மகளிர்மணி

சமையல்! சமையல்! குழம்பு  ஸ்பெஷல்!

28th Aug 2019 06:27 PM | - முத்தூஸ், தொண்டி. 

ADVERTISEMENT


மணத்தக்காளி அப்பளக் குழம்பு  

தேவையானவை: 

மணத்தக்காளி வத்தல் -ஒரு கிண்ணம், சிறிய உளுந்து அப்பளம் }10, கடுகு }–அரை தேக்கரண்டி, மிளகாய் வற்றல் -2, கடுகு, உளுந்தம் பருப்பு , சீரகம் -தலா ஒரு தேக்கரண்டி, வெந்தயம் -அரை தேக்கரண்டி, கறிவேப்பிலை, பெருங்காயத்தூள்-தாளிக்க சிறிது , புளி -நெல்லிக்காய் அளவு (சிறிது தண்ணீரில் கரைத்துக் கொள்ளவும்), சாம்பார் பொடி }3 தேக்கரண்டி, மஞ்சள் தூள், உப்பு -தேவைக்கேற்ப,  நல்லெண்ணெய் -ஒரு குழிக்கரண்டி அளவு 

செய்முறை:  வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, பெருங்காயம், மஞ்சள்தூள், வெந்தயம், சீரகம்,  மிளகாய் வற்றல், உளுந்தம் பருப்பை போட்டு  தாளிக்கவும். இத்துடன் மணத்தக்காளி வத்தல் மற்றும் சாம்பார் பொடி சேர்த்து புரட்டவும்.

ADVERTISEMENT

பின்னர், புளித் தண்ணீர், உப்பு சேர்த்து நன்றாக கொதிக்க விட்டு இறக்கவும். கறிவேப்பிலை சேர்க்கவும். இறுதியில், ஒரு வாணலியில் அப்பளத்தை சிறு துண்டுகளாக ஒடித்து, பொரித்து  குழம்பில்  சேர்க்கவும்.  

குறிப்பு: வாய்ப் புண், வயிற்றுப் புண்ணுக்கு சிறந்த  நிவாரணம் தரும்  இந்த மணத்தக்காளி குழம்பு.

முருங்கைக்கீரை பொரித்த குழம்பு  

தேவையானவை: 

ஆய்ந்த முருங்கைக் கீரை }2 கைப்பிடி அளவு, பாசிப்பருப்பு -ஒரு கிண்ணம், மிளகாய் வற்றல் }2, சீரகம் }1 தேக்கரண்டி, தேங்காய்த் துருவல் -அரை கிண்ணம், உளுந்தம்பருப்பு, மிளகு -தலா கால் தேக்கரண்டி, எண்ணெய் -2 தேக்கரண்டி, கடுகு -அரை தேக்கரண்டி, மஞ்சள் தூள், உப்பு , பெருங்காயம் , கறிவேப்பிலை, கொத்துமல்லி -தேவையான அளவு

செய்முறை: முருங்கைக் கீரையை சிறிது உப்பு சேர்த்து வேக விடவும். பாசிப்பருப்பை சிறிது மஞ்சள் தூள் சேர்த்து வேக வைத்துக் கொள்ளவும். காய்ந்த மிளகாய், சீரகம், உளுந்தம்பருப்பு, மிளகு, தேங்காய்த் துருவல் ஆகியவற்றை எண்ணெய் விட்டு வறுத்து அரைத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு, அரைத்தவற்றுடன் வேக வைத்த கீரையையும் சேர்த்துக் கிளறவும். இதில் வெந்த பாசிப்பருப்பு , மஞ்சள்தூள் மற்றும் உப்பு சேர்த்து கொதிக்க விட்டு இறக்கவும். கடைசியில் கடுகு, பெருங்காயம் தாளித்துக் கொட்டவும்.

பருப்பு உருண்டை காரக்குழம்பு 

தேவையானவை: 

கடலை பருப்பு -1 கிண்ணம், மிளகாய் வற்றல் -4, புளி -ஒரு எலுமிச்சை அளவு, தக்காளி}2 , சாம்பார் பொடி -2 தேக்கரண்டி, மஞ்சள்தூள், உப்பு }தேவையான அளவு, கடுகு, வெந்தயம் -தலா கால் தேக்கரண்டி, பெருங்காயத்தூள் -சிறிதளவு, எண்ணெய்  -2  தேக்கரண்டி, சோம்பு }1 தேக்கரண்டி , இஞ்சி  -ஒரு சிறிய துண்டு, பச்சை மிளகாய் }3, தேங்காய் -1 பத்தை, உடைத்த கடலை -கால் கிண்ணம், அரைத்த மசாலா விழுது , கறிவேப்பிலை, கொத்துமல்லி -தேவைக்கேற்ப

செய்முறை: கடலை பருப்பை ஒரு மணி நேரம் ஊற வைத்து, மிளகாய் வற்றலுடன் சேர்த்து வடை மாவு பதத்துக்கு கெட்டியாக அரைத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு, அரைத்த பருப்புக் கலவையைப் போட்டுக் கிளறவும். இத்துடன் உப்பு சேர்த்துப் பிசைந்து, சிறு உருண்டைகளாக உருட்டவும். இதை இட்லி தட்டில் வைத்து ஆவியில் வேக விடவும். அடுப்பில் வாணலியை வைத்து, புளியை தண்ணீர் விட்டுக் கரைத்து, அதில் நறுக்கிய தக்காளி, சாம்பார் பொடி, உப்பு சேர்த்து கொதிக்க வைத்து, பிறகு அரைத்த மசாலாவை போட்டு பச்சை வாசனை போக வதக்கவும். பிறகு வெந்த உருண்டைகளைப் போடவும். கடுகு, வெந்தயம், பெருங்காயத்தூள் தாளித்து இறக்கவும். கறிவேப்பிலை, கொத்துமல்லி தழை தூவி அலங்கரிக்கவும்.

பாகற்காய் பிட்ளை குழம்பு 

தேவையானவை:

மிதி பாகற்காய் -ஒரு கைப்பிடி (அ) பெரிய பாகற்காய் }1, தேங்காய்த் துருவல் -அரை கிண்ணம், மிளகாய் வற்றல் -2, மஞ்சள்தூள், உளுந்தம் பருப்பு , மிளகு, சீரகம், பச்சரிசி, தனியா -தலா ஒரு தேக்கரண்டி, புளித் தண்ணீர்  -ஒரு கிண்ணம், சாம்பார் பொடி -2 தேக்கரண்டி, துவரம் பருப்பு -ஒரு  கிண்ணம், கடலை பருப்பு -அரை கிண்ணம், உப்பு -தேவைக்கேற்ப, கறிவேப்பிலை, கடுகு, வெந்தயம், சீரகம், பெருங்காயம், எண்ணெய் -தலா ஒரு தேக்கரண்டி.

செய்முறை: கடலை மற்றும் துவரம் பருப்பை வேக வைத்துக் கொள்ளவும். மிளகாய் வற்றல், மிளகு, சீரகம், பச்சரிசி, தனியா, உளுந்தம் பருப்பை தனியாக எண்ணெய் விட்டு வறுத்துக் கொள்ளவும். இதனுடன் மஞ்சள் தூள், தேங்காய்த் துருவலை சேர்த்து அரைத்து, வேக வைத்த பருப்புடன் சேர்த்துக் கலந்து கொள்ளவும். பாகற்காயை சிறு துண்டுகளாக நறுக்கி, எண்ணெய்யில் வதக்கவும். பின்னர் அதனுடன் புளித் தண்ணீரை விட்டு சாம்பார் பொடி, உப்பு சேர்த்துக் கொதிக்க விடவும். நன்கு கொதித்து வரும்போது ஏற்கெனவே கலந்து வைத்துள்ள மசாலா கலவையைச் சேர்க்கவும். வெந்ததும் கடுகு, சீரகம், பெருங்காயம், கறிவேப்பிலை, வெந்தயம் தாளித்துக் கொட்டி இறக்கவும்.

தக்காளிக்காய் புளி குழம்பு 

தேவையானவை: 

தக்காளிக் காய் -6, வெங்காயம் }2 பச்சைமிளகாய் -1, சாம்பார் பொடி -2 தேக்கரண்டி, மஞ்சள்தூள் -ஒரு சிட்டிகை, புளித் தண்ணீர்-1 கிண்ணம்,  உப்பு , எண்ணெய்  }–தேவையான அளவு, கடுகு, சீரகம் , பெருங்காயம் -தலா ஒரு தேக்கரண்டி, கறிவேப்பிலை – சிறிதளவு.

செய்முறை:   பழுக்காத பச்சை நிறத்தில் இருக்கும் காய்  தக்காளியை எண்ணெய் கத்தரிக்காய் குழம்புக்கு நறுக்குவது போன்று நான்காக கீறி கொத்து கொத்தாக நறுக்கிக் கொள்ளவும். பின்னர்,  வாணலியில் எண்ணெய்விட்டு பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும். பிறகு, பச்சைமிளகாய், தக்காளி காயை வதக்கவும். பின்னர், புளித் தண்ணீரை விடவும். அத்துடன் உப்பு, மஞ்சள்தூள், சாம்பார் பொடி சேர்த்து கொதிக்கவிடவும்.  எல்லாம் சேர்த்து கொதித்து வந்ததும், கடுகு, சீரகம் , பெருங்காயம், கறிவேப்பிலை மற்றும் கொத்துமல்லி தாளித்து கொட்டி இறக்கவும். 

வடக குழம்பு 

தேவையானவை:

கூட்டு வடகம் -100 கிராம், புளித் தண்ணீர் -1 கிண்ணம், சாம்பார் பொடி -2 தேக்கரண்டி, கடுகு, வெந்தயம், கடலைப்பருப்பு , பெருங்காயம் , மஞ்சள் தூள் -தலா ஒரு தேக்கரண்டி, மிளகாய் வற்றல் }1, உப்பு -தேவைக்கேற்ப, எண்ணெய் -4 தேக்கரண்டி, கறிவேப்பிலை, கொத்துமல்லி -சிறிதளவு.

செய்முறை: வாணலியில் எண்ணெய் விட்டு, கடுகு, வெந்தயம் தாளித்து, கடலைப்பருப்பு, மிளகாய் வற்றல் சேர்த்து வதக்கவும். பின்னர், சாம்பார் பொடியைச் சேர்த்து லேசாக வறுத்து, கூட்டு வடகத்தை அப்படியே சேர்க்கவும். வடகம் நன்கு வறுபட்டதும், புளித் தண்ணீரை விட்டு, உப்பு, கறிவேப்பிலை, கொத்துமல்லி சேர்த்துக் கொதிக்க விட்டு இறக்கவும்.

இதில், வேக வைத்த கருப்பு அல்லது வெள்ளை கொண்டைக்கடலையை சேர்த்தும் செய்யலாம் (வடகத்தை சேர்க்கும்போது சேர்க்கலாம்).

ADVERTISEMENT
ADVERTISEMENT