வெள்ளிக்கிழமை 23 ஆகஸ்ட் 2019

சமையல்! சமையல்!

DIN | Published: 17th July 2019 11:13 AM

இனிப்பு இட்லி

தேவையானவை: புழுங்கல் அரிசி - 2 கிண்ணம், உளுந்தம்பருப்பு - அரை கிண்ணம், தூள் செய்த கருப்பட்டி - ஒரு கிண்ணம், ஏலக்காய்த்தூள் - ஒரு சிட்டிகை, நெய்யில் வறுத்த பாசிப்பருப்பு - 2 மேசைக் கரண்டி, தேங்காய்த் துருவல் - கால் கிண்ணம், நெய் - சிறிதளவு, ஆப்ப சோடா, உப்பு - ஒரு சிட்டிகை.
 செய்முறை: புழுங்கல் அரிசி, உளுந்தம்பருப்பை தனித்தனியே ஊற வைத்து, உளுந்தை பொங்கப் பொங்கவும், அரிசியை நைஸாகவும் அரைத்து, இரண்டையும் ஒன்றுசேர்த்து, சிட்டிகை உப்பு சேர்த்துக் கரைத்து நன்கு புளிக்க வைக்கவும். பிறகு, மாவில் தேங்காய் துருவல், நெய், ஏலக்காய்த்தூள், ஆப்ப சோடா, வறுத்த பாசிப்பருப்பு சேர்த்துக் கலக்கவும். கருப்பட்டியில் சிறிது நீர் சேர்த்து கரையவிட்டு, வடிகட்டி, சூடாக்கி அப்படியே மாவில் சேர்க்கவும். இதை நன்கு கலந்து இட்லித் தட்டில் ஊற்றி இட்லிகளாக வார்க்கவும்.
 குறிப்பு: கருப்பட்டிப் பாகு சேர்த்ததும் மாவு நீர்த்துக் கொள்ளுமென்பதால், மாவு அரைக்கும்போது சற்று கெட்டியாக இருப்பது அவசியம்.
 
 மரவள்ளிக்கிழங்கு பாயசம்

தேவையானவை: மரவள்ளிக்கிழங்கு - கால் கிலோ, பால் - 3 டம்ளர், சர்க்கரை - ஒரு கிண்ணம், நெய்யில் வறுத்த முந்திரி - 8, ஏலக்காய்த்தூள், குங்குமப்பூ - தலா ஒரு சிட்டிகை, தேங்காய்ப் பால் - ஒரு டம்ளர்.
 செய்முறை: மரவள்ளிக்கிழங்கை நன்கு கழுவி, வேகவைத்து தோல் நீக்கி மசித்துக் கொள்ளவும். பாலுடன் சர்க்கரை சேர்த்துக் கொதிக்கவிடவும். அதில் மசித்த மரவள்ளிக்கிழங்கை சேர்த்து நன்கு கிளறவும். பிறகு, முந்திரி, ஏலக்காய்த்தூள், குங்குமப்பூ சேர்த்து இறக்கி... தேங்காய்ப் பால் சேர்த்துப் பரிமாறவும்.
 
 புழுங்கலரிசி ஆவி உருண்டை

தேவையானவை: புழுங்கலரிசி - ஒரு கிண்ணம், தேங்காய் துருவல் - கால் கிண்ணம், நல்லெண்ணெய், உப்பு - தேவை யான அளவு.
 தாளிக்க: கடுகு - கால் தேக்கரண்டி, காய்ந்த மிளகாய் - 4, உளுந்தம்பருப்பு, கடலைப்பருப்பு - தலா ஒரு தேக்கரண்டி, கறிவேப்பிலை - 2 ஈர்க்கு, பெருங்காயத் தூள் - கால் தேக்கரண்டி.
 செய்முறை: புழுங்கலரிசியை 2 மணி நேரம் ஊற வைத்து, உப்பு சேர்த்து சற்று கொரகொரப்பாக அரைக்கவும். வாணலியில் நல்லெண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு, உளுந்தம் பருப்பு, கடலைப்பருப்பு, காய்ந்த மிளகாய், பெருங்காயத்தூள், கறிவேப்பிலை தாளித்து... அதனுடன் அரைத்து வைத்துள்ள மாவை சேர்த்து கை விடாமல் நன்கு கிளறவும். மாவு வாணலியில் ஒட்டாமல் பந்து போல வரும் சமயம் தேங்காய் துருவல் சேர்த்துக் கிளறி இறக்கவும். மாவு சற்று ஆறியதும் சின்னச் சின்ன உருண்டைகளாக உருட்டி ஆவியில் வேக வைக்கலாம். மாவை உருட்டி உள்ளங்கையில் வைத்து வடை போல தட்டி, இட்லித்தட்டில் வேகவிட்டும் எடுக்கலாம்.
 
 நாரத்தை இலை ரசம்

தேவையானவை: நாரத்தை இலை - 6, கொத்துமல்லித் தழை - ஒரு கைப்பிடி, பச்சை மிளகாய் - 2, பூண்டு - 4 பல், கடுகு, சீரகம் - தலா கால் தேக்கரண்டி , மிளகுத்தூள் - 2 தேக்கரண்டி, சீரகத்தூள் - ஒரு தேக்கரண்டி, கறிவேப்பிலை - 2 ஈர்க்கு, எலுமிச்சம்
 பழச் சாறு - 2 தேக்கரண்டி, உப்பு, எண்ணெய் - சிறிதளவு.
 செய்முறை: நாரத்தை இலை, கொத்தமல்லித் தழை, பச்சை மிளகாய், பூண்டு ஆகியவற்றை ஒன்றிரண்டாக பொடித்து வைக்கவும். வாணலியில் எண்ணெய் காய்ந்ததும் கடுகு
 தாளிக்கவும். இதில் பொடித்து வைத்த கலவையை சேர்த்து லேசாக வதக்கி, 3 டம்ளர் நீர் சேர்க்கவும். பிறகு, மிளகுத்தூள், சீரகத்தூள், கறிவேப்பிலை, உப்பு சேர்த்து கொதிக்கவிட்டு இறக்கி, எலுமிச்சம் பழச்சாறு சேர்த்துப் பரிமாறவும்.
 - கே.முத்துலட்சுமி, தொண்டி.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

More from the section

நடந்தது சம்பவம் அல்ல அனைவருக்குமான பாடம்!
47 வயதில் 4 தங்கப் பதக்கம்
இணையத்தில் வைரலான ரயில் நிலைய பாடகி!
கேஸ் சிலிண்டர் வாங்குறீங்களா உஷார்!
விளாம்பழத்தின் பலன்கள்!