வெள்ளிக்கிழமை 23 ஆகஸ்ட் 2019

மீண்டும் எழுந்து வருவேன்...

Published: 17th July 2019 11:40 AM

100 மீ உலக பல்கலைக்கழக விளையாட்டில் சீனியர் பிரிவில் தங்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை தூத்தி சந்த்!

அதிரடி வேக ஓட்டப் பந்தய வீராங்கனை தூத்தி சந்த் இத்தாலி நாப்போலியில் நடந்த 30-ஆவது கோடைக்கால பல்கலைக்கழக விளையாட்டுப் போட்டியில் 100 மீட்டர் தூர ஓட்டப் பந்தயத்தில் தங்கப்பதக்கம் வென்றுள்ளார். உலகத்தர போட்டி ஒன்றில் சீனியர் பிரிவில் தங்கப்பதக்கம் வென்ற "முதல் இந்திய தடகள வீரர்' என்ற பெருமையும் தூத்தி சந்த்திற்கு வந்து சேர்ந்துள்ளது. இதற்கு முன் ஜுனியர் பிரிவில் 400 மீ. தூரத்தை ஓடிக் கடந்து தங்கப் பதக்கம் வென்றவர் அசாமைச் சேர்ந்த ஹிமா தாஸ்.

சென்ற ஆண்டு நடந்த ஆசிய போட்டிகளில் 100 மீ., 200 மீ. தூர ஓட்டப் போட்டியில் தூத்திக்கு வெள்ளிப்பதக்கங்கள் மட்டுமே கிடைத்தன. இப்போது தங்கப் பதக்கம் வாங்கும் பிரமோஷன் கிடைத்திருக்கிறது. தூத்தி அரை இறுதிச் சுற்றில் இடம் பெற்றதே ஓர் இந்திய சாதனைதான்...

11.41 நொடிகளில் 100மீ தூரத்தைக் கடந்த இறுதிச்சுற்றுக்கு தகுதியான முதல் இந்தியர் தூத்திதான். இறுதிச் சுற்றில் 11.32 நொடிகளில் தூரத்தைக் கடந்து தூத்தி தங்கப் பதக்கம் வென்றுள்ளார். இதே தூரத்தை தூத்தி தோஹாவில் நடந்த போட்டி ஒன்றில் 11.26 நொடிகளில் கடந்துள்ளார். சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த டெல் பாண்டே 11.33 நொடிகளில் 100 மீ தூரத்தைக் கடந்து வெள்ளிப் பதக்கம் பெற்றார்.

ஒடிஸாவைச் சேர்ந்த ஓட்டப் புயலான தூத்தி சந்த்திற்கு வயது 23 . 30-ஆவது கோடைக்கால சர்வதேச பல்கலைக்கழக 100 மீட்டர் பந்தயத்தில் இறுதிச் சுற்றில் ஓடத் தகுதிபெற்ற முதல் இந்தியர். தூத்தி வெற்றி பெற்றவுடன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவினைப் போட்டார் : "என்னை எவ்வளவு கீழே தள்ளி விட்டாலும், மீண்டும் சக்தியுடன் எழுந்து வருவேன்...''இந்த பதிவுக்குப் பின்னணி உண்டு. பரபரப்பை ஏற்படுத்திய தூத்தி தலைப்பு செய்தியாக மாறியிருந்தார். இந்த செய்தி தூத்தியின் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் அதிர்ச்சி தந்த செய்தியாகிவிட்டது. குடும்பத்தில் தூத்திக்கு எதிராக விமர்சனங்கள் கண்டனங்கள் எழுந்தன. சமூக தளத்தில் தூத்தி பக்கங்களில் அனைவரும் திட்டித் தீர்த்தார்கள். விவாதங்கள் விசுவரூபம் எடுத்துப் புறப்பட்டன. வெகு கசப்பான விமர்சனங்கள்.. கடுமையான கண்டனங்கள் தூத்தியை மனதளவில் பாதித்தன. மன உளைச்சலுக்கும் உள்ளானார்.

"இனி தூத்தி ஓடி.. பதக்கம் ஒன்றையும் பெற மாட்டார்' என்று தீர்ப்பும் வழங்கிவிட்டார்கள். இந்த எதிர்ப்பை தூத்தி கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை. ஆனால் தனக்கு எதிராக வைக்கப்பட்ட விமர்சனங்கள், கண்டனங்களுக்கு பதக்கம் பெறுவதன் மூலமாக மட்டுமே பதில் சொல்ல முடியும் என்று நம்பினார். கடுமையான பயிற்சிகள்.. மனதை ஒருநிலைப்படுத்த யோகா என்று தூத்தி ஐக்கியமானார்.

ஜுலை 10 அன்று உலகத் தர போட்டியில் தங்கப் பதக்கம் வென்று தனக்கு எதிராக எழுந்த எல்லாவித விமர்சனங்கள், கண்டனங்களுக்கு பொருத்தமான பதிலை தூத்தி தந்துள்ளார்.

தூத்தியின் வெற்றிக்கு ஜனாதிபதி, பிரதமர் உட்பட வாழ்த்துகளைத் தெரிவிக்க ..

"இனி எல்லா போட்டிகளிலும் அடுத்த ஒலிம்பிக்ஸ் போட்டியிலும் தங்கம் பெற ஆன மட்டும் முயற்சிப்பேன்.. இந்த தங்கப் பதக்கம் எனது ஆதரவாளர்களின் ஆசிர்வாதத்தினாலும், எனது கடின உழைப்பாலும்தான் சாத்தியமானது'' என்று சொல்கிறார் தூத்தி.

அடுத்து உலக சாம்பியன் போட்டியில் பங்கு பெற தகுதித் தேர்விற்காக எதிர்வரும் அக்டோபர் மாதம் தோஹாவில் நடைபெறவிருக்கும் போட்டியில் தூத்தி கலந்து கொள்கிறார்.
 - கண்ணம்மா பாரதி

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

More from the section

நடந்தது சம்பவம் அல்ல அனைவருக்குமான பாடம்!
47 வயதில் 4 தங்கப் பதக்கம்
இணையத்தில் வைரலான ரயில் நிலைய பாடகி!
கேஸ் சிலிண்டர் வாங்குறீங்களா உஷார்!
விளாம்பழத்தின் பலன்கள்!