வெள்ளிக்கிழமை 23 ஆகஸ்ட் 2019

ஐ.ஏ.எஸ் தேர்வில் வென்ற ஆதிவாசிப் பெண்

Published: 17th July 2019 11:31 AM

உலக நாகரீகம் எட்டிப் பார்க்காத இடத்தில் வாழும் ஆதிவாசி இனத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது முயற்சியால் ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற்று சாதித்துள்ளார்.
 கேரள மாநிலம், வயநாடு மாவட்டம், அச்சூரணம், அம்பலகொல்லி பகுதியைச் சேர்ந்த ஆதிவாசிப் பெண் தன்யாஸ்ரீதான் அந்த சாதனைப் பெண். அவரது தந்தை கூலித்தொழிலாளி, தாய் தேசிய வேலை உறுதித்திட்டத்தில் தொழிலாளி. குடிசை வீட்டில் வசித்து வந்த அவர்களுக்கு செய்தித்தாள் வாங்குவதற்கு கூட வசதி இல்லை. பள்ளிப்படிப்பை அரசுப் பள்ளியில் படித்த அவர் கோழிக்கோடு செயின்ட் ஜோசப் கல்லூரியில் விலங்கியல் பட்டம் பெற்றார்.
 சிறுவயதிலேயே ஆட்சியர் கனவை தனது மனதில் பதிய வைத்து விட்ட தன்யாவிற்கு, வாய்ப்புகள் எதுவும் தானாக கிடைக்கவில்லை. வாய்ப்புகளை உருவாக்கி படித்தார். தான் படித்த பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் தனது படிப்பால் முதலிடம் பெற்று தனது கனவை நனவாக்க போராடினார். எத்தனையோ போராட்டங்களை அவர் வாழ்வில் சந்தித்தார். இருப்பினும் சோர்வு என்பது அவரிடம் தோற்றுப் போனது. இறுதியாக ஐஏஎஸ் நேர்காணலுக்காக தனது நண்பர்களிடம் கடன் பெற்று டெல்லிக்கு சென்று தேர்வை எதிர்கொண்டார்.
 அவரின் விடாமுயற்சிக்கு, வெற்றி தலைவணங்கியது. 2019-இல் சிவில் சர்வீஸ் தேர்வில் அவர் வெற்றி பெற்றார். முயன்றால் முடியாதது எதுவுமில்லை என்பதை ஓர் ஆதிவாசிப் பெண்ணான தன்யா உலகிற்கு வெளிச்சம் போட்டு காட்டியுள்ளார். அவர் வெற்றி பெற்றவுடன் எத்தனையோ விஐபிகள் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
 "சாதிப்பதற்கு சூழ்நிலை எதுவும் தடையாக இருப்பதில்லை. என்னுடைய வெற்றி இன்னும் பலருக்கு உந்து சக்தியாக இருக்கும்'' என நம்பிக்கையுடன் கூறும் அவரைப் போன்று நாமும் முயன்றால் வெற்றி என்பதன் மறு பெயராக நமது பெயர் மாறிவிடும்.
 - வி.குமாரமுருகன்.
 
 

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

More from the section

நடந்தது சம்பவம் அல்ல அனைவருக்குமான பாடம்!
47 வயதில் 4 தங்கப் பதக்கம்
இணையத்தில் வைரலான ரயில் நிலைய பாடகி!
கேஸ் சிலிண்டர் வாங்குறீங்களா உஷார்!
விளாம்பழத்தின் பலன்கள்!