நடந்தது சம்பவம் அல்ல அனைவருக்குமான பாடம்!

நெல்லை மாவட்டம், கடையம் அருகே உள்ள கல்யாணிபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் சண்முகவேலு. இவரின் மனைவி செந்தாமரை. இவர்களின் மகன், மகள் சென்னை, பெங்களூருவில் உள்ள ஐ.டி நிறுவனங்களில்
நடந்தது சம்பவம் அல்ல அனைவருக்குமான பாடம்!

நெல்லை மாவட்டம், கடையம் அருகே உள்ள கல்யாணிபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் சண்முகவேலு. இவரின் மனைவி செந்தாமரை. இவர்களின் மகன், மகள் சென்னை, பெங்களூருவில் உள்ள ஐ.டி நிறுவனங்களில் பணியாற்றி வருகின்றனர். இதனால், சண்முகவேலும் செந்தாமரையும் தனியாக வசித்து வருகின்றனர். மேலும் இவர்கள், தங்களுக்குச் சொந்தமான நிலத்தில் எலுமிச்சை தோட்டம் வைத்துள்ளனர். இந்நிலையில் கடந்த 12-ஆம் தேதி இரவு இவர் வீட்டிற்குள் இரண்டு கொள்ளையர்கள் நுழைந்தனர்.
 இரவு, தன் மகனுடன் சண்முகவேலு செல்போனில் பேசிக்கொண்டு இருந்துள்ளார். அப்போது வீட்டுக்குள் அரிவாளுடன் இரண்டு கொள்ளையர்கள் நுழைந்து சண்முகவேலை அங்குள்ள தூணில் கட்டிப்போட முயன்றுள்ளனர். இதனால் கொள்ளையர்களுக்கும் சண்முகவேலுக்கும் மோதல் ஏற்பட்டது. சத்தம் கேட்டு செந்தாமரை வெளியில் வந்தார். அவரும் கொள்ளையர்களை எதிர்த்து போராடினார்.
 தனது வீட்டில் இருந்த நாற்காலி, பெஞ்ச் உள்ளிட்டவற்றால் கொள்ளையர்களை சண்முகவேலும் செந்தாமரையும் துணிச்சலுடன் விரட்டியடித்தனர். இந்தக் காட்சிகள் அவர் வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்தன. இது தொடர்பாக உடனடியாக சண்முகவேல் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு விரைந்த அவர்கள் அங்குள்ள சிசிடிவியை ஆய்வு செய்தனர். இதுதொடர்பான வீடியோக்கள் இணையதளத்தில் வைரலாகின.
 இதனையடுத்து பொதுமக்களும், காவல்துறையினரும் சண்முகவேல் - செந்தாமரை தம்பதியினரை பாராட்டினர். இவர்களது வீடியோவை பார்த்த நடிகர் அமிதாப் பச்சன் "வயதான தம்பதியினருக்கு சபாஷ்' என பாராட்டு தெரிவித்தார்.
 "இது போன்ற வீடியோக்கள் பார்த்தால் கொள்ளையர்களுக்கு பயம் வரும். தமிழர்களின் நேர் கொண்ட பார்வையை இதன் மூலம் உணர முடிகிறது' என கருத்து தெரிவித்து இருந்தார் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன்சிங்.
 இதனையெடுத்து துணிச்சல் மிக்க தம்பதியினருக்கு விருது வழங்க நெல்லை மாவட்ட ஆட்சியர் ஷில்பா தமிழக அரசுக்கு பரிந்துரைத்தார். ஏற்கெனவே விருதுகள் பெறுவோர்க்கான பட்டியல் தயார் செய்யப்பட்ட நிலையில், "அதீத துணிவுக்கான விருது' என்ற பெயரில் இந்த ஆண்டு புதிதாக விருது உருவாக்கப்பட்டு சண்முகவேல், செந்தாமரை தம்பதிகளுக்கு ஆகஸ்ட் 15-ஆம் தேதி அன்று நடைபெற்ற விழாவில் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி விருது வழங்கி கெளரவித்தார்.
 இது பற்றி செந்தாமரை- சண்முகவேல் தம்பதிகளிடம் பேசினோம்:
 "எங்கள் வீட்டிற்கு அவ்வளவு எளிதில் யாரும் வர முடியாது. குறிப்பாக அதுவும் இரவு 9 மணிக்கு தெரிந்தவர்கள் மட்டுமே வர முடியும். காரணம் அது எலுமிச்சை தோட்டம். நாங்கள் வசதியானவர்கள் என நினைத்து எங்கள் வீட்டில் நுழைந்தால் கண்டிப்பாக ஏதாவது கிடைக்கும் என்ற நோக்கத்தில் தான் கொள்ளையார்கள் எங்கள் வீட்டில் நுழைந்தனர்.
 இதே போன்று மூன்றாண்டுகளுக்கு முன்பு ஒரு சம்பவம் நடந்தது. நாங்கள் வெளியே சென்று காரில் வீடு திரும்பி கொண்டு இருந்தோம். அப்போது எங்கள் வீட்டின் பின்புறம் வழியாக திருடர்கள் நுழைந்து இருந்தனர். எங்கள் கார் லைட் வெளிச்சத்தை பார்த்ததும் அப்படியே போட்டு விட்டு ஓடி விட்டார்கள். வீட்டில் பொருட்கள் எதுவும் களவு போகவில்லை. உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தோம்.
 அவர்கள் வீட்டிற்கு வந்தவுடன் சிசிடிவி காமிரா உள்ளதா என்று தான் கேட்டார்கள். வீட்டில் அனைவரும் படித்தவர்களாக இருக்கிறீர்கள். சிறு தொகை செலவு செய்து காமிரா கூட மாட்ட வேண்டும் என்று தோன்றவில்லையே என்று அறிவுரை வழங்கினார்கள். உடனே என்னுடைய மகன் சிசிடிவி காமிரா, சென்சார் கருவிகளை வீட்டில் பொருத்தினான். நான் அப்போது வீண் செலவு என்று நினைத்தேன்.
 சம்பவத்தன்று என்னுடைய சத்தத்தைக் கேட்டு வெளியே வந்தார் என்னுடைய மனைவி. கொள்ளையர்களின் நோக்கம் அவர் கழுத்தில் உள்ள சங்கிலியைப் பறிக்க வேண்டும் என்பது தான். நினைத்தபடி செயினைப் பறித்துவிட்டார்கள். அதனால் அவர்களை பிடிப்பதற்கு முயற்சி செய்தேன் என்பதால் என்னைத் தாக்கினார்கள். அப்போது அங்கிருந்த பொருள்களை கொண்டு கொள்ளையர்களை என்னுடைய மனைவி தாக்கினார். ஒரு கட்டத்தில் நாங்கள் இருவரும் சேர்ந்து தாக்க அங்கிருந்து ஓடிவிட்டனர். எங்களுடைய போராட்டம் வீட்டில் மாட்டியிருந்த சிசிடிவி காமிராவில் பதிவாகி இருந்தது. நாங்கள் இந்தளவு பாராட்டும், விருதும் பெற சிசிடிவி தான் காரணம்'' என்றார் சண்முகவேல்.
 தொடர்ந்து பேசினார் செந்தாமரை, "என்னுடைய கணவரின் சத்தத்தை கேட்டதும் ஓடி வந்தேன். அவருடைய உயிருக்கு ஆபத்து என்றதும், கையில் கிடைத்த பொருள்களை எடுத்து கொள்ளையர்கள் மீது வீசினேன். அதில் அவர்கள் நிலைகுலைந்து போனார்கள். ஒரு கட்டத்தில் நாங்கள் இருவரும் சேர்ந்து தாக்கவும் தான்ஓடினார்கள்' என்றார்.
 கொள்ளையர்களை பிடிக்க நீங்கள் முயற்சி செய்யவில்லையா?
 அவர்களை எங்கள் வீட்டில் இருந்து விரட்டி விட வேண்டும் என்பது எங்கள் நோக்கமாக இருந்தது. அதில் இறுதியில் வெற்றியடைந்தோம் என்பதே எங்களுக்கு மன நிம்மதியை தந்தது.
 அவர்களை அடையாளம் தெரியவில்லையா?
 இரு கொள்ளையர்களில் ஒருவர் வயதானவன். ஒருவன் இளைஞன். என்னுடைய கணவர் அவர்கள் அணிந்திருந்த முகமூடியை கழற்ற முயற்சித்தார் முடியவில்லை. ஆனால் கண்டிப்பாக எங்களுக்கு தெரிந்தவர்களாக தான் இருக்க முடியும். தெரியாத நபர் யாரும் இந்த பகுதிக்கு அவ்வளவு எளிதில் வர முடியாது. திட்டமிட்டு நடத்தப்பட்ட கொள்ளை சம்பவம் தான் இது. எங்களுக்கு நடைபெற்ற இந்தச் சம்பவம் என்பது மற்றவர்களுக்கு ஒரு பாடம்'' என்றார்.

- வனராஜன்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com