ஒன்றல்ல. இரண்டல்ல. மொத்தம் 18 விருதுகளைப் பெற்று சாதனை படைத்திருக்கிறார் ஜி. ஆனந்தி. தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் 21-ஆவது பட்டமளிப்பு விழா, சென்னை வேப்பேரியில் உள்ள கால்நடை மருத்துவக் கல்லூரியில் டிசம்பர் 10 -ஆம் தேதி அன்று நடைபெற்றது. தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், "சிறந்த மாணவியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆனந்திக்கு 18 விருதுகளை வழங்கி வாழத்து தெரிவித்தார். இதில் அதிக மதிப்பெண்கள் எடுத்து பல்கலைக் கழகத்தில் முதலாவதாக வந்ததிற்கான விருதும் அடங்கும்.
ஆனந்தி படித்தது, தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு கால்நடை மருத்துவக் கல்லூரியில். அங்கு இளநிலை கால்நடை மருத்துவம் மற்றும் பராமரிப்பு படிப்பு படித்து வந்த ஜி.ஆனந்தி, 17 தங்கப் பதக்கங்களுடன் 18-ஆவது விருதாக பத்தாயிரம் ரூபாய் ரொக்கப் பரிசும் பெற்றுள்ள ஆனந்திக்கு 25 வயதாகிறது. .
ஆனந்திக்கு பதினெட்டு வயதிலேயே திருமணம் ஆகிவிட்டது. இருபதாவது வயதில் குழந்தைக்கும் தாயானார். முட்கள் நிறைந்த வாழ்க்கைப் பாதையில் ஆனந்தியின் உழைப்பு மட்டுமே பாதையில் மலர்கள் தூவியது. வழியில் எழுந்து நின்ற சவால்களை சமாளித்து சாதனைகளை புரிய வைத்தது. வாழ்க்கை ஆனந்தியின் லட்சியங்களை நிர்ணயம் செய்தது. ஆனந்தியின் சொந்த ஊர் நாமக்கல் மாவட்டத்தின் கொல்லிமலை.
"அப்பா லாரி ஓட்டுநர். மாதம் ஐயாயிரம் சம்பளமாகக் கிடைக்கும். குடும்பத் செலவுகளுக்கு அந்த சம்பளம் போதாது. தங்களது வாழ்க்கையைப் போன்று எனது வாழ்க்கையும் அமைந்துவிடக் கூடாது என்று என்னைத் தனியார் பள்ளியில் சேர்த்துப் படிக்க வைத்தார்கள். நான் பெற்றோருக்கு ஒரே வாரிசு. கூடுதல் வருமானத்திற்காக வீட்டில் ஆடு, கோழிகளை வளர்த்து வந்தோம். ஆனால் எங்களுக்குச் சோதனையாக திடீர் திடீரென்று நோய்கள் தாக்கி அவை இறந்துவிடும். ஊருக்குப் பக்கத்தில் கால்நடை மருத்துவமனை இல்லை. பக்கத்து நகரத்திற்கு ஆடு கோழிகளைக் கொண்டு செல்லவும் எங்களுக்கு வசதியில்லை. கால்நடைகளுக்கு மருத்துவ வசதி இல்லாததால் வளர்ப்பு ஆடுகள், கோழிகள் சாவதை என்னால் பார்த்துக் கொண்டிருக்கத்தான் முடிந்தது. அதனால் பள்ளியில் படிக்கும் போதே "கால்நடை மருத்துவம்' படித்து கால்நடைகளை நோய் நொடியிலிருந்து காப்பாற்ற வேண்டும் என்று தீர்மானித்தேன்.
கால்நடை மருத்துவராக வேண்டுமென்றால் நன்றாக படிக்க வேண்டும். அப்படிப் படித்தால்தான் தேர்வுகளில் உயர்ந்த மதிப்பெண்கள் எடுக்க முடியும். அதிக மதிப்பெண்கள் இருந்தால்தான் கால்நடை மருத்துவக் கல்லூரியில் படிக்க இடம் கிடைக்கும் என்ற புரிதல் இருந்ததால், ஆழமாகப் படித்தேன். சமர்ப்பணத்துடன் படித்ததால் பத்தாம், பன்னிரெண்டாம் வகுப்பில் அதிக மதிப்பெண்கள் கிடைத்தன. பத்தாம் வகுப்பு மதிப்பெண்களின் அடிப்படையில் ஊக்கத்தொகையும் இரண்டு ஆண்டுகளுக்கு கிடைத்தது.
பிளஸ் டூ தேர்ச்சி பெற்றதும்.. நல்ல வரன் கிடைத்ததால் எனது பதினெட்டாம் வயதில் திருமணமானது. கல்யாணமான இரண்டு ஆண்டுகளில் குழந்தையும் பிறந்தது. இந்த வாழ்க்கைத் திருப்பங்களால் எனது மேல் படிப்பு நடக்குமா? நடக்காதா? என்ற சந்தேகம் ஏற்பட்டது. திருமணத்திற்கு முன்பே கணவராக வருபவரிடம் எனது லட்சியத்தை கூறியிருந்தேன். அவரும் திருமணத்திற்குப் பிறகு படிக்க வைப்பதாய் ஒத்துக் கொண்டார். கால்நடை படிப்பிற்காக மனு செய்ததில், 2014-இல் ஒரத்தநாடு அரசு கால்நடை மருத்துவக் கல்லூரியில் படிக்க அனுமதி கிடைத்தது. என்னிடம் கொடுத்த வாக்குறுதியின் படி கல்லூரியில் என்னை சேர்த்து விட்டு கணவர் என்னை படிக்க வைத்தார். கணவருக்கு வேலை நாமக்கல்லில். முதலில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இப்போது அரசு போக்குவரத்து அலுவலகத்தில் உதவிப் பொறியாளராக நாமக்கல்லில் பணி புரிகிறார்.
அப்போதும் ஒரு பிரச்னை எழுந்தது. என்னுடன் மகள் இருக்கிறாளே..! யார் கவனிப்பது என்ற கேள்வி எழுந்தது. "நாங்கள் கவனித்துக் கொள்கிறோம் என்று என் பெற்றோர் முன் வந்தார்கள். அதனால் தஞ்சாவூருக்கு வந்தோம். புகுந்த வீட்டிலும் ஒத்துழைப்பு தந்தார்கள். தஞ்சாவூரில் கல்லூரி... படிப்பு... குழந்தை என்று நாட்கள் கடந்தன. குடும்பத்தில் நடக்கும் விசேஷங்களுக்கு வைபவங்களுக்கு கல்லூரி காரணமாக என்னால் போக முடியாது. எனக்கு தர்ம சங்கடமாக இருக்கும். ஆனால் உறவினர்கள் பெரும்பாலும் எனது சூழ்நிலையைப் புரிந்து கொண்டார்கள். ஒருமுறை கல்லூரி தேர்வின் போது கணவருக்கு உடல் நிலை சரியில்லாததால் மருத்துவமனையில் சேர்க்க வேண்டியதாகிவிட்டது. அவரது சுகவீனம் .. மருத்துவ சிகிச்சை குறித்து எனக்குத் தெரிவிக்க வேண்டாம் என்று கணவர் கூறிவிட்டாராம். அவர் உடல்நலம் தேறி வீட்டிற்கு வந்த பிறகுதான் நான் நடந்தவற்றை தெரிந்து கொண்டேன். படிப்பின் கடைசி ஆண்டின் போது மீண்டும் கருவுற்றேன். இரண்டாவதும் மகள்தான். பிறந்து ஐந்து மாதம் ஆகிறது.
குடும்பத்தினர் அனைவரது உதவி ஒத்துழைப்பு கிடைத்ததால்தான் என்னால் இத்தனை விருதுகளைப் பெற முடிந்தது. எல்லா விருதுகளையும் அவர்களுக்காக சமர்ப்பணம் செய்கிறேன்... பெரும்பாலான பெண்ணின் வாழ்க்கையில் திருமணம், குழந்தை என்று ஆகிவிட்டால் எல்லாம் முடிந்து விட்டது என்று நினைப்பார்கள்... நினைக்கச் செய்வார்கள். திருமணமாகி குழந்தை பிறந்த நிலையிலும், இறுதி ஆண்டில் இரண்டாம் முறை கருவுற்றிருந்த நிலையிலும், குடும்பத்தினர் தந்த ஊக்கத்தால் உதவிகளால் என்னால் சாதிக்க முடிந்தது.
விருதுகளை விழா மேடையில் ஆளுநர் வழங்க, பெற்றுக் கொண்டபோது எனது குடும்பம் ஆனந்தக் கண்ணீர் சொரிந்தது. நானும்தான். எனது ஐந்து வயது மகள் நான் பெற்ற விருதுகளை பார்த்துவிட்டு அவற்றை கரங்களில் ஏந்தி..
"நானும் அம்மா மாதிரி படித்து மெடல்கள் வாங்குவேன்' என்றாள். அந்த தருணத்தில் நான் மீண்டும் ஆனந்தக் கண்ணீர் வடித்தேன். எனது சாதனைகள் எனது மகளையும் வசப்படுத்தி ஒரு லட்சியத்தை அவளுக்குள் விதைத்திருக்கிறது. அதுதான் எனது உண்மையான வெற்றியாகக் கருதுகிறேன்'
நான் படித்து முடித்தவுடன் "ஆவின்' நிறுவனத்தில் வேலை கிடைத்து, நாமக்கல்லில் பணியாற்றி வருகிறேன். "கால்நடைக்கு மருத்துவம் பார்ப்பதா' என்று பலரும் இந்தப் பிரிவைத் தேர்ந்தெடுப்பதில்லை. அந்த அணுகு முறை மாற வேண்டும். வேலைக்கு உத்திரவாதம் இருப்பதால் தாராளமாக கால்நடை மருத்துவம் படிக்கலாம்'' என்கிறார் ஆனந்தி.
- பிஸ்மி பரிணாமன்