மகளிர்மணி

இந்தியாவின் முதல் திருநங்கை செவியர்!

11th Dec 2019 01:10 PM

ADVERTISEMENT

தூத்துக்குடியைச் சேர்ந்த திருநங்கையான அன்பு ரூபி செவிலியர் படிப்பை திறம்பட முடித்து நாட்டின் முதல் திருநங்கை செவிலியர் என்ற பட்டத்தோடு தற்போது அரசு பணியில் சேர்ந்துள்ளார். தான் கடந்து வந்த பாதை குறித்து பேசத் தொடங்கினார் அன்புரூபி:
 "தூத்துக்குடி மாவட்டம், சாயர்புரம் அருகேயுள்ள சேர்வைகாரன்மடம் என்ற சிறிய கிராமத்தில் பிறந்த எனக்கு பெற்றோர் வைத்த பேர் அன்புராஜ். தந்தை ரத்தினபாண்டி பார்வையற்றவர். தாய் தேன்மொழி வாழைத் தோட்டத்தில் கூலித் தொழிலாளியாக வேலைபார்த்து என்னை படிக்க வைத்தார். வீட்டின் ஒரே பிள்ளையாக வளர்ந்த எனக்கு பள்ளி பருவ வயதில் உளவியல் மாற்றமும், உடல் ரீதியான மாற்றமும் நிகழத் தொடங்கியது. திருநங்கையாக மாறிய பிறகு அன்புராஜ் என்ற எனது பெயரை அன்பு ரூபி என மாற்றிக் கொண்டேன்.
 பிளஸ் 2 முடித்த பிறகு திருநெல்வேலியில் உள்ள தனியார் செவிலியர் கல்லூரியில் 3 ஆண்டு படிப்பை தேர்வு செய்தேன். இரண்டாம் ஆண்டு படிக்கும்போது தந்தையை இழந்தேன். தாய் தேன்மொழியின் அரவணைப்பே என்னை மேலும் படிக்க வைத்தது. தொடர்ந்து மருத்துவமனை மேலாண்மை என்ற இரண்டாண்டு படிப்பை முடித்தேன்.
 கல்லூரி பருவத்தில் உள்ளுரிலும், வெளியிடங்களிலும் சமூக ரீதியாக பல தடைகள், இன்னல்களை சந்தித்து தற்போது செவிலியர் பணிக்கு வந்துள்ளேன்.
 திருநங்கை என்பதற்காக எந்தவித முன்னுரிமையும் பெறாமல் பெண்கள் பிரிவில் அரசு பணிக்கான தேர்வை எழுதி அதில் வெற்றி பெற்று தற்போது நாட்டின் முதல் திருநங்கை செவிலியர் என்ற பெருமையை பெற்றுள்ளேன். சொந்த மாவட்டமான தூத்துக்குடிக்கு பணி நியமன ஆணை வழங்க வேண்டும் என சுகாதாரத் துறை அமைச்சரிடமும், முதல்வரிடமும் கோரிக்கை வைத்தேன். அவர்கள் அதை நிறைவேற்றித் தருவதாக உறுதியளித்துள்ளனர்.
 தங்களது பிள்ளை திருநங்கை என தெரிந்தவுடன் பெற்றோர் புறக்கணிப்பதே அவர்களை தவறான பாதைக்கு அழைத்துச் சென்றுவிடுகிறது. பெற்றோர்களின் அரவணைப்பும், ஆறுதலும் இருந்தால் திருநங்கைகளால் உயர்ந்த நிலையை அடைய முடியும் என்பதற்கு நானே ஒரு எடுத்துக்காட்டு'' என்றார் அன்பு ரூபி.
 - தி. இன்பராஜ்

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT