மகளிர்மணி

மனிதர்களிடம் பல கதைகள்!- இயக்குநர் மதுமிதா

11th Dec 2019 12:43 PM

ADVERTISEMENT

வல்லமை தாராயோ', "கொலை கொலையா முந்திரிக்கா' ஆகிய படங்கள் மூலம் தமிழில் அறிமுகமான பெண் இயக்குநர் மதுமிதா சுந்தரராமன், நான்காண்டு இடைவெளிக்குப் பின், தமிழுக்குப் புதுமையான கதையமைப்பு கொண்ட "கே.டி என்கிற கருப்பு துரை' மூலம் தமிழ் ரசிகர்களை பேச வைத்திருக்கிறார்.
 சென்னையில் பிறந்து இந்தோனேஷியாவில் வளர்ந்த மதுமிதாவுக்கு இந்த ஆர்வம் எப்படி ஏற்பட்டது என்பதை விளக்குகிறார்:
 "நான் வெளிநாட்டில் வளர்ந்தவள் என்றாலும் எனது பெற்றோர் என்னைத் தமிழ்ப் பெண்ணாகவே வளர்க்க விரும்பினர். பாட்டு மற்றும் பரதநாட்டியம் கற்க வைத்தனர். வீட்டிலேயே தமிழ் கற்றுக் கொடுத்தனர். நான் ஆலிவுட் படங்களை மட்டுமின்றி இந்தியாவில் பிரபலமான இயக்குநர்களின் படங்களை விரும்பி பார்ப்பேன். கூடவே இளைய ராஜா, ஏ.ஆர். ரகுமான் இசையமைத்த பாடல்களை கேட்பேன். அதனால் திரைப்படத்துறையில் எனக்கிருந்த ஆர்வம் அதிகரித்தது. அம்மா என்னை டாக்டருக்குப் படிக்க வைக்க ஆசைப்பட்டார். ஆனால் எனக்கு ரத்தத்தைக் கண்டாலே மயக்கம் வந்துவிடும். அவ்வளவு பயம். அதனால் மருத்துவத்துறை எனக்கு ஒத்துவராது என்று நிராகரித்துவிட்டேன்.
 சிங்கப்பூரில் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தபோது, "அப்ஸ்டிராக்ட் ஐடென்டிடி' என்ற தலைப்பில் இரண்டு நிமிடங்களே ஓடக்கூடிய குறும்படம் ஒன்றை தயாரித்தோம். இந்தியப் பெண்கள் தங்கள் பாரம்பரிய நடைமுறைகளை தொடர்ந்து கடைபிடித்து வருவதை விளக்கும் இப்படத்திற்கு பிபிசி உலகில் சிறந்தது என்ற வரிசையில் விருது வழங்கியது. இரண்டாவது குறும்படத்தில் இந்தியாவில் மாதவிலக்காகும் பெண்கள் எப்படி ஒதுக்கி வைக்கப்படுகிறார்கள் என்பதை விளக்கியிருந்தேன்.
 பின்னர் நியூயார்க் ஃபிலிம் அகாதெமியில் சேர்ந்து இயக்குநர் பயிற்சிப் பெற்றேன். அப்போது சர்வதேச அளவில் பிரபலமான படத்தயாரிப்பு குழுவினருடன் சேர்ந்து பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது. அவர்கள் தயாரித்து வந்த "பைரட்ஸ் ஆஃப் தி கரிபியன்-3' என்ற படத்தில் நான் பணியாற்றியதை விட எப்படி தயாரிக்கிறார்கள் என்பதையே அதிகமாக கவனித்தேன். படத் தயாரிப்பின்போது எப்படி ஒருங்கிணைந்து பணி செய்ய வேண்டும் என்பதோடு, தொழில் நுட்பத்தையும், ஒழுக்கத்தையும் இது எனக்கு கற்றுத் தந்தது. பெரிய அனுபவமாகவும் இருந்தது. பின்னர் சென்னை திரும்பியவுடன் சுயமாக கதைகளை உருவாக்க விரும்பினேன். சில சமயங்களில் திரைப்படங்களை பார்க்கும்போது கூட, புதிய கருக்களை கற்பனை செய்ய முடிந்தது. நல்ல வலுவான, திறமையான திரைப்படங்களை பார்க்கும்போது இதைவிட சிறப்பாக செய்யலாமே என்ற எண்ணம் தோன்றும்.
 எனக்கு மனிதர்களை கவனிப்பது மிகவும் பிடிக்கும். என்னுடைய கதைகளில் ஒருவருக்கொருவர் தொடர்புடைய உறவுகளை வெளிப்படுத்த நினைத்தேன். கூடவே எளிமையான கதையும் நகைச்சுவையும் கலந்தால் நல்லது என்பதால் படித்தவை, பார்த்தவைகள் மூலம் சம்பவங்களை உருவாக்க நினைத்தேன். அந்த சமயத்தில்தான் வயதானவர்களை கிராமங்களில் எப்படி கொல்கிறார்கள் என்ற உண்மை சம்பவமொன்றை படிக்க நேர்ந்தது. "எத்து நாசியா' என்ற முறையில் வயதானவர்களை அளவுக்கு மீறி மசாஜ் செய்வது போன்ற டெக்னிக்குகளை பயன்படுத்தி கொல்வதாக குறிப்பிட்டிருந்தது. இதுபோன்ற சம்பவத்தில் பாதிக்கப்பட்ட வயோதிகர் ஒருவர், வீட்டிலிருந்து தப்பிச்சென்று தன்னை தன் குடும்பத்தினர் சொத்துக்காக கொலை செய்ய முயற்சிப்பதாக போலீசில் புகார் செய்கிறார்.
 இதை படித்ததும் இது போன்ற சம்பவங்கள் உண்மைதானா? என்று கண்டறிய நான் ஆய்வு செய்தபோது இதுபோன்று நடப்பது தெரிய வந்தது. இந்த கொடூரமான கொலைகள் சமூகத்தில் நடப்பதை எப்படி வெளிப்படுத்துவது என்ற தயக்கம் இருந்தாலும், இதுவரை நான் கெட்டிராத சம்பவமாகவும், ஒருவரது மரணத்தை இவ்வளவு சுலபமாக செய்து மனித உயிரை மாய்ப்பதற்கு உரிமை இல்லை என்றும் தோன்றியதால், இச்சம்பவத்தை திரைக்கதை அமைத்தேன்.
 அந்த சமயத்தில் படுத்தப் படுக்கையில் இருந்த என்னுடைய 94 வயது தாத்தா, தன்னை இந்தோனேஷியா அழைத்துச் செல்லும்படி கேட்டார். வாழ்க்கையின் இறுதி கட்டத்தில் உள்ள வயோதிகர்கள் மனதில் தோன்றும் அக காட்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள் என்பதை உணர்ந்தேன். என்னுடைய ஆய்வின்போது பல வயோதிகர்களிடம் பேசியபோது, அவர்களுக்கும் இதுபோன்ற ஆசைகள், சிறுவயது நினைவுகள் தோன்றுவதாக கூறியது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. இதன்பிறகுதான் இச்சம்பவத்தை சற்று வித்தியாசமாக வெளிப்படுத்த நினைத்தேன். ஒரு வயோதிகர் தன் வாழ்க்கையில் செய்ய நினைப்பதை, ஒரு எட்டுவயது சிறுவன் செய்து தர உதவுவதாக கதையை அமைத்தேன். நான் சந்தித்த பல மனிதர்களிடம் இதுபோன்ற பல வித்தியாசமான கதைகள் இருப்பதை கேட்டறிந்தேன்.
 அடுத்து இந்தியில் ஒரு படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. நல்ல வலுவான சமூக உறவுகளை பிரதிபலிக்கும் இக்கதையை தயாரிக்க சிலர் முன் வந்துள்ளனர். "கே.டி' படத்தை இந்தியில் ரீமேக் செய்யும் எண்ணமும் உள்ளது. இதற்கிடையில் தெலுங்கு படமொன்றையும் இயக்க உள்ளேன்'' என்றார் மதுமிதா.
 - பூர்ணிமா

ADVERTISEMENT
ADVERTISEMENT