வைக்கோலும் வியாபாரமாகலாம்!

"சில நாட்களுக்கு முன்பு ஒரு பெண்மணி எங்கள் பயிற்சி நிலையத்திற்கு வந்தார். மிகவும் சோர்வாக இருந்தார். "என்ன விஷயம் சொல்லுங்கள்'' என்றதற்கு ஏதேனும் பிசினஸ் செய்ய வேண்டும்.
வைக்கோலும் வியாபாரமாகலாம்!

இல்லத்தரசிகளும் தொழில் முனைவோர் ஆகலாம்! 41
 
 "சில நாட்களுக்கு முன்பு ஒரு பெண்மணி எங்கள் பயிற்சி நிலையத்திற்கு வந்தார். மிகவும் சோர்வாக இருந்தார். "என்ன விஷயம் சொல்லுங்கள்'' என்றதற்கு ஏதேனும் பிசினஸ் செய்ய வேண்டும். ஆனால் நான் சின்னதாக பிசினஸ் பண்ண நினைத்து ஏமாந்து போனேன். அதனால் என் கணவர் "பிசினஸை செய்ய வேண்டாம் சும்மா இரு'' என்று கூறிவிட்டார். இருந்தாலும் வெற்றிகரமாக நாமும் ஏதாவது பிசினஸ் செய்ய வேண்டும். அதற்காகத்தான் இங்கு வந்தேன். நான் ஏதாவது பொருள் தயாரித்து விற்பனை செய்தாக வேண்டும், என் கணவருக்கு சப்போர்ட்டாக இருக்க வேண்டும்'' என்றார். "சரி, என்ன பிசினஸ் செய்தீங்க, எப்படி ஏமாந்து போனீங்க'' என கேட்டேன். அவர் மெழுகு வர்த்தி தயார் செய்ய ரூ. 100 கட்டணம், மேலும் பொருள் தயார் செய்தவுடன் அவர்களே வாங்கிக் கொள்வதாக கூறினார்கள். மிகவும் ஈஸியாக இருந்ததால் உடனே கற்றும் கொண்டேன். மெழுகுவர்த்தி செய்வதற்கான அச்சுகள் 3 மாடல்கள், மெழுகு, கலர் என சுமார் ரூ.10 ஆயிரம் முதலீடு என்றார்கள். சரி பரவாயில்லை மெழுகுவர்த்தி செய்தவுடன், அதை அவர்களே வாங்கிக் கொள்வார்கள் என எண்ணி நகையை அடமானம் வைத்து அச்சுகள் வாங்கி மெழுகுவர்த்தி செய்து அவர்களிடம் கொண்டுபோய் கொடுத்தால், இது சரியில்லை, அது சரியில்லை, என போகும்போதெல்லாம் ஏதாவது சொல்லி திருப்பி அனுப்பி விட்டனர். நான் மிகவும் சலித்து போய்விட்டேன். இதனால்தான் என் கணவர் எதுவும் செய்ய வேண்டாம் என்று சொல்லிவிட்டார் என்றார் அந்தப் பெண்.
 முதலில் எந்த தொழில் பற்றிய பயிற்சி எடுத்தாலும், அவர்களே பொருளை வாங்கிக் கொள்ளுவோம் எனக் கூறினால் சற்று யோசனை செய்யுங்கள். ஏன் அதை அவர்களே ஆள் வைத்து செய்து விற்பனை செய்ய முடியாதா? ஒரு பொருளை தயாரிக்கும்போது எடுத்த எடுப்பிலேயே நமக்கு ஃபினிஷிங் வந்து விடாது. ஃபினிஷிங் சரியில்லாத பொருளை பிறகு அவர்கள் எப்படி வாங்குவார்கள். முதலில் பயிற்சி பெற்றவுடன் தயாரிக்கும் பொருட்களை ஒரு மாதம் வரை பயிற்சியின்போது தயாரிக்கும் பொருள்களாகவே கருதி குறைந்த விலைக்கு விற்க வேண்டும். தெரிந்தவர்களுக்கு இலவசமாகக் கூட கொடுக்கலாம் . இது ஒரு விளம்பர உத்தி. பின்னர் பொருட்கள் நன்றாக ஃபினிஷிங் வந்த பிறகு மார்க்கெட் விலைக்கு தாராளமாக, தைரியமாக விற்கலாம்.
 மேலும் நாம் தயாரிக்கும் பொருளை விற்பதற்கு ஒருவரையே நம்பி இருக்கக் கூடாது. விற்பதற்கான இடம் ஏராளமாக இருக்கிறது. எங்கெங்கு தேவை இருக்கிறது என்று நாம்தான் கண்டுபிடிக்க வேண்டும். இதுபோலவே எந்த ஒரு தொழிற் பயிற்சி எடுத்தாலும் அதை செய்வது போன்று நினைத்துப் பாருங்கள், அதை எப்படி விற்பனை செய்வது என ஐடியா பண்ணுங்கள் நிச்சயம் வழி கிடைக்கும். இவ்வளவும் சொன்ன பிறகு வந்த பெண்மணியின் முகம் பிரகாசமாகியது. இதையாரும் எங்களுக்கு சொல்லித் தரவில்லையே'' என்றார். சரி, இந்த வாரம் என்ன கைத்தொழில் செய்யலாம் என பார்க்கலாம்'' என்கிறார் சுயதொழில் ஆலோசகர் உமாராஜ்.
 "அதாவது அதிக முதலீடு இல்லாமல் பார்ப்பதற்கு அழகாகவும், உடனே பரிசுப் பொருளாக கொடுப்பதற்கும், விற்பனை செய்யும் பொருளாக உள்ள வைக்கோல் வைத்து கைவினைப் பொருள் தயாரிக்கும் முறை பற்றி தெரிந்து கொள்வோம். இதற்கு தேவையான பொருள், பட்டுத் துணி அல்லது வெல்வெட் துணி ஒரு மீட்டர் போதுமானது. நன்கு காய்ந்த புதிதான வைக்கோல்.
 இந்த வேலையில் முக்கியமான மூலப்பொருள் வைக்கோல்தான். அறுவடையின் போது கிடைக்கும் வைக்கோல் இதற்கு ஏற்றது. ஒட்டுவதற்கு தேவையான கம், சாதாரண பைண்டிங் அட்டை. பிரேம் வேண்டுமானால் முழுவதும் செய்து முடித்த
 பின் போட்டுக் கொள்ளலாம். இதனை செய்வதற்கு கற்பனைத் திறனும், கலைத்திறனும் இருந்தால் போதும். பட்டு ( அ) வெல்வெட் துணியில் தேவையான வடிவம், டிசைன், இயற்கை காட்சிகள், கடவுள் வடிவங்கள் எதை வேண்டுமானாலும் வரைந்து கொள்ளுங்கள்.
 பின்னர், அதில் வைக்கோலை தேவையான அளவு சிறிது சிறிதாக வெட்டி, ஒட்ட வேண்டும். இப்போது ஸ்ட்ரா பிக்சர்ஸ் ரெடி. இதை செய்வது எளிது. இதன் விற்பனையும் எளிது. முதலில் பரிசுப் பொருளாக உபயோகப் படுத்துங்கள். பிறகு கைவினைப் பொருட்கள் விற்கும் கடைகளுக்கு சப்ளை செய்யலாம். இதனை சென்னையில் உள்ள குறளகம் மற்றும் மாமல்லபுரத்தில் உள்ள கைவினைப் பொருள்கள் அங்காடியில் பார்க்கலாம். பொருட்காட்சிகளில் கலந்து கொண்டும் விற்பனை செய்யலாம்.
 - ஸ்ரீ
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com