மகளிர்மணி

காலில் சக்கரம்... கழுத்தில் பதக்கங்கள்!

28th Aug 2019 06:09 PM | - கண்ணம்மா பாரதி

ADVERTISEMENT

 

"ஸ்பீட்  ஸ்கேட்டிங்' -  உலகப் போட்டி  சமீபத்தில்  ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனா நகரில் நடந்தது. அதில் சீனியர்   ஜுனியர் ஆண் பெண் பிரிவில் தலா நான்கு பேர்  வீதம் மொத்தம் பதினாறு பேர்  கலந்து கொண்டார்கள். பெண்கள் ஜுனியர் பிரிவில்  கலந்து கொண்டவர்களில் ஒருவர்  ஆதித்ய விஸ்வ வீணா.  மதுரை கே. புதூரை சேர்ந்தவர். மதுரை  வேலம்மாள் போதி கேம்பஸ் பள்ளியில் 11-ஆம் வகுப்பு  மாணவி.

ஸ்கேட்டிங்  விளையாட்டில்  வீணா சாதனை படைத்துக் கொண்டிருப்பதால், வீணாவுக்கு பள்ளி கல்விக் கட்டணத்தில் ஐம்பது சதவீத  சலுகையினை பள்ளி நிர்வாகம் வழங்கியுள்ளது. படிப்பிலும் வீணா சூட்டிகையாக இருப்பதால், ஸ்கேட்டிங் பயிற்சிக்காக பள்ளிக்கு வருகை தரும் நேரத்திலும் வீணாவுக்கு சலுகை தரப்பட்டுள்ளது. பதினைந்து வயதாகும் வீணா, "ஸ்கேட்டிங்' விளையாட்டில்  தேசிய அளவில் சுமார் பதினைந்து பதக்கங்களை வென்றுள்ளார்.

"மாவட்ட - மாநில அளவில் இதுவரை 130 பதக்கங்களை பெற்றுள்ளேன். இருந்தாலும்   "ஸ்கேட்டிங்  விளையாட்டில்  மகத்தான சாதனை,   இந்திய அணிக்கு  என்னைத் தேர்ந்தெடுத்ததுதான்'  என்று சொல்லும் வீணா,  தொடர்ந்து மனம் திறக்கிறார்:

ADVERTISEMENT

"சொந்த ஊர்   மதுரை. அப்பா  உமாசங்கர். சேலத்தில்  வர்த்தகத்தில் ஈடுபட்டுவருகின்றார். அம்மா  சங்கீதா.  எம்சிஏ  படித்தவர்.  எனக்காக வேலைக்கு போகாமல்  இருப்பவர்.   நான்   எல்.கே.ஜி. படித்துக் கொண்டிருந்தபோது ஸ்கேட்டிங்கில் ஆர்வம் தொத்திக் கொண்டது.  எனது ஆர்வத்தைப் புரிந்து கொண்ட பெற்றோர்,  பயிற்சி வகுப்புகளுக்கு அனுப்பினார்கள். பயிற்சி வகுப்புகளுக்கு  துணையாக என்னுடன் வந்தவர் அம்மா. அன்றிலிருந்து  இன்றுவரை அம்மாதான்  என்னுடன் பயிற்சிகளின் போதும், போட்டிகளின் போதும் உடன் வருகிறார். 

ஆனால் பார்சிலோனா போகும் போது அங்கு வர அவரால் முடியவில்லை. டில்லி வரை வந்து வழியனுப்பினார்.  திரும்பும்போதும் டில்லியில் வந்து என்னை அழைத்துக் கொண்டு  மதுரை வந்தார். எனது சாதனைகளில் அம்மாவுக்கும் பெரும் பங்கு உண்டு. தவிர  ஸ்கேட்டிங் விளையாட்டில்  "அ'  முதல் "ஃ'  வரை  எல்லாம் தெரிந்து வைத்திருக்கிறார்.  

மாவட்ட  அளவில்  பரிசுகளைப் பெற்ற என்னை  மாநில அளவில் பங்குபெற அம்மாவும், அப்பாவும்தான் ஊக்குவித்தார்கள். பிறகு எனது  எல்லை தேசிய அளவில்  விரிவானது.  இப்போது நான்  சென்னை  சத்தியமூர்த்தி சாரிடம் பயிற்சி  பெற்று வருகிறேன். இதற்காக இரண்டு மாதத்திற்கு ஒருமுறை சென்னை  வந்து செல்கிறேன்.  அவர் சொல்கிற பயிற்சிகளை மதுரையில் செய்யும் போது சரிவர  செய்கிறேனா என்று கண்காணிப்பவர், மேற்பார்வை செய்பவர் சொக்கலிங்கம் சார்.  ஸ்கேட்டிங் விளையாட்டில்  உடலை கட்டாக வைப்பதுடன் வலிமையாகவும் வைத்திருக்க வேண்டும். அதற்கான  "ஃபிட்னஸ்' பயிற்சிகளைத் தந்து வருபவர்  சையது ரியாஸ்.  பயிற்சி தினமும் இருப்பதால் உணவு கட்டுப்பாடு ஏதும் இல்லை.   

தினமும் காலையில் பத்து கி. மீ தூரம் காலில் சக்கரங்கள் பொருத்தப்பட்ட காலணியை அணிந்து கொண்டு சறுக்கி வேகமாக செல்ல வேண்டும். ஞாயிறு அன்று  நாற்பத்திரண்டு கி. மீ  போய் வர வேண்டும். சென்னையில் ஸ்கேட்டிங் செய்ய  200 மீ  சிந்தட்டிக் டிராக்  உள்ளது.  ஆனால் மதுரையில் 150 மீ சாதாரண டிராக்தான். அதுவும் பல இடங்களில் பழுது அடைந்துள்ளது. அதனால், தேசிய நெடுஞ்சாலைகளில்தான் பயிற்சி செய்கிறேன்.

"வாகனங்கள் போக்குவரத்து    உள்ளபோது எப்படி பயிற்சி செய்ய முடியும். ஆபத்தாச்சே'  என்று பலரும் கேட்பார்கள்.  நான் தினமும்  சாலையில் ஓரமாகத்தான் பயிற்சி  செய்கிறேன்.  பதிமூன்று  ஆண்டுகளாக பயிற்சி செய்து வருவதால்   வாகனம் ஓட்டுபவர்களுக்கு என்னைப் பற்றி தெரியும். அவர்களும் பார்த்து வாகனங்களை ஓட்டுவார்கள்.

ஒவ்வொரு முறையும் மாவட்டம், மாநிலப் போட்டிகளில் கலந்து கொண்டுதான் தேசிய போட்டிகளில்  கலந்து கொள்ள முடியும். தேசிய அளவில் பதக்கங்களைப் பெறும்போது இந்திய அணிக்காகத் தேர்வுகள் நடக்கும். அதில் தேர்வு பெற்றால்தான் இந்திய அணியில் சேர முடியும். இப்போது இந்திய அணியில் இடம் பெற்றிருந்தாலும் காமன்வெல்த்  ஆசிய  விளையாட்டுப் போட்டிக்காக தேர்வுகள் மீண்டும் நடக்கும்.  அதில் தகுதி பெற்றால்தான் இந்திய அணியில்  அங்கமாக முடியும்.  பார்சிலோனாவில்  நடந்த  போட்டியில் இந்திய அணிக்கு  பதக்கங்கள் எதுவும் கிடைக்கவில்லை. அடுத்து  நடைபெறும் சர்வதேச போட்டிகளில் இந்திய அணியின் சார்பாக விளையாடவேண்டும். அதற்குத் தேர்வு பெற வேண்டும்.  அதற்காக கடினமான பயிற்சிகளை  செய்து வருகிறேன். 

எனக்கு டாக்டராக வேண்டும்  என்ற லட்சியம்  உண்டு. அதற்காக  படிப்பிலும் கவனம் செலுத்தி வருகிறேன்.  என்னைப் பொறுத்த வரையில் கல்வியும் ஸ்கேட்டிங்கும் இரண்டு கண்கள். டாக்டருக்குப்  படிக்கும் வாய்ப்பு கிடைத்தாலும் ஸ்கேட்டிங் விளையாடுவதை நிறுத்த மாட்டேன். ஏனென்றால் சென்னையைச் சேர்ந்த அந்த  பெண் டாக்டர் ஸ்கேட்டிங்கில் எனது சீனியர். அவர்  ஸ்பீட் ஸ்கேட்டிங்  விளையாட  பார்சிலோனா  வந்திருந்தார். அவர் வழிதான் என்  வழி''  என்கிறார் காலில்  சக்கரம் கட்டிக் கொண்டு சாதனை படைத்து வரும்  ஆதித்ய விஸ்வ வீணா.  

ADVERTISEMENT
ADVERTISEMENT