மகளிர்மணி

தோட்டம் அமைக்கலாம்  வாங்க... தோட்டத்தை தாக்கும் பூச்சிகளை கட்டுப்படுத்த...!

28th Aug 2019 06:44 PM

ADVERTISEMENT


ஆரோக்கியமான தோட்டத்திற்கு மண் புழுக்களும், மூடாக்கும் அவசியமான ஒன்று என சென்ற இதழ்களின் மூலம் தெரிந்து கொண்டோம். என்னதான் பார்த்து பார்த்து செடிகளை வளர்த்தாலும் பூச்சி மற்றும் செடிகளை தாக்கும் நோய்களைக்கண்டாலே பலருக்கு தோட்டம் அமைக்கும் எண்ணமே பெரும் சவாலான ஒன்றாக இருக்கும்.

இலைகள் மஞ்சள் நிறமாக மாறுவது, செடிகளின் பச்சை தன்மை மறைவது, செடிகளில்  இருக்கும் நீர் சத்துகளை உறிஞ்சுவது, அதனால் செடிகள் மடிவது, இலைகள் சுருள்வது, பூச்சிகள் இலைகளை திண்பது, இலைகளில் முட்டைகள் இடுவது அதனால் செடிவளர்ச்சி குன்றுவது, புழு பூச்சிகள் தண்டுகளில் ஊடுருவி செடிகளை தாக்குவது, இலைகள் வெளிர் நிறமாக மாற நரம்புகள் மட்டும் இருப்பது, வேர்கள் அழுகுவது என பூச்சிகள் மற்றும் நோய்தாக்குதலால் ஏற்படும் பாதிப்புகள் ஏராளம் தான்.. ஆனால் இவற்றிற்காக நாம் அஞ்ச வேண்டியதில்லை.. 

செடிகளை தாக்கும் பூச்சிகளும், நோயை வரவழைக்கும் கிருமிகளும் எல்லா இடங்களிலும் தான் உள்ளது. அதற்காக பயப்படத் தேவையில்லை. 

எந்தெந்த செடிகளுக்கு பூச்சிகளையும், நோய்களையும் தாங்கும் திறன் குறைவாக உள்ளதோ அந்த செடிகளைத்தான் இவையெல்லாம் தாக்குகிறது. அதுயென்ன செடிகளுக்கு திறன் என்கிறீர்களா? விதையில் தொடங்கி  மண் வளம், ஊட்டச்சத்து, உரம் மேம்பாடு, பட்டம், நீரிடுவது என பல விஷயங்களை உள்ளடக்கி அவற்றை காலநேரத்திற்கு ஏற்ப செடிகள் வெளிப்படுத்துவதையே செடிகளின் திறன் என்கிறோம். 

ADVERTISEMENT

செடிகளின் திறன் முதலில் தொடங்குமிடம் செடிகளுக்கு ஆதாரமான விதைகளில். இன்று பல வகையான விதைகள் நடைமுறையில் உள்ளது என முந்தைய இதழ்களில் பார்த்தோம். மலட்டு விதைகள், வீரிய  ஒட்டுரக விதைகள், மரபணு மாற்றப் பட்ட விதைகள், பாரம்பரிய நாட்டுரக விதைகள் என பல விதைகள் இன்று புழக்கத்தில் உள்ளது. அவற்றில் பாரம்பரிய விதைகளை தவிர மற்ற விதைகள் செயற்கையாக மனிதர்களின் ஊடுருவலால் உருவாக்கப்பட்ட விதைகள். இவை அதிக விளைச்சலுக்காக மட்டுமே உருவாக்கப்படும் விதைகள். இவற்றிற்கு இயற்கையாகவே பூச்சிகளிடமிருந்து தன்னை பாதுகாக்கும் வல்லமை குறைவு. அதோடு நோயிலிருந்தும் தற்காத்துக்கொள்ளும் திறனும் குறைவு. அதனால் பொதுவாகவே ஒட்டு ரக விதைகளிலிருந்து  பெறப்படும் செடி, காய்களை பூச்சி மற்றும் நோய்கள் எளிதாக தாக்கும்.

நாற்பது வருடங்களுக்கு முன் வரை அதாவது இந்த நவீன விதைகளின் ஆதிக்கம் இல்லாத காலங்களில் பூச்சியையும், நோயையும் எளிதாக இயற்கையாக  நமது முன்னோர்கள் கட்டுப்படுத்தினர். காரணம் அன்று பெரும்பாலும் புழக்கத்திலிருந்தவை நமது நாட்டு விதைகள். இவற்றிற்கு இயற்கையாகவே பூச்சிகளையும் நோயையும் தாங்கி வளரக்கூடிய தன்மையுள்ளது. இவ்வகை நாட்டுவிதைகள் குறைந்து நவீன ஆதிக்கம் அதிகரித்ததாலேயே இன்று பூச்சிக்கொல்லிகள், களைக் கொல்லிகள் என பல வகையில் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் ரசாயனங்கள் பெருகிவிட்டது. இவற்றை தவிர்த்து நம் மண்ணிற்கும், நமது சுற்றுசூழலுக்கும், நமது உடலுக்கும் ஏற்ற நாட்டுவிதைகளை பயன்படுத்தி செடிகளை வளர்ப்போமானால் பூச்சிகளை எளிதாகவே கட்டுப்படுத்தலாம். இயற்கையான வகையில் தயாரிக்கப்பட்ட உரங்களையும், வளர்ச்சி ஊக்கிகளையும் பயன்படுத்தினாலே மண்ணையும் செடிகளையும் செழிப்பாகவும், பூச்சி, நோய் தாக்குதலில் இருந்தும் எளிதாக பாதுகாக்கலாம்.

முதலில் நாம் பூச்சிகளை நமது செடிகளிடமிருந்து காக்க சில குளவி, தட்டான், பொறிவண்டு, சிலந்தி போன்ற நன்மை செய்யும் பூச்சிகளை வரவழைக்கவேண்டும். இவை நமது தோட்டத்தில்  இருக்க அல்லது அவ்வப்பொழுது வந்து செல்வதால்  அஸ்வினி, மாவு பூச்சி போன்ற செடிகளை சேதப்படுத்தும் பூச்சிகளை இவை தின்று நமது தோட்டத்திற்கு நன்மை செய்யும். அதோடு பறவைகள் வந்து செல்ல அவற்றிற்கு உணவு, நீர் போன்றவற்றையும் நமது தோட்டத்தில் வைக்க அவற்றை உட்கொள்ள வரும் பறவைகள் செடிகளை தின்னும் பூச்சிகளையும் தின்று நமக்கு பாதுகாப்பான தோட்டத்தை வழங்கும்.

பூச்சிகளை ஈர்க்கக்கூடிய சில வகையான மஞ்சள் நிற பூக்கள் பூக்கும் செடிகளை நமது தோட்டத்தில் ஆங்காங்கே வைப்பது சிறந்தது. பூச்சிகள் இந்த செடிகளின் மீது ஈர்க்கப்படும் பொழுது மற்ற செடிகளில் சேதம் ஏற்படுத்தாது. இதனால் பெருமளவு பூச்சிகளின் தாக்கத்தை  கட்டுப்படுத்த முடியும். நமது காய், கீரை செடிகளை பூச்சிகளின் தாக்கத்திலிருந்து பெரிய அளவில் கட்டுப்
படுத்த முடியும்.

அதேபோல் பூச்சிகளுக்கு பிடிக்காத மணத்தை வரவழைக்கும் செடிகளையும் நமது தோட்டத்தில் வைக்க பூச்சிகள் ஓடியே ஓடி விடும். அது என்ன செடிகள் என்கிறீர்களா?  மூலிகை செடிகள் தான்.  துளசி, கற்றாழை, திருநீற்றுப்பச்சிலை, கற்பூரவள்ளி போன்ற செடிகளை வளர்ப்பதுதான். இவற்றை வளர்ப்பதால் பல நன்மைகள் நமக்கு ஏற்படும். பொதுவாகவே பூச்சிகளுக்கு இவற்றின் (மூலிகை செடிகளின்) வாசனை பிடிக்காது. அதனால் பூச்சிகள் நமது தோட்டத்திற்கு வருவது குறைந்துவிடும், வந்தாலும் ஓடிவிடும். நாமும் மருந்தாக ஒவ்வொரு நாளும் பயன்படுத்திக் கொள்ளலாம். இதனால் பல பல நன்மைகள் ஏற்படும். 

மண்ணிற்கு வளத்தை சேர்க்கும் பஞ்சகவ்யா, அமிர்தக்கரைசல், ஜீவாமிர்தம் போன்ற இயற்கை நொதிக்கலவைகள் செடிகளை தமது நுண்ணுயிர்களால் நோய்களிலிருந்து காப்பதுதான் சீரான செழிப்பான வளர்ச்சியையும் அளிக்கிறது. 

செடிகளை சரியான பட்டத்தில் சரியான முறையில் மண்வளமிக்க உயிர் மண்ணில் (மேல் மண் என்று சொல்லக்கூடிய மண்ணில்) இயற்கை உரக்கலவைகளுடன் கலந்து விதைத்து சீராக பராமரித்தால் பூச்சிகள் மற்றும் நோயிலிருந்து எளிதாக பாதுகாக்கலாம். 

(தொடரும்)

ADVERTISEMENT
ADVERTISEMENT