செவ்வாய்க்கிழமை 17 செப்டம்பர் 2019

மயான வேலையை மனமுவந்து செய்யும் பெண்!

DIN | Published: 10th July 2019 10:50 AM

ஆண்களே இறந்தவர் உடலை அடக்கம் செய்யும் வேலைகளில் ஈடுபட்டு வரும் நிலையில், தகனத்துக்கு மேற்கொள்ள வேண்டிய சடங்குகளை செய்து, அடக்கம் செய்யும் பணியில் பெண் ஒருவர் ஈடுபடுவதை சிலர் ஆச்சர்யத்துடன் பார்க்கின்றனர்.
 அவர் பெயர் புனிதா. புதுச்சேரி சண்முகாபுரம் மயானத்தில்தான் இவரது பணி.
 கணவன் கைவிட்ட பிறகு, ஒரு குழந்தையுடன், பெற்றோர் உள்ளிட்ட யாருக்கும் பாரமாக இருந்துவிடக் கூடாது என்ற எண்ணத்தில் இந்தப் பணியை மனமுவந்து மேற்கொண்டு வருகிறார் புனிதா. இதுகுறித்து அவர் நம்மிடம் பகிர்ந்து கொண்டது:
 " எனது பெற்றோருக்கு 5- ஆவது மகளாகப் பிறந்த நான், குடும்ப சூழல் காரணமாக சிறுவயது முதலே பல்வேறு வேலைகளைச் செய்து வந்தேன். எனது பெற்றோர் எனக்கு கடந்த 2003 -ஆம் ஆண்டில் சீரும் சிறப்புமாக திருமணம் செய்து வைத்தனர். ஆனால், சில பிரச்னைகள் காரணமாக, எனது மகன் பிறந்த பிறகு, எனது கணவர் என்னை விட்டுப் பிரிந்து சென்றுவிட்டார். இதனால் மீண்டும் நான், எனது மகனை வைத்துக் கொண்டு கடும் சிரமத்துக்கு உள்ளானேன்.
 அடுத்து, என்ன செய்வது என்று யோசித்த சமயத்தில் எனது தந்தை ஏற்கெனவே மயானத்தில் பார்த்த வேலை எனக்கு கிடைத்தது. முதலில் எனது தந்தைக்கு உதவியாக இருந்த நான், அவருக்கு உடல் நிலை சரியில்லாததால் அடக்கத்துக்கான குழி தோண்டுதல், தகனத்துக்கான ஏற்பாடுகளைச் செய்தல், சடங்குகளை மேற்கொள்தல், அடக்கம் செய்தல், நள்ளிரவு வரை இருந்து தகனம் செய்து தருதல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள ஆரம்பித்தேன்.
 நான் கடந்த 5 ஆண்டுகளில் 100-க்கும் மேற்பட்டவர்களின் தகன வேலைகளை செய்துள்ளேன். இறந்தவர்கள் கடவுளுக்கு ஒப்பானவர்கள், எனவே, அவர்களுக்கு கண்ணும் கருத்துமாக நல்ல முறையில் இறுதிச் சடங்குகளைச் செய்து அனுப்ப வேண்டும். அதனால், நான் மனமுவந்து இந்தப் பணியை மேற்கொள்கிறேன்.
 இதில் கிடைக்கும் வருமானத்தை வைத்து எனது மகன், பெற்றோர் உள்ளிட்ட குடும்பத்தினர் ஜீவனம் நடத்தி வருகிறோம்.
 புதுச்சேரி நகராட்சி நிர்ணயித்த கட்டணத்தை மட்டுமே வசூலிக்கிறேன். எனக்குத் துணையாக எனது தந்தையும், தாயும் அவ்வப்போது பணிகளைச் செய்வர்.
 இதில் சீரான வருமானம் கிடைக்காது. சில சமயம் சாப்பாட்டுக்கே கஷ்டமாக இருக்கும். எனவே, இந்த வேலை நேரம் போக, மற்ற நேரத்தில் ஏதேனும் தொழில் செய்ய உதவி செய்ய வேண்டும் என்கிறார் புனிதா.
 மயான வேலையை மன தைரியத்துடன் மேற்கொள்ளும் புனிதாவின் பணியைப் பாராட்டலாம்.
 - க. கோபாலகிருஷ்ணன்
 
 
 
 
 
 

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

More from the section

வெப் சீரியலில்  நடிப்பது  புதிய அனுபவம்
வச்ச குறி தப்பாது காவல் அதிகாரியின் தங்கவேட்டை!
வலைத்தளம் ஏற்படுத்திய மாற்றம்! - நடிகை ரம்யா பாண்டியன்
தோட்டம் அமைக்கலாம்  வாங்க...: செடிகளை பாதுகாக்கும் தேமோர் கரைசல்
புதிய சிந்தனை... பொருளாதார உயர்வு...