இளைஞர்மணி

தேசிய அளவில் தங்கப்பதக்கம் வென்றவர்கள்!

எஸ்.​ பால​சுந்​த​ர​ராஜ்

உடலுக்கும் உள்ளத்திற்கும் புத்துணர்ச்சி தருவது குத்துச் சண்டை விளையாட்டு. ஒரே எடை தரத்தில் உள்ள இரு வீரர்கள் கையுறை மற்றும் சில பாதுகாப்பு உபகரணங்களை அணிந்து கொண்டு, இரு கைகளை மட்டும் பயன்படுத்தி சண்டை இடுவதே குத்துச் சண்டையாகும். இதில் ஒருவர் அடித்து தனது எதிரியை வீழ்த்திவிட்டால், விழுந்தவர் நடுவர் 10 எண்ணுவதற்குள் எழுந்துவிட வேண்டும். அவ்வாறு எழ முடியாவிட்டால், அவரை வீழ்த்தியவர் வெற்றி பெற்றவர் ஆவர்.

இரு சண்டையாளர்கள் குறிப்பிட்ட சுற்றுக்குள் தொடந்து சண்டையிட்டு, அதற்கு பின்னரும் நிலைத்து நின்றால், அவர்கள் இருவரும் பெற்ற புள்ளிகளின் அடிப்படையில் நடுவர் வெற்றியாளரைத் தீர்மானிப்பார். இது ஓர் ஒலிம்பிக் விளையாட்டு.

கடந்த ஆண்டு டிசம்பர் 23 -ஆம் தேதி முதல் 25 - ஆம் தேதிவரை ஹரியானா மாநிலம் சோனிபட் என்ற ஊரில் நடைபெற்ற தேசிய அளவிலான குத்துச்சண்டைப் போட்டியில் கலந்து கொண்டு தூத்துக்குடியைச் சேர்ந்த 7 வீரர்கள் தங்கப்பதக்கமும், 3 வீரர்கள் வெள்ளிப் பதக்கமும் பெற்றுள்ளனர். இச்சாதனை குறித்து குத்துச்சண்டை பயிற்சியாளர் எம்.லட்சுமணமூர்த்தி நம்மிடம் பகிர்ந்து கொண்டதாவது:

""நான் தூத்துக்குடியில் கடந்த ஒன்றரையாண்டுகளாக குத்துச் சண்டை பயிற்சி அளித்து வருகிறேன். இதில் பயிற்சி பெற பிள்ளைகளும், பெற்றோர்களும் ஆர்வம் காட்ட வேண்டும். முக்கியமாக பெற்றேர்களின் பங்கு மிகவும் அவசியமாகும். என்னிடம் 70 பேர் பயிற்சி பெற்று வருகிறார்கள். 5 வயது முதல் 35 வயது வரையிலானவர்கள் பயிற்சி பெற்று வருகிறார்கள். இதில் 20 பெண்கள் உள்ளனர். பெண்களுக்கு தனி இடம் ஒதுக்கி பயிற்சி அளிப்போம்.

இவர்களுக்கு காலை 6 மணிமுதல் 8 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் 6 மணி வரையிலும் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. தொடக்கத்தில் குதித்தல் பயிற்சி, ஓட்டப்பயிற்சி அளிப்பேன். இதன் மூலம் கால்கள் பலப்படும். தொடந்து கையைக் கொண்டு எதிரில் எதிரிஇருப்பதாக நினைத்துக் கொண்டு குத்துவதற்குப் பயிற்சி அளிப்பேன். தொடந்து கையில் கையுறை அணிந்து கொண்டு, எதிரியுடன் மோதவிடுவேன்.

எப்படி எதிரியின் உடம்பில் காயம் ஏற்படாமல் குத்த வேண்டும்? எதிரி குத்த வந்தால் அதனை எப்படித் தடுக்க வேண்டும்? ஆகியவை குறித்து பயிற்சி அளிக்கப்படும். இந்த விளையாட்டில் நேரம் மிகவும் முக்கியமானது. விரைந்து எதிரியை தாக்கினால் வெற்றிபெற வாய்ப்பு அதிகம் என கூறி பயிற்சி அளிப்போம். மேலும் தோல்வியடைந்துவிட்டால், சோர்ந்து போகாமல் மீண்டும் வெற்றிக்கான வழி முறைகள் குறித்து யோசிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட உளவியல் பயிற்சியும் அளிப்போம்.

என்னிடம் பயிற்சி பெற்றவர்கள் 2021 ஜூலை மாதம் சென்னையில் நடைபெற்ற மாநில அளவிலான அளவிலான குத்துச்சண்டையில் 10 பேர் தங்கப்பதக்கம் பெற்று தேசிய அளவிலான குத்துச் சண்டை போட்டியில் கலந்து கொள்ள தகுதி பெற்றனர். தொடந்து அவர்கள் பத்துபேரும் ஹரியானா மாநிலம் சோனிபட் என்ற ஊரில் 2021 டிசம்பர் 23 முதல் 25 ஆம் தேதி வரை நடைபெற்ற தேசிய அளவிலான குத்துச்சண்டை போட்டியில் கலந்து கொண்டனர். இப்போட்டியை யூத் கேம்ஸ் பெடரேஷன் ஆப் இந்தியா என்ற அமைப்பு நடத்தியது. இப்போட்டிக்கு யூத் கேம்ஸ் நேஷனல் சேம்பியன் ஷிப் -2021 என பெயர்.

இப்போட்டியில் இந்தியாவின் பல மாநிலங்களிருந்தும் வீரர்கள் கலந்து கொண்டனர். இப்போட்டியில் என்னிடம் பயிற்சி பெற்ற முகில் மாதவ், அகாஷ் செல்வம், ஜேக ப் மோஸஸ், ஆகாஷ்குமார், தினேஷ்மோகன், சந்தன செல்வக்குமார், பாலாஜி உள்ளிட்டோர் பல்வேறு எடைப் பிரிவுகளில் தங்கப் பதக்கத்தைக் கைப்பற்றினர்.

முத்து சரவணன், முத்து மாணிக்கம், பெரிய மருத்து பாண்டி உள்ளிட்டோர் வெள்ளி பதக்கமும் பெற்று தமிழகத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர். இவர்கள் எதிரிகளை நேருக்கு நேர் சந்தித்து விளையாடி வெற்றி பெறுள்ளனர். எந்த ஒரு விளையாட்டிலும் ஆர்வம் இருந்து விளையாட்டினால் வெற்றி பெற இயலும். தொடர் பயிற்சி ,விடா முயற்சி புதிய முறைகளை கையாளுதல் இருந்தால் வெற்றி வசப்படும்'' என்றார் லட்சுமண மூர்த்தி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஈரானிய பிரதமர் இலங்கை வருகை!

உலகம் சுற்றும் ஏகே!

ஐபிஎல்: 100-வது போட்டியில் களமிறங்கும் கில்!

மத்திய அரசு நிறுவனத்தில் மேலாளர் வேலை வேண்டுமா?

ரூ. 81,100 சம்பளத்தில் சுருக்கெழுத்தர் வேலை வேண்டுமா?

SCROLL FOR NEXT