விரோதிகளுடன் தொடர்புடையவர்கள் போன்று காட்டுகின்றனர். இதுவரை நான் பார்த்த படங்களில் "காஞ்சனா'வில் மட்டும் திருநங்கை படித்து வேலை பார்க்க முயல்வதாக காட்டியிருந்தார்கள். இது வரவேற்கதக்கது இருப்பினும் திரைக்குப் பின்னால் படித்து முன்னேறி வாழ வேண்டும் என்று ஆசைப்படும் திருநங்கைகளை வெளிச்சத்துக்குக் கொண்டு வரவேண்டுமென்பதுதான் என் குறிக்கோள்.
 அதுமட்டுமின்றி திருநங்கை சமூகத்தினரிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி அனைவரும் சமம் என்பதை உணர்த்த விரும்புகிறேன். இதை உணர்த்துவதற்காகவே கல்லூரி தேர்தலில் வெற்றிப் பெற்று ஒரு பதவியில் அமர்ந்தேன்.
 ஆண், பெண் திருநங்கை என்ற பாகுபாடு அகல திருநங்கைகள் கல்வி கற்க வேண்டும், வேலைக்கு செல்ல வேண்டும். மகிழ்ச்சியான வாழ்க்கை நடத்த வேண்டும் என்று நான் விரும்பினாலும், அது அவ்வளவு சுலபமல்ல என்பதும் தெரிகிறது. கடின முயற்சியால் மாற்றத்தைக் கொண்டு வர முடியுமென்ற நம்பிக்கை உள்ளது. இந்த ஆண்டு இதே கல்லூரியில் மேலும் இரு திருநங்கைகள் சேர்ந்திருப்பது சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்தி வருவதோடு, விரைவில் இந்த சமூகம் திருநங்கைகளுக்குரிய சம உரிமையை அளிக்கும்'' என்று கூறும் நளினா, கூடவே கல்லூரிகளில் சிறப்பு பேச்சாளராகவும், நடனம், விழிப்புணர்வு கருத்தரங்களிலும் ஆர்வம் காட்டி வருகிறார்.
 - பூர்ணிமா
 

ADVERTISEMENT
ADVERTISEMENT