ஈரோடு-பெருந்துறை சாலையில் ஈரோடு அரசு மருத்துவமனை சுற்றுச்சுவர் அருகில் சாலையோர நடைபாதையில், 40 வயதைக் கடந்த மன நலம் பாதிக்கப்பட்ட நபரை அமர வைத்து, மொட்டைபோட்டு, சேவிங் செய்து, குளிக்க வைத்து புதுத்துணி வாங்கிக்கொடுத்து உடுத்தி, அவரை புது மனிதாக மாற்றிவிட்டிருந்தார் ஓர் இளம்பெண்.
புதுத்துணி உடுத்தி அமரவைக்கப்பட்டிருந்த சீனிவாசன்(மன நலம் பாதிக்கப்பட்டவரின் பெயர்), சற்று நேரத்தில், "மேடம் என்னை விடுங்க நான் ஜி.எச் போக வேண்டும்' என்கிறார். அங்கு எதுக்கு சார்? என்கிறார் அந்த இளம்பெண், மேடம் அங்கு தான் என் பைகள் இருக்கிறது, யாராவது தூக்கிட்டுப் போயிருவாங்க, "சார் நீங்க இங்கேயே இருங்க, நம் நண்பர்கள் போய் எடுத்துட்டு வருவாங்க' என்கிறார் இளம்பெண், இல்லை "மேடம் நான் தான் போக வேண்டும்' என்கிறார் சீனிவாசன், நீங்க சிரிச்சிங்கன்னா தான், உங்களை அழைத்துச்செல்வேன் என்கிறார் அந்த இளம்பெண், இதன்பிறகு சீனிவாசன் சிரிக்கிறார். உடனடியாக அவரை அழைத்துக்கொண்டு அரசு மருத்துவமனைக்கு சென்று, அங்கிருந்த சீனிவாசன் உடைமைகளை எடுத்துக்கொண்டு, அவரை அழைத்துக்கொண்டு மீண்டும் அதே இடத்திற்கு வருகிறார் அந்த இளம்பெண்.
10, 15 நிமிடங்கள் நடந்த நிகழ்வை நாம் பார்த்துக்கொண்டிருந்தபோது, அந்த சாலையில் உள்ள கடைக்காரர்கள் சிலர், பரட்டைத் தலையும், தாடியுமாக, அழுக்கடைந்த கிழிந்த பேண்ட், சட்டையை போட்டுக்கொண்டு இந்த சாலையில் திரிந்த மனநலம் பாதிக்கப்பட்ட நபரையா? புது மனிதாக மாற்றிவிட்டிருக்கிறார் இந்தப் பெண். பல மாதங்களாக அந்தக் கோலத்தில் பார்த்த சீனிவாசனை, புதிய தோற்றத்தில் பார்க்க அடையாளம் தெரியவில்லை என்றனர்.
இந்த நேரத்தில் தான், அவரை பார்த்து நாம் அறிமுகப்படுத்திக் கொண்டோம், கொங்கு மண்ணின் அன்பான உபசரிப்போடு பேசத் தொடங்கினார்.
"என்னுடைய பெயர் மனிஷா, சொந்த ஊர் ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி. பெற்றோர் கிருஷ்ணசாமி-கீதா. நான் சிறுவயதாக இருக்கும்போதே ஈரோடு சூரம்பட்டிக்கு குடிவந்துவிட்டனர். பெற்றோர் இறைச்சிக்கடை வைத்துள்ளனர்.
என்னுடைய பள்ளி, கல்லூரி படிப்பு ஈரோட்டில் தான். பிஎஸ்சி நர்சிங் படிச்சிருக்கேன், ஈரோடு நந்தா செவிலியர் கல்லூரியில் விரிவுரையாளராக வேலை செய்கிறேன்.
சின்ன வயதில் ராணுவ சேவைக்குப் போகணும்னு ஆசை. பெண் பிள்ளைக்கு ராணுவப்பணி வேண்டாம் என வீட்டில் கண்டிப்போடு சொல்லிட்டாங்க, இதனால் பிளஸ் 2 முடிச்சதும் நர்சிங் தேர்ந்தெடுத்தேன். நர்சிங் படிக்கிறவங்களை அரசு மருத்துவமனைக்குப் பயிற்சிக்கு அனுப்புவாங்க. அங்கே நோயாளிகள் நடத்தப்படும் விதத்தை பார்த்து பல நேரங்களில் அழுது இருக்கிறேன். சிகிச்சைக்கு வரும் மக்களிடம் முகம்கோணாமல் நாலு வார்த்தைப் பேசினாலே போதும். நம்மைக் கடவுளாக பார்ப்பாங்க. நான் அதைப் பின்பற்ற ஆரம்பிச்சேன். அதனால் அந்த மக்களிடமிருந்து கிடைத்த அன்பு, சந்தோஷத்தைக் கொடுத்தது. அதுதான் என் சேவையின் ஆரம்பம்.
ஒருநாள் தஞ்சாவூரில் முதியவர் ஒருவர் ஆதரவற்ற நிலையில் இருக்கார். அவருக்கு உதவி வேண்டும்னு கட்செவி அஞ்சலில் ஒரு வீடியோ வந்துச்சு. அதைப் பார்த்ததுமே என்னை அறியாமல் அழுதுட்டேன். அவர் உடம்பு முழுக்க ஈ மொய்த்திருக்க, ஒல்லியான உடல்வாகு. பக்கத்திலேயே அவரோட கழிவுகள்னு மனது வலித்தது. உடனடியாக தஞ்சாவூருக்குப் போனேன். மக்களில் யாரும் அவர்கிட்ட நெருங்கவே தயாரா இல்லை. நானே பக்கத்தில் போய் சுத்தப்படுத்தி, முதலுதவி செஞ்சு, சாப்பாடு வாங்கிக்கொடுத்தேன்.
காப்பகத்துக்கு கூட்டிட்டுப் போக நினைச்சப்போ, காரில் ஏத்திக்கக்கூட பலரும் மறுத்தார்கள். மனிதாபிமானம் உள்ள காவல்துறை அதிகாரிகளின் உதவியோடு, முதியவரைக் காப்பகத்தில் சேர்த்தேன். இது தெரிஞ்சதும் என் வீட்டில் என்னை கண்டித்தனர். எல்லோருமே தங்களுடைய சுகத்தை மட்டுமே பார்த்துட்டு ஒதுங்கிட்டா, யார்தான் சமுதாயத்துக்கு வேலை பார்க்கிறது? யார் எதிர்த்தாலும் இதை தொடர்ந்து செய்யறதுன்னு உறுதியா இருந்தேன். இப்போது என்னுடைய தொடர் பணியை பார்த்து பெருமைப்படுகின்றனர்.
என் ஊதியத்தில் அடிப்படைத் தேவை போக, மீதியை ஆதரவற்றவர்களுக்காகச் செலவழிக்க ஆரம்பிச்சேன். கடந்த 2 ஆண்டுகளில் 150 மனநலம் பாதிக்கப்பட்டவர்களை மீட்டு, அவர்களை ஆறுதல்படுத்தி, காப்பகங்களில் சேர்த்து விட்டிருக்கிறேன். தனி நபராக இப்பணியை செய்வது எளிதல்ல. இதனால் நண்பர்களின் உதவியை நாடினேன். இப்போது என் நண்பர்கள் பலரும் உதவி செய்ய முன்வருகிறார்கள்.
இதனைத்தொடர்ந்து அண்மையில் "ஜீவிதம் பவுண்டேசன்' என்ற பெயரில் அறக்கட்டளையை தொடங்கி இப்பணியை செய்து வருகிறேன். இந்த அறக்கட்டளையில் இதுவரை 100 பேர் வரை இணைந்துள்ளனர். இந்தப் பணியில் பல போராட்டங்கள் இருந்தாலும் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் வாழ்க்கையை மாற்றியிருக்கோம்கிற மனநிறைவு கிடைச்சிருக்கு. பாதிக்கப்பட்டவங்களை என் அம்மா, அப்பாவாகத்தான் பார்க்கிறேன். அவங்களும் என்னை குழந்தையாகத் தான் பார்க்கிறார்கள். தீபாவளி, பொங்கல் மாதிரியான நாள்களை அவங்களோடுதான் கழிக்கிறேன். ஏமாற்றங்களால் சோர்ந்திருந்த அவங்க வாழ்க்கை, இப்போ அன்பால நிறைய ஆரம்பிச்சுருக்கு.
இனிவரும் காலங்களில் முதுமை வெறுப்பை தவிர்க்க என்ன செய்ய வேண்டும். முதுமையில் பெற்றோரை தவிக்கவிடும் மன நிலையை மாற்றும் முயற்சி, சாலைகளில் அடைக்கலம் அடைந்துள்ள ஆதரவற்றவர்கள் என்ன காரணத்தால் வீட்டை விட்டு வெளியேறுகின்றனர், அல்லது வெளியேற்றப்படுகின்றனர் போன்ற அம்சங்கள் குறித்து, ஈரோடு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் ஆய்வு நடத்த முடிவு செய்துள்ளோம்.
இதன் அடிப்படையில் பள்ளி, கல்லூரி மாணவர்களுடன் விழிப்புணர்வை ஏற்படுத்த திட்டமிட்டுள்ளோம். அன்பு ஒன்று தான், அனைத்து பிரச்னைகளுக்கும் தீர்வு நோக்கி செல்லும் பாதை என்பதை அனைவரும் உணர வேண்டும். அப்போது தான், ஆதரவற்றோர் சாலைகளில் சுற்றித்திரியும் நிலை மாறும் என்கிறார் 22 வயதே ஆன மனிஷா.
- கே.விஜயபாஸ்கர்