திங்கள்கிழமை 19 ஆகஸ்ட் 2019

சமையல்! சமையல்!

DIN | Published: 14th August 2019 11:45 AM

சர்க்கரை நோயை கட்டுக்குள் வைக்கும் சட்னி வகைகள்
முருங்கைக் கீரை சட்னி

தேவையானவை : முருங்கைக் கீரை - ஒரு கிண்ணம், காய்ந்த மிளகாய் - 6, கடலை பருப்பு - ஒரு தேக்கரண்டி, உளுந்து - ஒரு தேக்கரண்டி, புளி - நெல்லிக்காய் அளவு, வெந்தயம் - ஒரு தேக்கரண்டி, கடுகு - ஒரு தேக்கரண்டி, பெருங்காயம் சிறிது. தாளிக்க எண்ணெய் , தேவையான அளவு உப்பு .
 செய்முறை: வெறும் வாணலியில் மிளகாய், கடலைப் பருப்பு, உளுந்து, வெந்தயம் இவற்றை தனித்தனியே பொன்னிறமாக வறுக்கவும். அரை தேக்கரண்டி எண்ணெய்யை நான்ஸ்டிக் வாணலியில் விட்டு முருங்கைக் கீரை சுருங்கும் வரை வதக்கவும். வதக்கிய கீரை, வறுத்த பொருட்கள், உப்பு, ஊற வைத்த புளி ஆகியவற்றை மிக்ஸியில் போட்டு சட்னி போல் கெட்டியாக அரைத்து இதில் கடுகு, வெந்தயம், பெருங்காயம் ஆகியவற்றை எண்ணெய்யில் தாளித்து கொட்டி கிளறவும் . முருங்கைக் கீரை சட்னி ரெடி..
 
 வாழைத் தண்டு சட்னி

தேவையானவை : நறுக்கிய வாழைத் தண்டு - ஒரு கிண்ணம், துருவிய தேங்காய் - சிறு கரண்டி அளவு, எலுமிச்சை பழம் - 1 , பச்சை மிளகாய் - 5, எண்ணெய் மற்றும் உளுத்தம்பருப்பு - தலா ஒரு தேக்கரண்டி, கடுகு - தாளிக்க சிறிது, பெருங்காயம் - சிறு துண்டு, கறிவேப்பிலை - ஒரு கொத்து , உப்பு தேவையான அளவு.
 செய்முறை: நார் நீக்கி நறுக்கிய வாழைத்தண்டை ஆவியில் 5 நிமிடம் வேக வைக்கவும்.வெந்ததும் தண்ணீரை வடிகட்டி தேங்காய், மிளகாய், உப்பு சேர்த்து கொரகொரப்பான சட்னி போல அரைக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயம் ஆகியவற்றை தாளித்து சட்னியில் கொட்டி பின் எலுமிச்சை பழத்தை அதில் பிழிந்து கிளறி விட்டு சட்னியைப் பயன்படுத்தலாம்.
 முள்ளங்கி சட்னி

தேவையானவை : சிவப்பு முள்ளங்கி கால் கிலோ, பொட்டுக் கடலை 50 கிராம், காய்ந்த மிளகாய் 8, புளி நெல்லிக்காய் அளவு, துருவிய தேங்காய் ஒரு தேக்கரண்டி, பெருங்காயம் 2 சிட்டிகை, உப்பு தேவையான அளவு.
 செய்முறை: முள்ளங்கியை துருவி தனியே வைக்கவும். மிக்ஸியில் மிளகாய், தேங்காய், உப்பு, பெருங்காயம், பொட்டுக்கடலை ஆகியவற்றை போட்டு அரைத்து விட்டு பின் துருவிய முள்ளங்கியைச் சேர்த்து அரைத்து எடுத்தால் முள்ளங்கி சட்னி ரெடி.
 பரங்கிக்காய் சட்னி

தேவையானவை: சிறு துண்டுகளாக நறுக்கிய பரங்கிக்காய் - 2 கிண்ணம், காய்ந்த மிளகாய் - 6, கடலை பருப்பு - ஒரு தேக்கரண்டி, துவரம் பருப்பு - ஒரு தேக்கரண்டி, உப்பு - தேவையான அளவு , கடுகு - அரை தேக்கரண்டி, வெந்தயம் - ஒரு தேக்கரண்டி, பெருங்காயத்தூள் - 2 சிட்டிகை, நல்லெண்ணெய் }தாளிக்க தேவையான அளவு.
 செய்முறை: ஒரு வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு நறுக்கிய பரங்கிக்காயை நன்றாக வதக்கவும். காயில் உள்ள தண்ணீர் வற்றியதும் இறக்கி ஆற விடவும். மிளகாய், கடலைப் பருப்பு, துவரம் பருப்பு மூன்றையும் தனித்தனியாக எண்ணெய் விடாமல் பொன்னிறமாக வதக்கவும். பின்னர் அனைத்தையும் வதக்கிய காயுடன் உப்பு சேர்த்து சட்னியாக அரைக்கவும். தொடர்ந்து நல்லெண்ணெய்யை சூடாக்கி கடுகு, வெந்தயத்தை தாளித்து அதனுடன் பெருங்காயத்தூளை சேர்த்து சட்னியுடன் கலக்கவும்.
 இந்த வகை சட்னிகளை இட்லி, தோசை, சப்பாத்தி ஆகியவற்றுக்கு தொட்டுக் கொண்டு சாப்பிடலாம். சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் சட்னி வகைகள் இவை.
 தொகுப்பு: சத்யா பாபு, நாகை.
 ( "சர்க்கரை நோய்கக்கேற்ற உணவுக் குறிப்புகள்' என்ற நூலில் இருந்து)
 
 
 
 

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

More from the section

இந்தியாவின் சூப்பர் அம்மா!
மனதை மயக்கும் மணல் சிற்பங்கள்!

 ஆரோக்கியம் மேம்படுத்தும் மண்புழுக்கள்!
 

பாலூட்டுவதே இயற்கையான கருத்தடை!
தேசிய பளு தூக்கும் போட்டியில் தங்கப்பதக்கம் !