இளைஞர்மணி

கிளர்ந்தெழுங்கள் தோழர்களே! - 33: போட்டியிடு... வென்றுவிடு!

ஆர். நட​ராஜ்

"பாருக்குள்ளே நல்ல நாடு - எங்கள் பாரத நாடு' என்றார் மகாகவி பாரதி.

மன்னர்கள் கைப்பிடியில் பல்வேறு சமஸ்தானங்களாகப் பிரிந்திருந்த பாரத துணக்கண்டத்தை அகண்ட பாரதமாக பாவித்து தனது ஆன்மீக துறவறத்தால் "ஈசன் நம்முள் உள்ளான்' என்ற அத்வைத தத்துவத்தை பாரத துணைக்கண்டத்தின் நான்கு திசைகளிலும் பயணித்து உணர்த்தியவர் ஏழாம்நூற்றாண்டில் வாழ்ந்த ஆதி சங்கரர்.

பாரத துணைக்கண்டத்தின் கடலால் சூழ்ந்த தீபகற்பம் திராவிடம் எனப்பட்டது. தென்னாட்டில் பிறந்த சங்கரர், கடல் சூழ்ந்த தீபகற்பத்தை, பாகவத புராணத்திலும் மீமாம்ச தத்துவத்தை போதித்த ஞானி குமரில பட்டர் "தந்தரவாடிகா' என்ற தனது படைப்பில் உபயோகித்த "திராவிடம்' சொற்றொடரை பிரபலமாக்கினார்.

"செப்பு மொழி பதினெட்டு உடையாள் எனிற் சிந்தை ஒன்றுடையாள்' என்று வேற்றுமையில் ஒற்றுமையை என்றென்றும் நிலைநாட்டும் பாரத அன்னையை போற்றும் விதமாக பாரத நாட்டை பாருக்குள்ளே நல்ல நாடு என்றார் பாரதியார்.

மூன்றாவது உத்தம புருஷர், பாரத நாட்டின் ஆன்மிக வலிமையை உலகுக்கு உணர்த்தியவர், அவர் தான் சுவாமி விவேகானந்தர். இம்மூவர் பாரத மக்களின் மனதில் கலாசார ஒருமைப்பாட்டை விதைத்தவர்கள். அகவை நாற்பது முடிவதற்குள் மூவரும் மண்ணுலகை விட்டுப் பிரிந்தார்கள். ஆனால் அவர்களது காலச்சுவடுகள் காலங்காலமாக நிலைக்கும்.

சுவாமி விவேகானந்தரின் ஜெயந்தி ஜனவரி 12 -ஆம் தேதி தேசிய இளைஞர் தினமாக 1984-இலிருந்து அனுசரிக்கப்படுகிறது. 1995 -ஆம் வருடத்திலிருந்து இளைஞர் தினத்தன்று தேசிய இளைஞர் விழா தேசத்திலுள்ள இளைஞர்களை இணைக்கும் விழாவாகக் கொண்டாடப்படுகிறது. இளைஞர் விழாவுக்கு இந்த வருடம் 25 வருடம் பூர்த்தியானதை முன்னிட்டு நிகழ்ச்சிகளை பாரத பிரதமர் பாண்டிச்சேரியில் தொடங்கி வைத்தார். இதோடு இரண்டு முக்கிய விசேஷங்களும் உண்டு. சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்ட அரபிந்த கோஷ் அலிபூர் வெடிகுண்டு வழக்கில் விடுதலையான பிறகு விவேகானந்தரின் சிந்தனைகளால் கவரப்பட்டு ஆன்மிகப் பாதையில் பாண்டிச்சேரியில் ஆசிரமம் அமைத்து மக்கள் சேவையாற்றினார். இந்த வருடம் அவரது 150 ஆவது ஜெயந்தி . பாரதியார் 1908- இல் இருந்து 1910 வரை புதுவையில் வாழ்ந்து குயில் பாட்டு, பாஞ்சாலி சபதம், கண்ணன் பாட்டு உள்ளிட்ட பல படைப்புகளைத் தந்தார். அவரது நூறாவது நினைவு இந்த வருடம் அனுசரிக்கப்படுகிறது. இவை எல்லாவற்றையும் நினைவு கூறும் வகையில் புதுச்சேரியில் ஐந்து நாள் தேசிய இளைஞர் விழா சிறப்பாக நடைபெற்றது.

நரேந்திரனாகப் பிறந்து விவேகானந்தராக பரிமாண வளர்ச்சி பெற்ற விவேகானந்தரின் பயணம் அலாதியானது. விஸ்வநாத தத்தா கல்கத்தாவில் பெயர் பெற்ற வக்கீல். அவரது புதல்வன் நரேந்திரன், படிப்பிலும் , சங்கீதம் ஓவியம் போன்ற கலைகளிலும் சிறந்து விளங்கினான். நரேந்திரனின் அன்னை புவனேஷ்வரி தேவி, நரேந்திரனின் பல்கலை வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்தார். ஒருமுறை குடும்ப நண்பர் சுரேந்திரநாத் மித்தல் வீட்டில் ராமகிருஷ்ண பரம்ஹம்சர் அவர்களின் பிரவசனமும் ஸத் சங்கம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தக்ஷிணேஷ்வர் காளி கோயிலில் குடும்ப வாரிசு பூஜாரியாக காளியம்மனுக்கு சேவையாற்றி வந்தார் பரம்ஹம்சர். "எவ்வளவு காலம் வாழ்கிறேனோ அவ்வளவு காலம் கற்றுணர்கிறேன்' என்ற தனது நியமத்தின் அடிப்படையில் வேதங்கள் மற்றுமின்றி பிற மதங்கள் கோட்பாடுகளையும் கற்றறிந்த மகான் பரம்ஹம்சர். ராமகிருஷ்ணரின் பிரவசனத்தில் வழக்கமாக வரும் பாடகர் வராததால் நரேந்திரனைப் பாட சொன்னார்கள். அபாரமாக பாடி எல்லோருடைய பாராட்டையும் பெற்றான். குரு ராமகிருஷ்ணருக்கும் நரேந்திரன் மேல் ஒரு ஈர்ப்பு ஏற்பட்டது. அதுவே பிற்காலத்தில் குரு -பிரதம சிஷ்ய உறவாக வளர்ச்சி பெற்றது.

விவேகானந்தருக்கு ஆங்கில இலக்கியத்தில் அதிக ஈடுபாடு இருந்தது. வகுப்பில் ஆசிரியர்கள் சொல்லிக் கொடுப்பதை உன்னிப்பாகக் கவனிப்பார். அபார ஞாபக சக்தி. பல கேள்விகள் கேட்டு விவாதிப்பார். ஒரு சமயம் ஆங்கில கவிதைகள் வகுப்பில் கவிஞர் வில்லியம் வேர்ட்ஸ்வர்த்தின் "எக்ஸ்கர்ஷன்' என்ற தத்துவ கவிதையின் நயனங்களை பேராசிரியர் வில்லியம் ஹேஸ்டி விவரித்தார். அந்த கவிதையில் கவிஞர் உபயோகித்த "ட்ரான்ஸ்' சொல்லின் விளக்கம் விவாதத்துக்கு வந்தது. உணர்விழந்து ஆனந்த மயக்க நிலையில் சஞ்சரிப்பதைக் குறிக்கும் என்ற பேராசிரியரின் விளக்கம் விவேகானந்தருக்கு திருப்தி அளிக்கவில்லை. முடிவில் பேராசிரியர் ஹேஸ்டி இந்த சொல்லுக்கு முழுமையான விளக்கம் தக்ஷிணேஷ்வர் ஆசிரமத்தில் உள்ள ராமகிருஷ்ண பரமஹம்சரிடம் பெறலாம் என்று அறுவுறுத்தினார். அதைத் தொடர்ந்து விவேகானந்தர் தக்ஷிணேஷ்வர் சென்று ராமகிருஷ்ணரைச் சந்தித்தார்.

குருவுக்கு தெரியும், அவர் வருவார் என்று. ஏனெனில் முதல் சந்திப்பிலேயே விவேகானந்தரின் ஆழ்ந்த ஆன்மிகப் பிணைப்பை உணர்ந்து தனது பிரதம சிஷ்யனாக ஏற்றுக் கொண்டுவிட்டார். ஆனால் விவேகானந்தர் எளிதில் எதையும் ஏற்றுக் கொள்பவர் அல்லர். ராமகிருஷ்ணரோடு தொடர்ந்து பல விவாதங்கள் நடந்தன.

"நிஷ்டை நிலை என்றால் என்ன? எவ்வாறு அதை அடைவது? எல்லாராலும் அதனை அடைய முடியுமா? போன்ற பல சந்தேகங்கள் அவரை வாட்டிய வண்ணம் இருந்தன. ராமகிருஷ்ணரோ தான் தினமும் பரம்பொருளான தேவியைக் காண்பது மட்டுமல்ல, உரையாடுவதாகவும் அந்த நிலையை அடைவது அவரவர் நம்பிக்கையைப் பொறுத்தது என்றும் கூறியது விவேகானந்தருக்கு நம்பிக்கையைத் தரவில்லை. ஆயினும் அந்த தேடலுக்கு விடை பெற, தொடர்ந்து ஆசிரமம் வந்த வண்ணம் இருந்தார்.

"நம்பிக்கை இல்லை என்றால் ஏன் வர வேண்டும்?' என்று கூறிய பரமஹம்சர் விவேகானந்தரைக் கண்டுகொள்ளாமல், அவரைப் பார்ப்பதையும் தவிர்த்தார்.
இவ்வாறு விவேகானந்தரைச் சோதித்து பின்பு அழைத்து, "" நம்பிக்கையில்லாமல் ஏன் ஆசிரமத்துக்கு வருகிறாய்?'' என்று வினவ, அதற்கு விவேகானந்தர் தனது பக்தி மற்றும் பரம்ஹம்சரிடம் உள்ள அபரிதமான அன்பு ஒன்றுதான் காரணம் என்றார். அந்த பதிலில் திருப்தி அடைந்து, விவேகானந்தரின் மார்பில் தனது கால்களைப் பதித்து தனது ஆன்மீக தரிசனத்தின் காட்சியை விவேகானந்தருக்கும் அளித்தார். அந்த நிஷ்ட நிலையை உணர்ந்த நரேந்திரன், விவேகானந்தராக முழுமை பெற்று ஆன்மீக உலகில் பயணிக்கத் தொடங்கினார்.

ராமகிருஷ்ண பரமஹம்சரின் மறைவிற்குப் பிறகு பேலூர் மடப்பள்ளியில் தொடங்கி "மக்கள் சேவையே மகேசன் சேவை' என்பதை பெயரளவில் சொல்லாமல் முழுமையாக அதனைக் கடைப்பிடித்தார்.

"பாரத நாட்டின் வலிமை, அதன் ஆன்மீகத்தில் உள்ளது; மதங்கள் தாண்டிய இறையுணர்வு, பாரத மக்களிடம் ஐக்கியமாகி உள்ளது' என்ற உண்மையை தனது எழுச்சி உரைகள் மூலம் உணர்த்தினார். வேதங்கள் உபநிஷத்துகள் எல்லாவற்றையும் கற்றறிந்தது மட்டுமின்றி, அதில் உள்ள கருத்துகளை விவாதங்கள் மூலம் மற்றவர்களுக்கு எடுத்துரைத்தார்.

"வாழ்க்கையில் சவால்களை எதிர் கொள். வெற்றி பெற்றால் வழி நடத்தலாம்; தோல்வியடைந்தால் வழி காட்டலாம்' என்று எல்லா வாய்ப்புகளையும் துணிச்சலுடன் அணுக வழிகாட்டும் உயர்ந்த கோட்பாடே விவேகானந்தருடையது. முப்பதே வயதான விவேகானந்தர் 1893 - ஆம் வருடம் சிகாகோவில் நடந்த சர்வதேச மதங்கள் மாநாட்டில் "சகோதர... சகோதரிகளே' என்று தொடங்கி, ஆழ்ந்த ஆன்மீக கருத்துகளை சுருக்கமாக எடுத்துரைத்தபோது, கூடியிருந்த ஏழாயிரம் அயல் நாட்டு பிரதிநிதிகள் எழுந்து நின்று கரகோஷம் எழுப்பினர்.

விவேகானந்தருடைய மிகப்பெரிய பங்களிப்பு இளைய தலைமுறைக்கு நம்பிக்கையூட்டும் வகையில் ஊக்கம் அளித்த அவருடைய அறிவுரைகளே. "சிந்தனை தெளிவாக இருக்க வேண்டும்; அவை தான் நம்மை உருவாக்குகிறது. வார்த்தைகள் இரண்டாம் பட்சம். சிந்தனைகள் உயிரோட்டம் உள்ளவை. அவை வெகு தூரம் பயணிக்கும்' என்பது விவேகானந்தரின் தீர்க்கமான அறிவுரை.

"இந்தியாவின் எதிர்காலம் இளைஞர்கள் கையில் தான் உள்ளது. அவர்களைத் தரமான கல்வி மூலம் தயார் செய்ய வேண்டும்' என்று திடமாக நம்பினார். ஏழ்மையின் காரணமாக குழந்தைகள் பள்ளிக்குச் செல்ல முடியவில்லை என்றால். பள்ளிகள் குழந்தைகளிடம் செல்ல வேண்டும்' என்றார்.

"எல்லா சக்தியும் உன்னுள் உள்ளது. நீ எதை வேண்டுமானாலும் சாதிக்கலாம். அதை நம்ப வேண்டும். அதை விட்டு நான் வலிமையற்றவன் என்று மருண்டு விடாதே. யாருடைய தயவும் இல்லாமல் உன்னால் சாதிக்க முடியும். எழுந்து நில். உன்னுள் உள்ள ஆத்ம பலத்தை வெளிப்படுத்து. மனது வைத்தால் ஒருவரால் சாதிக்க முடியாதது ஒன்றுமில்லை' என்பதை இதை விட தெளிவாக உரைக்க முடியாது. இந்த கருத்தை மையமாக வைத்து இந்த வருடம் தேசிய இளைஞர் விழாவிற்கு "மனது வைத்தால் முடியும்' (இட் ஈஸ் ஆல் இன் தி மைன்ட்) என்ற எழுச்சியூட்டும் முழக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.

"இந்திய இளைய சமுதாயம், பாரம்பரிய இந்திய கலாசாரத்தையும் ஒளிமயமான எதிர்காலத்தையும் இணைக்கும் வளமான பாலமாக இருக்கிறது' என்பது விவேகானந்தரின் அறிவார்ந்த பார்வை.

உலகச் சந்தையில் இந்திய தொழில்துறை கடும் போட்டியில் வெற்றி ஈட்டி வருகிறது. அதே சமயம் புதிய கண்டுபிடிப்புகளிலும் இந்திய இளைஞர்கள் சாதித்து வருகிறார்கள். 2014 - இல் சராசரி நான்காயிரம் காப்புரிமை பதிவான இடத்தில் இப்போது நான்கு மடங்கு உயர்ந்து 15000-க்கும் மேற்பட்ட காப்புரிமைகள் பதிவாகின்றன.

தொடக்க நிறுவனங்கள், தொழில் அபிவிருத்திக்கு இன்றியமையாதது. 26 ஆயிரம் தொடக்க நிறுவனங்கள் இளைய சமுதாயத்தின் முயற்சியால் நாட்டில் வளர்ந்துள்ளன. நாட்டின் பிரச்னைகளை அலசி ஆராய்ந்து அதனைக் களைவதற்கான பெரும் பணியை இளைஞர்கள் செய்து வருகின்றனர். தொழில் செய்வதை எளிதாக்குவதற்கும், எளிதாக வாழ்க்கை அமையவும் எல்லாரும் ஒன்றிணைய வேண்டும்.

உலக ஜனத்தொகையில் ஏழில் ஒருவர் இந்தியர். அதில் முக்கால் வாசி இளைஞர்கள் என்ற பெருமை படைத்தது நம் நாடு. மத்திய அரசால் ஐந்து இளம்
விஞ்ஞானிகள் ஆராய்ச்சி மையங்கள், இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி அமைப்பில் (டிஆர்டிஓ) இளம் பொறியாளர்கள் தலைமையில் அமைக்கப்பட்டுள்ளது. இதில் முழுமையாக 35 வயதுக்கு உட்பட்ட பொறியாளர்கள் பணி செய்வார்கள். எல்லாத் துறைகளிலும் இளைஞர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. அதில் தமிழ்நாட்டு இளைஞர்கள் பயன் பெற முயல வேண்டும்.

"ஒரு நாளில் ஏதாவது பிரச்னைகளைச் சந்திக்காவிட்டால், நிச்சயமாக நீ தவறான பாதையில் பயணிக்கிறாய்!' - இது எவ்வளவு உண்மை. ஆனால் பலரது குணம் பிரச்னைகளைக் கண்டு துவள்வதாக உள்ளது. பிரச்னைகளை வளரவிட்டு பின்பு பெரும் சிக்கல்களை எதிர்கொள்வதாக இருக்கிறது. அதுவும் பொது வாழ்வில் இவ்வாறு பிரச்னைகளை எதிர்கொள்ளாமல் தவிர்க்கும் போக்கு, மக்களுக்கு எவ்வளவு பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன?

"அற்பனுக்கு பவிசு வந்தால் அர்த்த ராத்திரியில் குடை பிடிப்பான்' என்பதற்கு ஏற்ப கடமையை விட்டு விட்டு அதிகார துஷ்பிரயோகத்திலேயே பலர் குறியாக இருக்கிறார்கள்.

வலிமையே உயிர்
பலவீனம் உயிரிழப்பு
விரிவாற்றல் உயிர்
சுருங்குதல் உயிரிழப்பு
அன்பு உயிர்
துவேஷம், உயிரிழப்பு

விவேகானந்தரின் இந்த விவேக வரிகள், சமுதாயத்தை பிளவுபடுத்தும் வெறுப்பு அரசியல் கணைகள் தொடர்ந்து தொடுக்கப்படும் இந்த கால கட்டத்தில், நம்மை வழி நடத்த வேண்டும்.

சென்ற வாரக் கேள்விக்கு பதில்: முத்ரா - மைக்ரோ யூனிட்ஸ் டெலப்மெண்ட் & ரீ ஃபினான்ஸ் ஏஜென்சி பாரத பிரதமரால் ஏப்ரல் 8, 2015 - இல் தொடங்கப்
பட்டது.

இந்த வாரக் கேள்வி: ராமகிருஷ்ணா மிஷன் எந்த வருடம், யாரால் நிறுவப்பட்டது?

கட்டுரையாளர்: மேனாள் காவல்துறைத் தலைவர்
மேனாள் சட்டமன்ற உறுப்பினர்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒடிசா படகு விபத்தில் மேலும் 5 பேரின் உடல்கள் மீட்பு!

இந்திய வருகையை ஒத்திவைத்தது ஏன்? எலான் மஸ்க்

வாக்குப்பதிவு சதவீதம் குறைந்திருப்பது கவலையளிக்கிறது: தமிழிசை

மகாராஷ்டிரம், கர்நாடக பொதுக் கூட்டத்தில் மோடி இன்று உரை!

சிறையில் மனைவியின் உணவில் கழிப்பறை சுத்திகரிப்பான்: இம்ரான் கான் புகார்

SCROLL FOR NEXT