இளைஞர்மணி

இணையவழி விளையாட்டுகள்...: தீதும்... நன்றும்!

சுரேந்தர் ரவி

சிறுவர்கள், இளைஞர்கள் மத்தியில் விடியோ கேம்களுக்கு எப்பொழுதும் தனி வரவேற்பு காணப்படுவதுண்டு. தொழில்நுட்பம் படிப்படியாக வளர்ந்து வந்த காலகட்டத்தில் மைதானங்களில் விளையாடப்படும் விளையாட்டுகள் அனைத்தும் தொழில்நுட்ப வடிவம் பெற்றன. தொடக்கத்தில் ஒருசிலரே இணையவழி விளையாட்டுகளில் ஈடுபட்டு வந்தனர்.
கரோனா தொற்று பரவல் பெரும்பாலான இளைஞர்களை வீட்டுக்குள் முடக்கியதால் அவர்கள் இணையவழி விளையாட்டுகளை நோக்கி ஈர்க்கப்பட்டனர். பொழுதுபோக்குக்காக எனக் கூறி இணையவழி விளையாட்டுகளை ஆடத் தொடங்கிய இளைஞர்கள், தற்போது அவற்றுக்கு அடிமையாகி உள்ளதுதான் பெரும் சோகம்.
நாளின் பெரும்பாலான நேரத்தை இணையவழி விளையாட்டுகளுக்கே செலவிடுபவர்களும் உள்ளனர். முக்கியமாக பள்ளி செல்லும் சிறுவர்கள் மத்தியிலும் தற்போது இணையவழி விளையாட்டுகள் ஆக்கிரமித்துள்ளன. கைப்பேசிகளை வைத்துக் கொண்டு அவர்கள் சேட்டைகளில் ஈடுபடாமல் அமைதியாக இருப்பதால், பெற்றோர்களும் அதை வசதியெனக் கருதுகின்றனர். இணையவழி விளையாட்டுகளை ஊக்குவிக்கும் பெற்றோர்களும் இருக்கவே செய்கின்றனர்.
இணையவழி அடிமைத்தனம் தற்போதைய சூழலில் பல்வேறு பிரச்னைகளை ஏற்படுத்துகிறது. அதே வேளையில், அதனால் சில பயன்கள் ஏற்படுவதையும் மறுக்க முடியாது.
முதலில் இணையவழி விளையாட்டுகளால் ஏற்படும்பயன்கள் குறித்து ஆராய்வோம்.
மூளையின் சில பகுதிகளை இணையவழி விளையாட்டுகள் தொடர்ந்து புத்துணர்ச்சியுடன் வைத்திருப்பதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். முக்கியமாக பார்வை மூலமான புரிதலை ஏற்படுத்தும் மூளையின் பகுதிகளை அவ்விளையாட்டுகள் வலுப்படுத்துகின்றன.
அடுத்து, ஆழ்ந்த கவனத்துடன் செயல்படுவதை இணையவழி விளையாட்டுகள் உறுதி செய்கின்றன. செய்யும் செயலின் மீதான கவனத்தை அத்தகைய விளையாட்டுகள் மேம்படுத்துவதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
நினைவாற்றலையும் குறிப்பிட்ட அளவுக்கு இணையவழி விளையாட்டுகள் மேம்படுத்துகின்றன. விளையாடும்போது பார்க்கும் விஷயங்களையும் விதிகளையும் மறக்காமல் இருக்க வேண்டியிருப்பதால், அது நினைவுத்திறனை மேம்படுத்துவதாக ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.
இணையவழி விளையாட்டுகளின் காரணமாகக் கண்களுக்கும் கைகளுக்கும் இடையேயான தொடர்பும்ஒத்துழைப்பும் மேம்படுவதாக ஆய்வுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது விளையாட்டு சாராத மற்ற செயல்பாடுகளுக்கும் பலனுள்ளதாக உள்ளதென ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
தகவல்களை ஆராயும் திறனும் அவற்றின் மீது தீர்மானங்களை மேற்கொள்ளும் திறனும் இணையவழி விளையாட்டுகளால் அதிகரிப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இணையவழி விளையாட்டுகளின் மூலமாக மற்ற விவகாரங்களிலும் தகவல்களை முறையாக ஆராய முடிவதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
அதே வேளையில், இணையவழி விளையாட்டுகளால் பல்வேறு கெடுதல்களும் உள்ளன. முக்கியமாக, அவ்விளையாட்டுகளுக்கு அடிமையாவது வாழ்வில் பல்வேறு சிக்கல்களை ஏற்படுத்துகிறது. முதலில் இணையவழி விளையாட்டுகளுக்கு அடிமையாவது ஏன்? என்பதைப் புரிந்து கொள்ள வேண்டியுள்ளது. அதைப் புரிந்து கொண்டுவிட்டாலே அதற்கு அடிமையாவதில் இருந்து தப்பிவிட முடியும்.
இணையவழி விளையாட்டுகள் ஒருவித மகிழ்ச்சியான உணர்வைத் தோற்றுவிக்கின்றன. அவ்விளையாட்டுகளைத் தொடர்ந்து விளையாடும்போது"டோபமைன்' என்ற வேதிப்பொருள் மூளையில் சுரக்கிறது. அது மகிழ்ச்சியான உணர்வை ஏற்படுத்துகிறது. அந்த உணர்வைப் பெறுவதற்காகவே இணையவழி விளையாட்டுகளைத் தொடர்ந்து விளையாட வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டு, அதற்கு அடிமையாகும் சூழல் உருவாகிறது.
இணையவழி விளையாட்டுகளில் வெற்றி பெறுவதற்கேற்ப பரிசுகளும் வெகுமதிகளும் கிடைக்கின்றன. எதிர்பாராத நேரங்களிலும் வெகுமதிகள் கிடைக்கின்றன. இது விளையாட்டை விளையாடுபவரின் ஆர்வத்தைத் தூண்டி அவர்களை அடிமையாக்குகிறது.
இணையவழி விளையாட்டுகளைத் தொடர்ந்து விளையாடுவதால், அது உண்மையிலேயே நிகழ்வது போன்ற மாயத்தோற்றம் விளையாடுபவர்களுக்கு ஏற்பட்டு வருகிறது. அது பிடித்துப்போகவே அவர்கள் விளையாட்டுக்கு அடிமையாகின்றனர். இன்னும் சில சாகச விரும்பிகள் இணையவழி விளையாட்டுகளில் சாகசம் நிகழ்த்தும் உணர்வைப் பெறுகின்றனர். புதிய புதிய அனுபவங்களை விளையாட்டுகள் வழங்குவதால் அவர்கள் அவற்றுக்கு அடிமையாகின்றனர்.
இதனால் நடைமுறை வாழ்க்கையில் மிக மிகஅவசியமாகச் செய்ய வேண்டிய பணிகளின் மீதான கவனம் திசை திருப்பப்படுவதும், அன்றாட வாழ்க்கைப் பணிகளை உரிய நேரத்தில் செய்யாததால், பல்வேறு பிரச்னைகள் ஏற்படுவதும் தவிர்க்க முடியாதவை ஆகிவிடுகின்றன.
முன்னேற்றைத்தை நோக்கிப் பயணிக்க வேண்டிய சிந்தனைகளும், செயல்களும் இணையவழி விளையாட்டுகளில் முடங்கிப் போகின்றன.
நாணயத்தின் இருபக்கங்களைப் போல இணையவழி விளையாட்டுகளில் பயன்களும் பாதிப்புகளும் சேர்ந்தே உள்ளன. அவ்விளையாட்டுகளின் தன்மையைப் புரிந்துகொண்டு அவற்றுக்கு அடிமையாகாமல், மனதை ரிலாக்ஸ் செய்வதற்கு சிறிது நேரம் மட்டும் இணையவழி விளையாட்டுகளை இளைஞர்கள் விளையாட தங்களைப் பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

போராட்டம் கலைப்பு: மாணவர்கள் கைது!

கில்லி மறுவெளியீட்டு வசூல் இவ்வளவா?

மே 6-ல் திருச்சிக்கு உள்ளூர் விடுமுறை!

அமெரிக்க பல்கலை.களில் மாணவர்கள் - காவலர்கள் மோதல்: பாலஸ்தீன ஆதரவாளர்கள் கைது!

குருப்பெயர்ச்சி பலன்கள் - கன்னி

SCROLL FOR NEXT