வியாழக்கிழமை 21 பிப்ரவரி 2019

ஆசியாவின் அதிவிரைவு வீராங்கனை!

By - ரய்யான்| Published: 09th January 2019 12:00 AM

சைக்கிள்  பயணத்தில்  ஆசிய சாதனை  படைத்திருக்கிறார்  இருபது வயதாகும்   வேதாங்கி குல்கர்னி.

159  நாட்களில்   14  நாடுகளில்  29,000 கி.மீ. பயணித்து  "ஆசியாவின்  அதிவிரைவு வீராங்கனை'  என்ற பெருமையைப் பெற்றுள்ளார். வேதாங்கி புனேயைச் சேர்ந்தவர். இங்கிலாந்தில்,  விளையாட்டு மேலாண்மை  பட்டப்படிப்பு படித்து வருகிறார்.  

சென்ற  ஜூலை மாதம்  சைக்கிளில்   ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரத்திலிருந்து தன்னந்தனியே தொடங்கிய பயணத்தை  சென்ற டிசம்பர் 23 -ஆம் தேதி  ஞாயிறு அன்று கொல்கத்தா நகரைச் சுற்றி வந்து  வேதாங்கி நிறைவு செய்துள்ளார். தினமும்  சுமார் முன்னூறு  கிலோ மீட்டர்  சைக்கிளில்  வேதாங்கி பயணம் செய்தது,  பிரதமர் மோடியின் பாராட்டையும் பெற்றுத் தந்திருக்கிறது.  

""பயணத்தின்போது  இடையூறுகள் இல்லாமல் இல்லை.  மனிதர்களாலும் மிருகங்களாலும்  தொல்லைகள் ஏற்பட்டன.  கனடாவில்  பயணிக்கும் போது கரடி துரத்திக் கொண்டு வந்தது. சைக்கிளை  படுவேகமாக அழுத்தி தப்பித்தேன். ரஷ்யாவில்  அடர்ந்த பனி போர்த்திய  இடங்களில் பல இரவுகளைக்  கழிக்க வேண்டி வந்தது.  ஸ்பெயின் நாட்டில்  கத்தியைக் காட்டி கையில் உள்ள பணத்தை  திருடன் தட்டிக் கொண்டு போனான்.  சைக்கிள் பயணம் பலவகையான  அனுபவங்களைத்  தந்தது. 

வெளிநாடுகளில் பயணிக்க விசா கிடைப்பதில் சிரமம் இருந்தது. அதனால் பயணம் செய்வதில் தாமதம் ஏற்பட்டது. அதனால் நூறு நாட்கள்  பயணம் என்பது 159  நாட்களாக நீண்டது.  124 நாட்களில்  இங்கிலாந்தைச் சேர்ந்த ஜென்னி கிரஹாம்  சைக்கிளில் 28,800கி.மீ பயணித்ததுதான் உலக சாதனை.  நான் தூரம் அதிகம் பயணித்திருந்தாலும், நாட்களின் எண்ணிக்கை அதிகமாகிவிட்டது. திட்டமிட்டது போல்  நடந்திருந்தால்,  புதிய உலக சாதனையை நிகழ்த்தியிருப்பேன். இந்தப் பயணத்திற்காக  திட்டமிட,  பொருத்தமான சைக்கிள் வாங்க  இரண்டு ஆண்டுகள் பிடித்தன. சைக்கிள் பயிற்சியும் செய்து கால்களுக்கு வலுவேற்றிக் கொண்டேன்.  பயணச்   செலவினை பெற்றோர் பார்த்துக் கொண்டனர்.  ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டிற்குச் செல்லும்போது  அவை  சாலைகளால்  இணைக்கப்படாதிருந்தால் விமானத்தில் சைக்கிளுடன் பயணிப்பேன். இந்தியாவில் மட்டும்  நான்காயிரம் கி.மீ. பயணித்துள்ளேன்.  உலகப் பயணத்தின் போது  மைனஸ்  இருபது டிகிரி செல்ஸியஸ் குளிரிலும், அதிக பட்சம் 37  டிகிரி  காலநிலையில் பயணித்திருக்கிறேன்.  நான் பயணிக்கும்போது அலை பேசியில்  பெற்றோர் தந்து வந்த உற்சாகம்தான்  இந்தப் பயணத்தை வெற்றிகரமாக முடிக்க உதவியது''  என்கிறார் வேதாங்கி குல்கர்னி.

More from the section

நகைக்கடை வைத்துள்ள காஜல் அகர்வால்
அரசியலில் ஆர்வமில்லை!
வாடகை தாய்மூலம் தாயான ஏக்தாகபூர்
அந்தமானில் பிரியங்கா சோப்ரா
திருமணம் நடிப்பை பாதிக்கவில்லை!