சமையல்! சமையல்!

மூன்று மாவுகளையும் நன்கு  கலந்து  கொள்ளவும்.  இத்துடன் வெண்ணெய்,  எள்,  உப்பு,  ஏலக்காய்த்தூள் இட்டு, காய்ச்சியப் பாலையும் சேர்த்து, போதியளவு நீர்  தெளித்து நன்கு பிசைந்து  இரண்டு  மணி நேரம்
சமையல்! சமையல்!


பெல்லாரி  முறுக்கு

தேவையானவை:
அரிசி மாவு - 200 கிராம்
உளுந்தம் பருப்பு - 50 கிராம்
பச்சைப் பயறு மாவு - 1 மேசைக்கரண்டி
பால்  - 150  மில்லி லிட்டர்
எள் - 2 தேக்கரண்டி
ஏலக்காய்த் தூள்  -  2 சிட்டிகை
வெண்ணெய்  - 3 தேக்கரண்டி
உப்பு  -  தேவைக்கேற்ப
எண்ணெய் -  தேவையான அளவு

செய்முறை: மூன்று மாவுகளையும் நன்கு  கலந்து  கொள்ளவும்.  இத்துடன் வெண்ணெய், எள்,  உப்பு, ஏலக்காய்த்தூள் இட்டு, காய்ச்சியப் பாலையும் சேர்த்து, போதியளவு நீர் தெளித்து நன்கு பிசைந்து இரண்டு மணி நேரம் வைக்கவும்.  மாவு கலவையை மீண்டும் நன்கு  பிசைந்து கொள்ளவும். முறுக்கு அச்சில் மாவு கலவையை வைத்து, நன்கு காய்ந்த எண்ணெய்யில் பிழிந்து இட்டு,  பொன்னிறமாக பொரித்து  எடுக்கவும்.  மிதமான ஏலக்காய்  மணத்தில் சுவையான பெல்லாரி முறுக்கு தயார். பால், பாசிப்பயறு மாவு சேர்வதால் சத்துகள்  மிக்கதாகும்.  குழந்தைகள்  மிகவும்  விரும்பி  உண்பர்.  


உடுப்பி பாயசம்


தேவையானவை: 
அரிசி -  250 கிராம்
பாசிப்பருப்பு  -  50 கிராம்
சர்க்கரை - அரை கிலோ
பால்  - 2 டம்ளர்
முந்திரிபருப்பு  -  10
குங்குமப் பூ -  சிறிதளவு
ஏலக்காய்த் தூள்  -  2 சிட்டிகை
நெய் -  4 தேக்கரண்டி

செய்முறை :   முந்திரி பருப்பை  சிறுதுண்டுகளாகப்  பொடித்து  நெய்யில் வறுத்துக் கொள்ளவும். பின்னர், அடிகனமுள்ள பாத்திரத்தில் அரிசி, பாசிப்பருப்பு இரண்டையும் இட்டு போதிய அளவு நீர் சேர்த்து வேக விடவும். நன்கு வெந்ததும்  சர்க்கரை,  பால் இவைகளை  சேர்த்து சிறிது நேரம் கொதிக்க விடவும். கமகமவென பால் வாசனை வந்ததும் முந்திரி பருப்பு, ஏலக்காய்த்தூள், குங்குமப்பூ சேர்த்து  நன்கு கலந்து இறக்கவும்.  உடுப்பி பாயசம் தயார்.  பால், பாசிப்பருப்பு, குங்குமப்பூ இவைகள்  சேர்வதால்  சத்து மிக்கது.  குழந்தைகள் முதல் பெரியவர்கள்  வரை விரும்பி சாப்பிடுவர்.

கார்வார்  கத்தரிக்காய்  பொரியல்

தேவையானவை:
கத்தரிக்காய் - 6
தனியாத்தூள்  -  2 தேக்கரண்டி
சீரகத்தூள்  -  1 தேக்கரண்டி
மிளகுத்தூள்  - கால் தேக்கரண்டி
பூண்டு  விழுது  -  அரை தேக்கரண்டி
உப்பு  -  தேவைக்கேற்ப
எண்ணெய்  -  தேவைக்கேற்ப
கடுகு,  கறிவேப்பிலை - தாளிக்க

செய்முறை:  ஒவ்வொரு  கத்தரிக்காயையும்  நீளவாக்கில்  நான்கு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.  வாணலியில்  கடுகு கறுவேப்பிலை தாளித்து, நறுக்கிய கத்தரிக்காய் துண்டுகளை இட்டு நன்கு வதக்கவும். இத்துடன் போதிய  அளவு நீர்  சேர்த்து,   சீரகத்தூள்,  தனியாத்தூள், மிளகுத்தூள், பூண்டு விழுது, உப்பு ஆகியவைகளை இட்டு நன்கு கலந்து வேகவிடவும். கலவையில் நீர் சுண்டி, நன்கு மசாலா வாசனை வந்ததும் கொஞ்சம் எண்ணெய் சேர்த்து  இரண்டு நிமிடத்தில்  இறக்கவும். கார்வார் கத்தரிக்காய் பொரியல் தயார்.

சாம்பார்  சாதம், ரசம் சாதம், தயிர்  சாதம்  ஆகியவற்றுக்கு  தொட்டுக் கொள்ள சுவையான   சைடிஷ் இது. கத்தரிக்காயில்  தாதுப் பொருட்கள்,  விட்டமின்கள் ஏ, பி, சி கணிசமாக  உள்ளதால்  உடல் நலத்திற்கு  நல்லது.


பெங்களூரு  போண்டா

தேவையானவை:
உளுந்தம் பருப்பு - 300 கிராம்
தேங்காய்  - 3 பத்தை ( சில்லு சில்லாக நறுக்கியது)
வெங்காயம்  - 1
பச்சைமிளகாய்  - 3
மிளகு  கரகரவென  பொடித்தது  - 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை  - கொஞ்சம்
உப்பு  -  தேவைக்கேற்ப
எண்ணெய்  -  தேவையான அளவு

செய்முறை:  உளுந்தம்  பருப்பை  ஊற வைத்து எடுத்து,  வடை  பக்குவத்தில் அரைத்துக் கொள்ளவும்.  தேங்காய்  சில்களை  பல்லுப்பல்லாக  நறுக்கி எடுக்கவும். மிளகாய்,  வெங்காயம்,  கறிவேப்பிலை  இவைகளை  பொடியாக நறுக்கிக் கொள்ளவும். உளுந்தம் மாவுடன் பல்லுப்பல்லாக  நறுக்கிய தேங்காய், மிளகாய்,  வெங்காயம், கறிவேப்பிலை, பொடித்த மிளகு, உப்பு இவைகளை சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும். வாணலியில் எண்ணெய்விட்டு காய்ந்ததும், மாவு கலவையை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி எண்ணெய்யில்  இட்டு சிவக்க பொரித்து எடுக்கவும்.  பெங்களூரு போண்டா தயார். இத்துடன்  தேங்காய்ச்  சட்னி  வைத்து சாப்பிட  சூப்பர் சுவையாக இருக்கும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com