இளைஞர்மணி

அவசியம்... வாழ்க்கைக் கல்வி!

29th Mar 2022 06:00 AM | ச.பாலசுந்தரராஜ்

ADVERTISEMENT

 

ஒரு நாட்டின் வளம் அந்த நாட்டின் கல்வி தரத்தைப் பொருத்தே அமைகிறது. நாட்டிற்கும், மனிதனுக்கும் தவிர்க்க முடியாத ஒன்று, கல்வியாகும்.

புத்தகப் படிப்பு, தேர்ச்சி மட்டுமே கல்வியின் நோக்கமாக இருக்கக் கூடாது. அதையும் தாண்டி, மாணவர்களுக்கு வாழ்வில் எதிர்ப்படும் சவால்களைச் சமாளிக்கும் திறன், மொழித்திறன், எழுத்துதிறன் என பல்வேறு திறன்களை வளர்க்கும் கற்பித்தல் முறை அவசியம். அதன்மூலம் மாணவர்களின் செயலாற்றலை வளர்க்க வேண்டும்.

எனினும், புத்தகப் படிப்பு, தேர்ச்சி என்ற வட்டத்தினுள் மாணவர்களும், பெற்றோர்களும் உள்ளார்கள். சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் இந்தியாவில் லட்சக்கணக்கான பள்ளிகள் உள்ளன. தமிழகத்திலும் நிறையப் பள்ளிகள் உள்ளன.

ADVERTISEMENT

மாணவர்களிடையே மாற்றங்களைக் கொண்டு வந்து மாணவர்களை எதிர்காலத்திற்கு தயாராகும் பணியைச் செய்யும் சிபிஎஸ்சி பாடத்திட்டத்தை செயல்படுத்தும் இந்தியாவில் 100 பள்ளிகளுக்கு, "மாணவர்களுக்கு மாற்றத்தை தரும் பள்ளி' என்ற விருதினை மத்திய அரசின் "சென்டர் ஃபார் எஜுகேஷன் டெவலப்மென்ட் இந்தியா' என்ற அமைப்பு மார்ச் 12 -ஆம் தேதி தில்லியில் வழங்கியுள்ளது. இந்த விருதினை தமிழகத்தில் ஒரே ஒரு பள்ளி மட்டுமே பெற்றுள்ளது. அந்தப் பள்ளி விருதுநகர் மாவட்டம் சிவகாசி மாநகராட்சி திருத்தங்கல் ஏஏஏ இன்டர்நேஷனல் பள்ளி சிபிஎஸ்இ ஆகும். இது குறித்து அப்பள்ளியின் தாளாளர் ப.கணேசன்நம்மிடம் பகிர்ந்து கொண்டதாவது:

""எங்கள் பள்ளியில் தற்போது 400 மாணவ, மாணவிகள் படித்து வருகிறார்கள். முதலாம் வகுப்பு முதல் பிளஸ்டூ வரை உள்ளது. பள்ளி ஆசிரியர்களுக்கு மாணவர்களைக் கையாளுவது, கற்பித்தல் உள்ளிட்ட பயிற்சிகளை அளித்து வருகிறோம். புத்தகத்தில் ஒரு பாடம் குறித்து கற்பிக்க வேண்டும் என்றால் அது தொடர்பான அனைத்து விஷயங்களையும் ஆசிரியர் தெரிந்து கொண்டு பாடம் நடத்த வேண்டும். அப்போது தான் மாணவர்களின் சந்தேகங்களுக்கு பதில் கூற இயலும். சிபிஎஸ்இ சென்னை மண்டல அலுவலகம் மாணவர்களுக்கு மாதம் ஆன் லைன் மூலம் மாதம் 5 நாள்கள் 1 மணி நேரம் பாடம் தொடர்பாக பயிற்சி அளித்து மாணர்களுக்கு சான்றிதழ் வழங்கும். பள்ளியில் ஆங்கிலம், தமிழ், இந்தி என மொழிப் பயிற்சி 3 -ஆம் வகுப்பு முதல் பிளஸ் டூ வரையிலான மாணவர்களுக்கு அளிக்கப்படுகிறது.

ஹைதராபாத்தில் உள்ள ஐ.ஐ.டி.ஓய்வு பெற்ற பேராசிரியர் சல்மான், கணிதம் உள்ளிட்ட பாடங்களை ஆன்லைன் மூலம் மாணவர்களுக்கு நடத்துவார். 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நீட் தேர்வு பயிற்சி அளிக்கப்படுகிறது. தகுதியான ஆசிரியர்களை தேர்வு செய்கிறாம். மொத்தத்தில் மாணவர்களுக்கு புத்தகப் பாடம் மட்டும் அல்லாது, அவர்களது செயல்திறனையும், தகுதியையும் உயர்த்திக் கொள்ள பயிற்சி அளிக்கிறோம்.

எங்கள் பள்ளியில் மகாபாரதம், ராமாயணம் கூறும் வாழ்க்கை முறைகளை கற்றுத் தருகிறோம். வாரத்தில் சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை புத்தகங்களை வைத்து எதுவும் கற்றுத் தர மாட்டோம் சதுரங்க விளையாட்டு, கராத்தே, சிலம்பம், கேரம் உள்ளிட்ட விளையாட்டுக்களைக் கற்றுத் தருகிறோம். பரதநாட்டியமும் கற்றுத் தருகிறோம். சதுரங்கம் கராத்தே சிலம்பம் ஆகியவற்றுக்கு தேசிய அளவிலான பயிற்சியாளர்களைக் கொண்டு பயிற்சி அளித்து வருகிறோம். இதனால் பல்வேறு போட்டிகளில் எங்கள் பள்ளி மாணவர்கள்முதலிடம் பெற்றுள்ளனர்.

மேலும் குடும்பத்தில் பெற்றோர்களை எப்படி மதிக்க வேண்டும், ஆசிரியர்களை எப்படி மதிக்க வேண்டும், உறவினர்களிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும், பொது இடங்களில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பன போன்றவற்றையும் மாணவர்களுக்கு கற்றுத் தருகிறோம்.

இது போன்று மாணவர்களின் முன்னேற்றத்திற்காக எங்கள் கல்வி நிறுவனம் சிறப்பாச் செயல்படுவதால், எங்கள் கல்வி நிறுவனத்திற்கு மத்திய அரசின் " மாணவர்களுக்கு மாற்றத்தை தரும் கல்வி நிறுவனம்' என்ற விருது கிடைத்துள்ளது. தமிழகத்தில் இந்த விருதை பெற்றுள்ள பள்ளி எங்களது பள்ளியே ஆகும். இந்த விருது கிடைத்ததையடுத்து இன்னமும் எங்கள் பொறுப்பு அதிகரித்துள்ளது. எதிர்கால இந்தியாவே மாணவர்கள்தான். எனவே சிறந்த மாணவர்களை உருவாக்குவோம்'' என்றார்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT