மூன்று வயதில் நடந்த அதிசயம்..!

திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது என்பார்கள். ஸ்ரீராம் ரஞ்சித் - ஆர்யஸ்ரீயின் திருமணம் மூன்றாம் வயதில் பள்ளியில் நிச்சயிக்கப்பட்டது
மூன்று வயதில் நடந்த அதிசயம்..!

திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது என்பார்கள். ஸ்ரீராம் ரஞ்சித் - ஆர்யஸ்ரீயின் திருமணம் மூன்றாம் வயதில் பள்ளியில் நிச்சயிக்கப்பட்டது என்று சொல்லலாம். அல்லது 26 - ஆம் வயதில் ஸ்ரீராம் ஆர்யஸ்ரீயை மறுமணம் செய்து கொண்டார் என்றும் சொல்லலாம். என்ன குழப்பமாக இருக்கிறதா..?
 மணமகன் ஸ்ரீராமின் அம்மா சந்தியா. மணமகளின் தாயார் மினி. சந்தியாவும், மினியும் ஒரே பள்ளியில் ஆசிரியைகளாகப் பணிபுரிந்து வந்தனர். அவர்கள் ஏறக்குறைய ஒரே சமயத்தில் கருவுற்றனர். ஸ்ரீராம், ஆர்யஸ்ரீ பிறந்து மூன்று ஆண்டுகள் ஆனதும் அதேப் பள்ளியில் நர்சரி வகுப்பில் சேர்ந்தனர். ஆண்டு விழாவின் போது "ஒரு ராணுவ வீரனின் திருமணம்' என்ற நாடகம் அரங்கேறியது. அந்த நாடகத்தில் ராணுவ வீரனாக நடித்தது ஸ்ரீராம். ஸ்ரீராமின் மணமகளாக நடித்தது ஆர்யஸ்ரீ. பார்வையாளர்கள் ஆசிர்வதிக்க நாடக மேடையில் திருமணம் நடந்தேறியது.
 வளர வளர, இந்த விளையாட்டு திருமணத்தை ஸ்ரீராமும் ஆர்யஸ்ரீயும் மறந்தே விட்டார்கள் என்பதுதான் உண்மை. ஆறாம் வகுப்பு வரை ஒன்றாகப் படித்த இந்த இருவரும் பிறகு கல்விக்காக வெவ்வேறு பள்ளிகளில் சேர ஸ்ரீராம் ஆர்யஸ்ரீக்கு நடுவில் இடைவெளி ஏற்பட்டது,
 ராணுவ போட்டி தேர்வு எழுதி ஸ்ரீராம் கேப்டனாக ஷில்லாங்கில் பணிபுரிய ஆரம்பித்தார். ஆர்யஸ்ரீ மருத்துவம் இறுதி ஆண்டு படித்துக் கொண்டிருந்தார்.
 அந்த சமயத்தில் ஸ்ரீராமிற்கு பால்ய திருமணம் குறித்து "பொறி' ஒன்று தெறித்து விழ... ஆர்யஸ்ரீயை சமூக வலைத்தளங்களில் தேட ஆரம்பித்தார். பலனில்லை. தன் நண்பன் ஒருவர் மூலமாக ஆர்யஸ்ரீயின் முகநூல் முகவரி கிடைக்க, "என்னை நினைவிருக்கிறதா..' என்ற கேள்வியுடன் பால்ய திருமண படம் ஒன்றையும் அனுப்பி வைத்திருக்கிறார். ஆனால் ஆர்யஸ்ரீயிடமிருந்து பதில் அஞ்சல் வரவில்லை. "சரி... ஆர்யஸ்ரீக்கு நினைவில்லை..' என்று நினைத்து ஸ்ரீராம் அமைதியாக இருந்து விட்டார். சில நாட்கள் இடைவெளியில் ஆர்யஸ்ரீயிடமிருந்து பதில் அஞ்சல் வர....
 ஸ்ரீராம் ஆனந்தத்தில் துள்ளிக் குதித்தார். அலைபேசி எண்களை பரிமாறிக் கொண்டு பேசிப் பழகினார்கள். ஆர்யஸ்ரீ மருத்துவப் படிப்பு முடித்து கொல்லத்தில் டாக்டராக சேர்ந்தார். ஸ்ரீராம் ஆர்யஸ்ரீயை நேரில் பார்க்க விடுப்பில் வந்தார். திருமணம் குறித்து வீட்டில் சொல்ல.. ஆரம்பத்தில் இரண்டு வீட்டாருக்கும் தயக்கம். ஆனால் விரைவிலேயே சம்மதம் தெரிவிக்க சமீபத்தில் திருமணம் கொச்சியில் நடைபெற்றுள்ளது.
 ஆம்..! சுமார் 22 ஆண்டுகள் கழித்து மீண்டும் ஸ்ரீராம் -ஆர்யஸ்ரீயைத் திருமணம் செய்து கொண்டுள்ளார். சிறுவயது நிகழ்ச்சி காதல் திருமணமாக பரிணமித்திருக்கிறது. பள்ளி நாடகத்தில் ராணுவ வீரனாக நடித்த ஸ்ரீராம் நிஜத்திலும் ராணுவ வீரராக மாறி, ஆர்யஸ்ரீயின் கரம் பிடித்திருப்பது ஒரு அபூர்வ பொருத்தம்தான்..!
 - பிஸ்மி பரிணாமன்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com