பாண்டி தோளைத் தொடவும், திரும்பி பார்த்தாள் சங்கரி. ""என்னம்மா நீ சாப்பிட வருவேன்னு நாங்க அம்புட்டுப் பேரும் வீட்டுக்குள்ள காத்திருக்கோம். நீ என்னன்னா இங்க தெருவுல உக்காந்திருக்க'' என்று இளையமகன் பாண்டி கேட்கவும்.
சங்கரி மெல்ல தன்னைச் சுதாரித்துக் கொண்டாள். ""ஒன்னும் இல்லப்பா ஒரு வடியா வந்துச்சி அதேன் அப்படியே உட்கார்ந்துட்டேன்'' என்றவள் மெல்ல எழுந்து நடந்தாள்.
தங்கராசுவிற்கு கௌசிகாவின் மேல் இருந்த கோபம் ஒரு இரும்புச் சங்கிலிபோல் அவனை நடக்க விடாமல் தொடர்ந்து சித்ரவதை செய்து கொண்டு வந்தது. அவன் முன்பு ஒரீரு தடவை டவுனிற்குப் போயிருந்தபோது, போலீஸ்காரர்களுடன் சிலர் கால் சங்கிலியோடு போவதைப் பார்த்திருக்கிறான். அவனுக்கு அவர்களைப் பார்க்கையில் ஆச்சரியமாகவும், அதிசயமாகவும் இருந்தது. அக்கம், பக்கத்தில் அதைப்பற்றி கேட்டபோது, ""என்ன தம்பி அந்தக் கைதிகளயா கேக்கிற அவங்கள்ல்லாம் கொல செஞ்ச குற்றவாளியாம். அதான் சும்மா விட்டா ஓடிருவாங்கன்னு இப்படி கால்ல சங்கிலி போட்டு கூட்டிட்டுப் போறாக'' என்று ரொம்ப சாதாரணமாகச் சொல்லிவிட்டு நடக்க, அவன் அவர்களைத் திகைப்புடன் பார்த்துக் கொண்டு நின்றான்.
இப்போது, அவனுக்குத் தானும் ஒரு கைதி போன்று தோன்றியது. கௌசிகாதான் அவன் காலில் ஒரு சங்கிலியாக விலங்கிட்டவாறு வருகிறாள். அவன் அவளைச் சந்திக்கும் முன்னர் எவ்வளவு சந்தோஷமாக இருந்தான்.
ஒரு பறவையைப் போல ஊருக்குள் சுதந்திரமாக எல்லோருக்கும் செல்லப்பிள்ளையாக திரிந்தானே.
குமரிகள் ஒன்றிரண்டு இவனைப் பார்த்து வெட்கத்தோடு தலைகுணிந்து போக, சில குமரிகள் அப்படி போக மாட்டார்கள். ""என்ன மச்சான் நீருதேன் எம்புருசனா வரணும், அப்படி வந்தா நம்ம ஊரு அம்மனுக்கு பொங்கலும், வருஷத்துக்கு ஒரு கிடாயா அஞ்சு வருஷத்துக்கு அஞ்சிகிடா வெட்டுறதா வேண்டியிருக்கேன்'' என்பாள்.
இன்னொருத்தி, ""மச்சான் நீரு சம்சாரி (விவசாயம்) வேல செய்ய ஆசப்படுவீரு வடக்குத்திக்கும் ஆத்தோரம் இருக்க ஒரு குருக்கம்(ஏக்கர்) நிலம் எனக்குத்தேன்னு நேத்து எங்கய்யா சொல்லிக்கிட்டு இருந்தாரு இன்னும் நாலஞ்சு நாளையில வளருபிற வருதாம் நீரு என் அயித்தய கூட்டிக்கிட்டு என்னப் பொண்ணு கேக்க வாரும்'' என்பாள்.
தங்கராசுவும் சிரித்துக் கொண்டே, ""என்கிட்ட இம்புட்டு பேசறவ எங்கம்மா கிட்டப் போயி பேசுங்க'' என்று சொல்லவும்,
""ஆத்தாடி, சங்கரி அயித்த வெட்டு ஒன்னு, துண்டு ரெண்டுன்னுல்ல பேசுவாக'' என்று சொல்லிக் கொண்டே போவார்கள். கிராமங்களில் இது சகஜம்தான். சும்மா இப்படி பேசுவார்களே தவிர அவரவர் பாட்டிற்கு அவரவர் அம்மா, அப்பா பார்த்த மாப்பிள்ளையைக் கல்யாணம் பண்ணிக் கொண்டு நிம்மதியாக இருந்தார்கள்.
எப்போதும் கிண்டலும், கேலியுமாக வேலை, வேலை என்று அலைந்தார்கள். சில சமயங்களில் எதிரும், புதிருமாக பார்க்கும்போது மட்டும், "உனக்கு வாக்கப்படணுமின்னு நெனைச்சேன். ஆனா இப்பப் பார்த்தா எல்லாரும் ஒரு குட்டையில ஊருன மட்டைகன்னுதான் தெரியுது' என்று சொல்லிவிட்டு சிரித்துக் கொண்டே போவார்கள்.
அப்படி இருந்த வாழ்க்கை இப்போது எப்படி மாறிப் போனது. கௌசிகாவை எவ்வளவு ஆசை, ஆசையாக கட்டிக் கொண்டு வந்தான். ஆனால், அவளால் தான் பட்ட கஷ்டங்களும், வேதனைகளும் தான் அதிகம். தன்னோட கஷ்டம் இருக்கட்டும். நம்மோடு போகாம இவளால் அம்மாவும் எவ்வளவு கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறாள். மற்றவர்களின் உணர்ச்சிகளையோ, உணர்வுகளையும் புரிந்து கொள்ளாமல் தன் சுயநலத்திற்காக மட்டும் வாழ்கிறவளிடம் எப்படி காலம் முழுக்க ஒன்றாக சேர்ந்து வாழமுடியும்.
இதுவரையில் கௌசிகா தன் குடும்பத்திற்காக ஒரு துரும்பைக் கூட எடுத்துப் போட்டதில்லை என்று நினைத்தபோது அவனுக்கு திக்கென்றது. அவளுக்காக அவர்கள் தான் வேலை செய்திருக்கிறார்கள். அப்படி வேலை செய்தவர்களிடம் அவள் அன்பாகக் கூட பேசியது கிடையாது என்று நினைக்கையில் அவன் மனது ரொம்ப வலித்தது. அதோடு அம்மா தன்னுடன் இருக்கிறாள் என்ற தெம்பில் அவனால் இப்போதைக்கு ஓடி, ஓடி உழைக்கிறான். அதுவே அம்மா காடுகளுக்கு வரமுடியாவிட்டால்... நினைக்கவே அவனுக்கு பயமாயிருந்தது. விவசாயிகளுக்கு எல்லாம் தன்னலம் பார்க்காத நாலைந்து ஆட்கள் உதவிக்கு வேண்டும். அதிலும் பொண்டாட்டியின் உதவி ரொம்ப வேண்டும்.
இப்படிப்பட்ட பொண்டாட்டியை வைத்துக் கொண்டு எப்படி விவசாயம் செய்ய முடியும். அவனைப் பொருத்தவரை கௌசிகா உதவி செய்யவிட்டால் கூட பரவாயில்லை. அலுத்துப் போய் வரும்போது இந்த அலுப்பெல்லாம் வீட்டிற்குப் போய் பொண்டாட்டியின் முகத்தைப் பார்த்தால் போய்விடுமென்று நினைத்துக் கொண்டு வருகிறவனிடம் இப்படி குதற்கமும், குத்தலுமாகப் பேசினால் என்ன செய்வது?
தம்பிக்கும், தங்கைக்கும் கல்யாணம் செய்வது என்று அம்மா முடிவு பண்ணிவிட்டாள். இனி அவர்கள் உதவியும் கிடைக்காது. என் பிழைப்பே விவசாயத்தை நம்பியிருக்கிறது. வேறு வேலை எதுவும் எனக்குத் தெரியாது. எதற்கெடுத்தாலும் இப்படி முரண்டு பிடிக்கும் பெண்டாட்டியை வைத்துக் கொண்டு என்னால் நிச்சயம் விவசாயம் செய்ய முடியாது. இருக்கும் இருப்பைப் பார்த்தால் நமக்கு சோறு கூட காய்ச்சி வைக்க மட்டாள் என்று நினைத்தபோது அவனுக்கு மலைப்பாயிருந்தது.
நம்ம ஊரில் என் வயதுகாரர்கள் எல்லாம் கல்யாணமாகி எவ்வளவு ஒத்துமையோடு குடும்பம் நடத்துகிறார்கள். என் வாழ்க்கை மட்டும் ஏன் இப்படி போனது. எல்லாம் அழகு படுத்தியபாடு. இந்த கௌசிகாவின் அழகைக் கண்டு ஒரு நிமிஷம், ஒரே நிமிஷம் மனசை பறி கொடுத்ததுக்கு இம்புட்டு பெரிய தண்டனையா? நினைவு குளத்தில் மிதந்த தங்கராசுவிற்கு மனது தாங்கவே இல்லை. வீட்டை நினைத்தாலே அதுவும் அந்த வீட்டுக்குள் கௌசிகா இருப்பதை நினைத்தாலே அவனுக்கு தன் வாழ்க்கையே சிதைந்துவிட்டாற் போன்று தோன்றியது. வீட்டிற்கு போக நினைத்தவனுக்கு கண்ணுக்கு தெரியாத கால் விலங்கு தடுத்தது. மனசுக்குள் பயமாகவும் இருந்தது.
""ஏப்பா யாரது இந்நேரம் பிஞ்சைக்குள்ள நிக்கிறது'' என்று ஒரு தடவைக்கு, இரண்டு தடவை யாரோ தன் தோளைத் தொட்டு கேட்பது தெரிய நிமிர்ந்துப் பார்த்தான் தங்கராசு.
பொன்னையா தாத்தாதான் நின்றிருந்தார். நல்ல வேளை தோட்டம் அவன் தோட்டமாயிருந்தது. அடுத்த தோட்டமென்றால் களவு சாட்டிவிடுவார்கள்.
""ஒன்னுமில்ல தாத்தா சும்மாதான் பிஞ்சயப் பாத்துட்டுப் போவலாமின்னு வந்தேன்''
""ஏலேய் பிஞ்சைக்கு வார நேரமா இது, அப்படி என்ன இப்ப உன் பிஞ்சையில் காயும், கனியும் கெடந்து அழிஞ்சிப் போவுது. அதேன் எல்லா வேலையும் முடிச்சிட்டயே, இனி ஆடி மாசத்துக்கு தானே கலப்பையவும், காளையவும் புடிக்கணும்'' என்றவர்,
""சரி, சரி வீட்டுக்கு வா எனக்கும் ஒரு துணையுமில்ல பேசிக்கிட்டே போவோம்'' என்றார்.
தங்கராசுவுக்கு வீட்டுக்குப் போகவே மனசு இல்லை. அதனால் தாத்தா நானு என் பாட்டி பூவம்மா இருக்காளல்ல அவளப் பாத்து ரொம்ப நாளாச்சி இப்பத்தேன் வேலயெல்லாம் முடிஞ்சிடுச்சில்ல, அவளப் போயி பாத்துட்டு ரெண்டு நாளு அவ கூட இருந்துட்டு வாரேன். என் அம்மா கிட்டக் கூட சொல்லாம வந்துட்டேன். நீரு உம்ம வீட்டுக்குப் போற போக்குல என் அம்மாகிட்ட சொல்லிரும்'' என்றான்.
- தொடரும்