தேசிய பளு தூக்கும் போட்டியில் தங்கப்பதக்கம் !

விளையாட்டுத்துறையில் ஏராளமான பெண்கள் சாதித்து வந்தாலும்கூட, அது குறிப்பிட்ட வயது வரை மட்டுமே நீடிக்கிறது.
தேசிய பளு தூக்கும் போட்டியில் தங்கப்பதக்கம் !

விளையாட்டுத்துறையில் ஏராளமான பெண்கள் சாதித்து வந்தாலும்கூட, அது குறிப்பிட்ட வயது வரை மட்டுமே நீடிக்கிறது. திருமணம், பிள்ளைப்பேறு என அடுத்தடுத்த கடமைகளில் பெண்கள் மூழ்கி விட்டால் விளையாட்டு வாழ்க்கை என்பது முடிந்து விடுகிறது. இதில் ஒரு சிலர் மட்டுமே திருமணத்துக்கு பிறகும் குடும்பத்தினரின் ஆதரவுடன் விளையாட்டுத்துறையில் சாதனைகளை தொடர்கின்றனர்.
 விளையாட்டுத்துறையில் எத்தனையோ விளையாட்டுகள் இருந்தாலும் பளு தூக்குதல் மிகவும் கடினமான ஒன்று. ஆண்களே பளு தூக்குதலில் திணறும்போது, அதில் ஈடுபடும் பெண்கள் சிரமம் பற்றி சொல்லி மாளாது.
 ஆனால் இதற்கு விதி விலக்காக மதுரையைச் சேர்ந்த தனியார் பள்ளி ஆசிரியை 40 வயதிலும் பளு தூக்குதலில் தேசிய அளவில் முதலிடம் பெற்று சாதனை புரிந்துள்ளார். மேலும் சர்வதேச பளு தூக்கும் போட்டிக்கும் இந்தியாவின் சார்பில் தேர்வாகியுள்ளார்.
 மதுரை விளாங்குடியைச் சேர்ந்தவர் காஞ்சனா(40). வேதியியல் படிப்போடு இளங்கலை உடற்கல்வியியல் பட்டமும் பெற்றுள்ளார். மதுரை சிம்மக்கல் பகுதியில் உள்ள சாரதா வித்யாலயம் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியையாக பணிபுரிந்து வரும் காஞ்சனா, தனது குடும்பப்பணி, பள்ளிப்பணி இவற்றோடு தனக்கு விருப்பமான பளு தூக்குதலையும் விட்டு விடாமல் தொடர்ந்து வருகிறார். வெறுமனே பயிற்சி செய்வதோடு நின்று விடாமல் பளு தூக்கும் போட்டிகளுக்கும் சென்று ஏராளமான பரிசுகளையும் பெற்றுள்ளார்.
 கடந்த பிப்ரவரி மாதம் திருநெல்வேலியில் நடந்த மாநில அளவிலான பளு தூக்கும் போட்டியில் காஞ்சனா பங்கேற்று 135 கிலோ பளுவைத் தூக்கி முதலிடம் பெற்றார். இதனால் தேசிய பளுதூக்கும் போட்டிக்கும் தகுதி பெற்றார். கடந்த ஏப்ரல் மாதம் உத்தரகாண்டில் நடைபெற்ற தேசிய பளுதூக்கும் போட்டியில் 18 மாநிலங்களில் இருந்து 40-க்கும் மேற்பட்ட பளு தூக்கும் வீராங்கனைகள் பங்கேற்றனர்.
 இதில் காஞ்சனா அதிகப்பட்சமாக 142.5 கிலோ பளு தூக்கி அனைத்து வீராங்கனைகளையும் பின்னுக்குத்தள்ளி முதலிடம் பெற்றார் இதன் மூலம் இத்தாலியில் நடைபெறும் சர்வதேச பளுதூக்கும் போட்டிக்கு இந்தியாவின் சார்பில் பங்கேற்க தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஆனால் சர்வதேச போட்டியில் பங்கேற்க நிதி வசதியின்றி தவித்து வருகிறார்.
 " எனது சொந்த ஊர் கோவில்பட்டி. சிறு வயதில் எனது வீட்டுக்கு அருகில் உடற்பயிற்சி நிலையம் இருந்ததால் நான்காவது படிக்கும்போதே நானும் எனது சகோதரரும் ஜிம்முக்கு செல்லத்தொடங்கினோம். எனது பெற்றோரும் இதை ஊக்குவித்ததால் பள்ளி, கல்லூரியில் படிக்கும்போதே பளு தூக்கும் போட்டிகளில் பங்கேற்று ஏராளமான பரிசுகள் பெற்றுள்ளேன். திருமணத்துக்குப்பிறகு மதுரை வந்துவிட்டேன்.
 எலக்ட்ரீசியனாக பணிபுரியும் எனது கணவரும் ஆதரவாக இருந்ததால், தொடர்ந்து பளுதூக்கும் போட்டிகளில் பங்கேற்றேன். இரு குழந்தைகள் பிறந்த பிறகும் எனது பயிற்சியை நான் விடவில்லை. தற்போது இரு மகன்களும் பிளஸ் 2 படித்து வருகின்றனர். தொடர் பயிற்சி செய்து வந்ததால் கடந்த பிப்ரவரியில் மாநில போட்டியில் முதலிடமும், தேசிய போட்டியில் முதலிடமும் பெற்றுள்ளேன். பொருளாதார பின்னணியும் இன்றி, சாதாரண குடும்பத்தைச் சேர்ந்த நான் பளு தூக்கும்போட்டியில் சாதனைகள் பல புரிந்தபோதும் எவ்வித ஊக்குவிப்பும் இல்லை. தேசிய அளவில் முதல் மூன்று இடங்களில் வெற்றி பெற்றால் அரசுப்பணி நிச்சயம் என்ற நிலை இருந்தாலும், தேசியப்போட்டியில் முதலிடம் பெற்ற எனக்கு அரசு வேலையும் இல்லை.

தற்போது இத்தாலியில் நடைபெறும் சர்வதேச போட்டிக்கு தகுதி பெற்றும்கூட அரசு சார்பில் எவ்வித உதவியும் இல்லை. இதனால் இத்தாலிக்கு சென்று போட்டியில் பங்கேற்பது சந்தேகமாக உள்ளது. விளையாட்டுகளில் பெண்கள் பங்கேற்பது இல்லை என்பதை குறையாக கூறுகிறோம். ஆனால் 40 வயதில் பல சிரமங்களுக்கு மத்தியில் தேசிய அளவில் முதலிடம் பெற்றும் எனக்கு எந்த உதவியும் இல்லை. தொடர்ந்து போராடி வருகிறேன். சரியான வாய்ப்புகள் அமைந்தால் ஏராளமான மாணவிகளை பளு தூக்கும் வீராங்கனைகளாக மாற்ற முடியும்'' என்றார்.
 - ச. உமாமகேஸ்வரன்
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com