என் பிருந்தாவனம்! 4 - பாரததேவி

பட்டணத்துப் பெண்ணான கௌசிகா, கிராமத்து இளைஞனான தங்கராசுவை மணமுடித்து கிராமத்துக்கு வருகிறாள்.
என் பிருந்தாவனம்! 4 - பாரததேவி

சென்றவாரம்...
 பட்டணத்துப் பெண்ணான கௌசிகா, கிராமத்து இளைஞனான தங்கராசுவை மணமுடித்து கிராமத்துக்கு வருகிறாள். அவளுக்கு கிராமத்து சூழல் பிடிக்கவில்லை. தாய் வீட்டில் தினமும் பெட் காபி குடித்து பழக்கப்பட்டவளுக்கு கிராமத்தில் காபி கிடைக்காது, தினமும் காலையில் நீசு தண்ணீயும், மோரும்தான் குடிப்பார்கள் என்று அறிந்து, தனக்கு காபி வேண்டும் என்று கணவனிடம் அடம்பிடிக்கிறாள். இனி...
 
 தங்கராசு தன் தங்கையைத் தேடிப் போனான். திருகையில் வரகு திரித்துக் கொண்டிருந்த கமலா, "என்னண்ணே மாட்டுக்குத் தண்ணி விட்டுட்டயா? இன்னைக்கு வெள்ளனத்திலேயே அம்மா எறவைக்கு போவணுமின்னு சொன்னாளே'' என்றதும் அவன் தங்கையின் பக்கத்தில் உட்கார்ந்தான்.
 "என்னண்ணே உன் மொகமே சரியில்ல, என்ன ஆச்சு ?'' என்றாள் திரிப்பதை நிறுத்திவிட்டு.
 "கமலம் நீ எனக்கு ஒரு உதவி செய்யணும்'' என்று தங்கராசு வேண்டுதலோடு கேட்கவும் கமலாவுக்கு ஆச்சரியமாய் இருந்தது.
 நம் அண்ணனோட குரல் எப்பவும் "கெத்தா' இருக்குமே இப்ப என்ன இம்புட்டுக்கு கெஞ்சிக்கிட்டு இருக்கான் என்று நினைத்தவள். "சொல்லுண்ணே நானு என்ன உதவி செய்யணும்'' என்றாள்.
 "உன் மதினிக்கு காப்பி வேணுமாம். நீ அவளுக்கு ஒரு கிளாசு காப்பி போட்டுக் கொடு'' என்றதும் கமலத்துக்கு சிரிப்பாய் வந்தது.
 "அண்ணே காப்பி போடுதுக்குண்டான சீனி, காப்பித்தூள், தேயில, பால் அம்புட்டும் அடுப்படியிலேயே இருக்கு அவங்களாவே போட்டு குடிக்கச் சொல்லு இதுல என்ன என் உதவி வேண்டிக்கெடக்கு'' என்றாள்.
 தங்கராசுவிற்கு சற்று முன்னால் கௌசிகா தன்னிடம் படுக்கையில் கண் விழித்ததுமே தனக்குக் காப்பி வேண்டுமென்று அதட்டலாய் சொன்னதை நினைத்துக் கொண்டவன் .
 "நீ இப்ப என்கிட்ட ஒன்னும் கேக்காத கமலா, சீக்கிரம் காப்பி போட்டு படுக்கையில இருக்க உன் மதனிக்கு கொண்டு போய் கொடு'' என்று தங்கையை அவசரப்படுத்தினான்.
 திரிப்பதை நிறுத்திய கமலா என்னத்தையோ முணு, முணுத்துக் கொண்டே எழுந்து அடுப்படியை நோக்கிப் போனாள்.
 படுக்கையில் இன்னமும் கண்ணை மூடியவாறு சுகமாகப் படுத்திருந்த கௌசிகா கதவைத்திறக்கும் சத்தம் கேட்டு சற்றுமுன் கோபத்தோடு காப்பி கேட்ட தன்னை சமாதனப்படுத்த புருஷன் காப்பி போட்டுக் கொண்டு வந்திருக்கிறானோ? என்று கண்ணைத் திறந்தவளின் எதிரில் கமலா,
 "இந்தாங்க மதினி காப்பி, இந்த வீட்டுல யாருக்கும் காப்பி குடிக்கிற பழக்கமில்ல எல்லாரும் விடியக்காலயில நீசுத்தண்ணியும், மோருந்தேன் குடிப்போம். ஒரு காய்ச்ச, மண்டயிடின்னாத்தேன் அம்மா சுக்குமல்லி காப்பி போட்டுக் கொடுப்பா அடுப்படியில நீங்க காப்பி போடதுக்குண்டான எல்லாச் சாமானுமிருக்கு இனிமே தினமும் காப்பியப் போட்டுக் குடிச்சிக்கோங்க'' என்றவாறே காப்பியை கௌசிகாவிடம் நீட்டினாள்.
 காப்பியை வாங்கி ஒரு வாய் குடித்த கௌசிகா முகத்தை சுளித்தவள், "என்ன காப்பி போட்டு வந்திருக்கே? ஒரே புகை நாத்தம். இந்தா இதை நீயே குடி. குடிச்சிட்டுப் போயி எனக்கு ஸ்டவில காப்பி போட்டுக் கொண்டா'' என்றாள் ஒரு ஏவலோடு.
 கமலாவிற்கு கோபம் பொத்துக் கொண்டு வந்தது. நமக்கு அண்ணன் பொண்டாட்டியாக வந்து விட்டாளே போனாப் போகுதுன்னு நம்ம செஞ்ச கைவேலயப் போட்டுட்டு அதுவும் அண்ணன் சொல்லிட்டானேன்னு மெனக்கெட்டு காப்பி போட்டுக்கிட்டு வந்துக் கொடுத்தா அதுல நூறு நொர் நாட்டியம் சொல்லிக்கிட்டு இருக்கா. இனி அவளாச்சி, அவப் புருஷனாச்சி என்று நினைத்தவள்.
 " எனக்கு நிறைய வேல இருக்கு மதினி, நீங்களே உங்களுக்கு எப்படி காப்பி வேணுமோ, அப்படி போட்டு குடிச்சிக்கோங்க'' என்று சொல்லிவிட்டு விருட்டென வெளியேறிவிட்டாள்.
 கௌசிகாவின் மனதுக்குள் கோபம் ஒரு சுழிக்காற்றாய் வீசியது. இந்நேரத்துக்கு இதுவே அவள் வீடாயிருந்தால் இப்படி அவள் காப்பி வேண்டாமென்றதற்கு அவள் அம்மா இவளை தாங்கு, தாங்கென்று தாங்குவாள் அவள் குடிக்க மறுத்த காப்பிக்கு மாறாக டீ, பால், ஹார்லிக்ஸ் என்று விதவிதமாய் அவளைக் கெஞ்சி, கெஞ்சி குடிக்க வைப்பாள். ஆனால் இங்கே ஒரு நல்ல காப்பிக்கு கூட வழியில்லை.
 இவள் தங்கராசுவை கட்டிக் கொள்ள சம்மதித்தபோதே அவள் தோழிகள் எல்லாரும் சொன்னது ஞாபகத்துக்கு வந்தது.
 "ஏண்டி கௌசி, போயும் போயும் ஒரு பட்டிக்காட்டு மாப்பிள்ளையை கட்டிக்க சம்மதிச்சிருக்கயே உனக்கென்ன பைத்தியமாப் பிடிச்சிருக்கு'' என்று கேட்டபோது அவளுக்கு சுருக்கென்றது.
 "என்னடி இப்படி சொல்றீங்க, நீங்க அவரப் பாக்கல. அதான்''
 "பாத்திருந்தாமாட்டும்'' என்று ஒருத்தி கேலியாக கேட்க,
 "நீங்களும் அவரத்தான் கட்டிக்கிடுவேன்னு என் கூட போட்டிபோட்டு இருப்பீங்க. அவ்வளவு அழகு, அப்படி ஒரு கம்பீரம். அதுமட்டுமில்ல அவருக்கு முக்கியமா எந்த ஒரு கெட்ட பழக்கமுமில்லையாம் அதோட தென்னந்தோப்பு, மாந்தோப்புன்னு முப்பது ஏக்கர் வரைக்கும் புஞ்சைக வேற இருக்காம்''.
 "சரிடி எல்லாம் இருக்கட்டும். இருந்து என்ன செய்ய?''
 "பட்டிக்காட்டு மாப்பிள்ளைகளுக்கு ஒரு ரசனை, காதல்ன்னு எதுவுமிருக்காது. எப்பப் பார்த்தாலும் ஒரே வேல, வேலதான். ராத்திரி ஆனாக் கூட வீட்டுக்கு சாப்பிட வராம காட்டுலதான் கிடப்பாக. புதுசா கட்டுனப் பொண்டாட்டியக் கூட்டிக்கிட்டு ஜாலியா சினிமாவுக்குப் போனமா, ஒரு ஊட்டிக்குப் போனமா, சுத்திப்பாத்தமான்னு இருக்க மாட்டாக. இதையெல்லாம் யோசிச்சுப் பாக்காம அவசரப்பட்டுட்டயே கௌசி'' என்று அவர்கள் ஆதங்கப்பட்டபோது,
 "பட்டணத்தில் இருக்க மாப்பிள்ளைக மட்டும் என்ன வாழுதாம் எல்லா இளைஞர்களும் சினிமா கலாசாரத்தில் மூழ்கி, சிகரெட், குடின்னு அலையிறாங்க அவங்க பேச்ச கேக்கலேன்னா பொண்டாட்டின்னு கூடப் பாக்காம அரிவாள எடுத்து வெட்டுறாங்க, இல்லாட்டா ஆசிட்ட மூஞ்சியில ஊத்துறாங்க. போற போக்கப் பாத்தா. நம்மள மாதிரி பெண்கள் எல்லாம் இனிமே காதலும் வேண்டாம், கல்யாணமும் வேண்டாமின்னு அறவே கல்யாணத்த வெறுத்து ஒதுக்கிறலாமான்னுதான் தோணுது. அதனாலதான் நான் பட்டிக்காட்டு மாப்பிள்ளைக்கு சம்மதிச்சேன்''.
 "இருந்தாலும் உங்க வீட்டுல, நீ செல்லமா வளர்ந்தவ , இன்னும் உனக்கு ஒரு சுடு தண்ணி கூட வச்சி குளிக்க தெரியாது. அந்தப் பட்டிக்காட்டுல போயி என்ன செய்யவே?''
 "நானு ஒன்னும் செய்ய மாட்டேன். எல்லாரும் எனக்குதான் வேல செய்வாக அப்படி என் புருஷன்வீட்டு ஆளுகள மாத்துவேன் மாத்திக்காட்டுவேன்''.
 "சரி அப்படி அவுக மாறாட்டா?'' என்று கேட்டாள் கௌசிகாவின் உயிர் தோழியான கீதா.
 "நீ மட்டுமில்ல இங்கயிருக்க யாருமே என்னப்பத்தி கவலப்படாதீங்க ஏன்னா அவங்க என் வழிக்கு வராட்டா தங்கராசுவை, அதான் என் புருஷனை எங்க வீட்டொடு மாப்பிள்ளையா கூட்டிட்டு வந்துருவேன்'' என்று அவள் சொல்லவும்.
 "நீ பெரிய கெட்டிக்காரிடி செஞ்சாலும் செய்வே'' என்று எல்லாரும் கைத்தட்டி அவளைப் பாராட்டினார்கள்.
 இப்போது ஆறிய காப்பியோடு நின்றிருந்த கௌசிகாவிற்கு தோழிகள் சொன்னதெல்லாம் ஞாபகத்திற்கு வந்தது.
 நிஜமாகவே அவர்கள் சொன்னதுபோல் பட்டிக்காட்டு மாப்பிள்ளையை தேர்ந்தெடுத்து தன் வாழ்க்கையைப் பாழாக்கிக் கொண்டோமோ? என்று நினைத்து மனதிற்குள்ளேயே குமுறினாள். அதுவும் தன் வீடும், ஆட்களும் அறிமுகமேயில்லாமல் இருக்கும் தன் பொண்டாட்டி இந்நேரத்துக்கு என்ன செய்தாளோ, அவளுக்கான வசதியை தன் வீட்டுக்காரர்கள் செய்து கொடுத்தார்களோ? என்ற நினைப்பே இல்லாமல், இவன் ஒரு உதவாத, மிருகத்துக்கு பாசத்தோடு தண்ணீர் காட்டிக் கொண்டிருக்கிறானே என்று நினைத்தவளுக்கு அண்டா நெருப்புக்குள் இறங்கியது போலிருந்தது.
 "நம்ம தனியறைக்குள்ள இருக்கும்போது மட்டுமே என் பெயரைச் சொல்லி கூப்பிட வேண்டும் மத்த எடத்தில எல்லாம் கூப்பிடாத'' என்று தன் புருஷன் ஒருவித கெஞ்சலோடு தன்னிடம் சொன்னதையெல்லாம் அலட்சியத்தோடு உதறி எறிந்தவள் கோபமும், குமுறுலுமாக தங்கராசு என்றாள் சீற்றத்தோடு.
 - தொடரும்..
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com