இளைஞர்மணி

முக கவசம்...: புதிய ஆய்வுகள்!

கோமதி எம். முத்துமாரி

கரோனா இரண்டாம் அலையில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு கொண்டிருக்கும் இந்த சூழ்நிலையில்தான் உருமாறிய கரோனா வகையான ஒமைக்ரான் பரவத் தொடங்கியிருக்கிறது. ஒமைக்ரான், இதுவரை இல்லாத அளவுக்கு மிக வேகமாகப் பரவி வருவது மக்களிடையே அச்சத்தைஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து மூன்றாவது முறையாக ஊரடங்கு, கட்டுப்பாடுகள் என விதிக்கப்பட்டு வருகின்றன.

புதுப்புது வைரஸ்கள் வருவதும் பாதிப்பை ஏற்படுத்திவிட்டுச் செல்வதும் மனித வரலாற்றில் இருந்து வந்தாலும் அறிவியலும் தொழில்நுட்பமும் வளர்ச்சியடைந்த நவீன சூழ்நிலையிலும் இந்த கரோனா பெருந்தொற்று மிகப்பெரும் பாதிப்புகளை ஏற்படுத்திக் கொண்டு இருப்பது வியப்பாகத்தான் உள்ளது. எனினும் குறுகிய காலகட்டத்தில் கரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு தற்போது பயன்பாட்டிலும் இருந்து வருகிறது. கரோனா வைரஸ் தொற்று குறித்த தொடர்ச்சியான ஆய்வுகளும் நடந்து வருகின்றன.

கரோனா பரவத் தொடங்கிய காலத்தில், தடுப்பூசி இல்லாத நேரத்தில், தொற்றில் இருந்து தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தப்பட்ட முதல் பாதுகாப்பு நடவடிக்கை- முகக்கவசம் அணிவதும் சமூக இடைவெளியைப் பின்பற்றுவதும் கைகளை அவ்வப்போது கழுவுவதுமே. அடுத்தடுத்த கரோனா அலைகளுக்கும் இதுவே அடிப்படையாக இருந்தது.

நம்மையும் காப்பதுடன் நம்மைச் சுற்றியுள்ளவர்களையும் காக்க வேண்டுமெனில் இதனைக் கடைப்பிடித்துதான் ஆக வேண்டும்.

இந்நிலையில், இவற்றில் முதன்மையானதாக முகக்கவசம் இருக்கிறது. முகக்கவசம் அணிவதன் முக்கியத்துவம் குறித்து மருத்துவ வல்லுநர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். தொற்று பாதிப்பில் இருந்து முகக்கவசம் அதிகம் பாதுகாக்கிறது என ஆய்வுகள் கூறுகின்றன.

உலக சுகாதார நிறுவனம், முகக்கவசத்துடன் பொது இடங்களில் மக்கள் 3 அடி சமூக இடைவெளியை இன்னும் கடைப்பிடிக்கவும், பெரிய கூட்டங்களில் கலந்து கொள்வதைத் தவிர்க்கவும் அறிவுறுத்துகிறது.

இங்கிலாந்தில் முகக்கவசத்துடன் ஒரு மீட்டர் இடைவெளியைக் கடைப்பிடிக்கவும், ஸ்காட்லாந்தில் உணவகங்கள், மதுக்கடைகளில் ஒரு மீட்டர் இடைவெளியும் வேல்ஸ் நாட்டில் பொது இடங்களில் இரண்டு மீட்டர் இடைவெளியும் நடைமுறையில் உள்ளது. ஆனால், அமெரிக்காவில் இன்னும் 6 அடி வரை சமூக இடைவெளி உள்ளது - ஆனால் பள்ளிகளில் முகக்கவசம் அணிந்த குழந்தைகள் 3 அடி தூரத்தை கடைப்பிடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சில நாடுகளில் சமூக இடைவெளி அளவு குறைக்கப்பட்டிருந்தாலும் முகக்கவசம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஏனெனில், சமூக இடைவெளியைவிட முகக்கவசம் அணிவது வைரஸிலிருந்து பாதுகாக்கும் என்பதே இதற்கு காரணம். முகக்கவசம் அணிவது வைரஸ் நீர்த்துளிகள் பரவும் தூரத்தை 8 மடங்கு வரை குறைப்பதாக சமீபத்திய ஆய்வு தெரிவிக்கிறது. புளோரிடா பல்கலைக்கழக விஞ்ஞானிகள் முகக்கவசம் அணிவது எந்த அளவுக்கு பாதுகாப்பானது என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டனர். அதில், சில ஆச்சரியமான தகவல்கள் கிடைத்துள்ளன. முகக்கவசம் அணிந்தால் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்கத் தேவையில்லை என்பது தெரிய வந்துள்ளது.

முறையாக மக்கள் அனைவரும் முகக்கவசம் அணிந்தாலே 50% க்கும் மேலாக தொற்று பாதிப்பு குறைந்துவிடும் என்பது கண்டறியப்பட்டுள்ளது.

முகக்கவசம் அணியாததால் கரோனாவால் பாதிக்கப்பட்ட ஒருவர் பேசும்போது, வைரஸ் நீர்த்துளிகள், காற்றில் 4 அடி தூரம் வரை பயணிக்கும். அதேநேரத்தில் துணியால் ஆன முகக்கவசம் அணியும்போது தூரம் 2 அடியாகக் குறைந்தது.

ஆனால், மூன்றடுக்கிலான ஒருமுறை பயன்படுத்தக்கூடிய சர்ஜிக்கல் முகக்கவசங்களை பயன்படுத்தும்போது வைரஸ் 0.5 அடி தூரம் மட்டுமே காற்றில் பரவியது.

அதுவே, வைரஸால் பாதிக்கப்பட்ட ஒருவர் இருமுகிறார் என்றால், முகக்கவசம் அணியாத சூழ்நிலையில், 4.5 அடி வரையிலும், துணியால் ஆன முகக்கவசம் அணிந்திருந்தால் 2.2 அடியாகவும், மூன்றடுக்கு முகக்கவசம் அணிந்தால் 0.5 அடியாகவும் வைரஸ் நீர்த்துளிகள் பரவும் தூரம் குறைந்துள்ளது.

முகக்கவசம் அணிவது 80% வரை தொற்று பாதிப்பைக் குறைக்கும். சமூக இடைவெளி 6 அடிக்கு பதிலாக 3 அடியைக் கடைப்பிடித்தாலே போதுமானது. ஆனால் கட்டாயம் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும்.

சரியான முறையில் முகக்கவசம் அணிந்திருந்தால் சமூக இடைவெளி கடைப்பிடிப்பதை கைவிட்டு விடலாம் என்கிறது இந்த ஆய்வு.

அடுத்த கண்டுபிடிப்பாக, கரோனா பாதிக்கப்பட்ட ஒருவர் பயன்படுத்திய குளியலறையில் 20 நிமிடங்களுக்கு அந்த தொற்று இருக்கக் கூடும் என்றும் ஈரப்பதத்தில் தொற்றின் தீவிரம் அதிகம் இருக்கும் என்றும் இந்த ஆய்வு கூறுகிறது.

90 சதவீத ஈரப்பதத்தில், ஒரு குளியலறையில் 5 நிமிடங்களுக்கு தொற்றின் தீவிரம் 100 சதவிகிதமாகவும், ஐந்து நிமிடங்களுக்குப் பிறகு 50 சதவிகிதமாகவும் 20 நிமிடங்களுக்கு பிறகு 10 சதவிகிதமாகவும் இருக்கும்.

மற்ற சுவாச நோய்களைப் போலவே, கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களும் சுவாசிக்கும்போது, பேசும்போது அல்லது இருமும்போது வைரஸ் நிறைந்த நீர்த்துளிகள் வெளியாகின்றன. ஈரப்பதமிக்க சூழலில் மூன்று மடங்கு வரை பரவும் வைரஸ் துகள்கள், நுரையீரலில் இருந்து வெளியே வரும்போது காற்றில் கலந்து வறண்டு விடுகின்றன. ஆனால், காற்றில் நிலைநிறுத்தப்பட்டவுடன் மற்ற நபர்களுக்கும் பரவுகின்றன.

கரோனா காலம் எப்போது முடிவுக்கு வரும் என்பதை அறிய முடியாத சூழ்நிலையில் முகக்கவசமும் கட்டுப்பாடுகளும் இன்னும் அடுத்தடுத்த நிலைகளில் தொடரலாம். கரோனா பேரிடரிலிருந்து தப்பித்து ஆரோக்கியமாக வாழ வேண்டுமெனில் கண்டிப்பாக கட்டுப்பாடுகளை கடைப்பிடித்துதான் ஆக வேண்டும். கரோனா பெருந்தொற்று ஓயும்வரை முகக்கவசம் அணிவோம்!

மற்றவரையும் அணிய வைப்போம்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐபிஎல்: கடைசி ஓவரில் மும்பை த்ரில் வெற்றி!

திருவண்ணாமலை: 4,146 வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பிவைப்பு

உக்ரைன் அதிபரை கொல்ல ரஷியாவுடன் சதி? போலந்தை சேர்ந்த நபர் கைது

ஸ்ரீபாஞ்சாலி அம்மன் கோயிலில் தபசு மரம் ஏறும் நிகழ்ச்சி

பதுக்கப்பட்ட 2,000 புடவைகள் பறிமுதல்

SCROLL FOR NEXT