இளைஞர்மணி

டிஜிட்டல் மார்க்கெட்டிங்... புதிய போக்குகள்!

ந.முத்துமணி

அண்மைக்காலமாக, இணையதளங்களில் அதிக நேரத்தை செலவிடும் போக்கு மக்களிடையேஅதிகரித்தவண்ணம் உள்ளது. மக்களின் வாழ்க்கைமுறையில் ஏற்பட்டுள்ள இதுபோன்ற மாற்றங்கள், வாடிக்கையாளர்களைச் சென்றடைய நிறுவனங்கள் கடைபிடிக்கும் அணுகுமுறைகளை மாற்றிவிட்டன.

வாய்வழியாக பொருட்கள் அல்லது சேவைகளைப் பிரபலப்படுத்தும் பாரம்பரிய விளம்பரமுறைகளைப் பின்பற்றும் நிறுவனங்களும் இணையம் வழியாக விளம்பரம் செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. இணையத்தின் வழியே கையாளும் விளம்பர முறைகளோடு தொடர்பு உடைய சந்தைப்படுத்தலை டிஜிட்டல் மார்க்கெட்டிங் என்கிறார்கள்.

நவீன வாடிக்கையாளர்களைக் கவர்வதற்கு டிஜிட்டல் மார்க்கெட்டிங் தவிர்க்கமுடியாத ஊடகமாக மாறி வருகிறது. ஒரு நாளைக்கு ஒருவர் குறைந்தது 4 மணி நேரத்தை இணையத்தில் செலவழிப்பதாக அண்மையில் இந்தியாவில் எடுக்கப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.

அதனால் தான் டிஜிட்டல் சந்தைப்படுத்தலில் நிறுவனங்கள் குறிப்பாக நுகர்பொருள் வணிக நிறுவனங்கள் அதீத ஆர்வத்தை காட்டிவருகின்றன.

நன்மைகள்:

வணிகப்பொருள்களை எல்லை கடந்து விற்கலாம். பொருள் விற்பனைக்கான செலவினங்கள் கணிசமாக குறையும். இணையவெளியில் காணப்படும் விளம்பரங்களை நம்பி மக்கள் கொள்முதல் செய்யவும் தயங்குவதில்லை. தனிமனிதனை பொருள்களை வாங்க ஊக்கப்படுத்த இயலும். எவ்வித தடையும் இல்லாமல், எளிமையான முறையில் வர்த்தக நடவடிக்கைகள் நடந்தேறும்.

அதன் காரணமாகவே, அமேசான், ஃபிலிப்கார்ட் போன்றவை மக்களிடையே சக்கைப்போடுபோடுகின்றன. தனக்குபிடித்த பொருள்களின் விளம்பரங்களை மற்றவர்களிடம் எளிதில் பகிர்ந்து கொள்ளவும் முடியும். இதுவும் வாய்வழி விளம்பரத்தை போலத்தான்.

நிறுவனத்தின் பொருட்கள் பொதுமக்களின் கண்களில் பட்டுக்கொண்டே இருக்கும். ஒரு பொருளை அடிக்கடி கண்களில் காட்டுவதும் வாங்கும் ஆர்வத்தை தூண்டும் செயலாகும். இன்றைய இளம் தலைமுறை, எல்லாவகையான கொள்முதலுக்கும் இணையவழி விளம்பரங்களையே சார்ந்திருக்கிறார்கள்.

வகைகள்:

டிஜிட்டல் மார்க்கெட்டிங் இரண்டு வகையாக பகுக்கப்பட்டுள்ளன. ஒரு தொழில் அல்லது வணிக நிறுவனம் தனது பொருள் அல்லது சேவைகளை மற்றொரு தொழில் அல்லது வணிக நிறுவனத்திற்கு சந்தைப்படுத்துவது முதல் வகை. கச்சாப்பொருள், இயந்திரங்கள், துணைப்பொருட்கள் உள்ளிட்ட பல பொருட்கள், உற்பத்தியில் ஈடுபட்டிருக்கும் நிறுவனங்களுக்கு விற்பது இந்த வகைச் சந்தைப்படுத்தலாகும். நிறுவனத்தை நடத்துவதற்கு மற்றொரு நிறுவனத்தின் உற்பத்திப்பொருட்கள் கண்டிப்பாக தேவைப்படும். இந்த வகை சந்தைப்படுத்தலில், பொருட்களின் பயன்பாட்டுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்.

இதற்கு நேர் எதிராக, உற்பத்தி செய்யும் பொருட்களை அதை நேரடியாக நுகரும் வாடிக்கையாளருக்கு விற்பது இன்னொரு வகையாகும். இந்த வகை சந்தைப்படுத்துதலில் வாடிக்கையாளருடன் உணர்வுப்பூர்வமான பிணைப்பை கட்டமைப்பது பொருட்களை விற்க அடிப்படையாக உள்ளது. இங்கு தான் வணிகப்பெயருக்கு(பிராண்ட்) முக்கியத்துவம் கிடைக்கிறது. சோப், பற்பசை, சவரக்கத்தி, முகப்பூச்சு, சட்டை, வேட்டி, காலணி என்று எதுவாக இருந்தாலும், வணிகப்பெயர்களை சுட்டி வாங்கும் பழக்கம் வாடிக்கையாளர்களிடையே காணப்படுகிறது. அந்த பொருளோடு வாடிக்கையாளர் உணர்வுரீதியான பிணைப்பை வளர்த்துக்கொள்வது தான் அதற்கு காரணம்.

எந்த நிறுவனப் பொருளை வாங்க வேண்டும் என்று வாடிக்கையாளர் முடிவுசெய்வது போல, எந்த வகை வாடிக்கையாளரை குறிவைத்து விளம்பரங்களை செய்ய வேண்டும் என்பதும் முக்கியமாகும். விற்பது "மிட்டாய்' என்றால் குழந்தைகளை கவரும் வகையில் சந்தைப்படுத்தல் வியூகங்கள் அமைக்கப்பட வேண்டும்.

விளம்பர உத்திகள்:

பொருளை யாரிடம் விற்பது என்பதில் தெளிவு இருந்தால், இணையவெளியில் அதற்கான விளம்பரங்களை வகுப்பதும் எளிதாக இருக்கும். மேலும் முதலீடுகள்
விற்பனையாக மாறுகின்றதா? என்பதையும் டிஜிட்டல் மார்க்கெட்டிங்கில் துல்லியமாகக் கணக்கிடமுடியும்.

தேடுபொறி முன்னுரிமை:

கூகுள் போன்ற தேடுபொறியில் (சர்ச் இன்ஜின்) விரும்பிய பொருள் அல்லது சேவைகளை வழங்கும் நிறுவனங்களைத் தேடும்போது, வாடிக்கையாளரின் கண்களில் படும்படி நமது நிறுவன இணையதளம் அல்லது இணையப்பக்கம் இருக்க வேண்டும். இதை தேடுபொறி முன்னுரிமை என்கிறார்கள். இது தேடுபொறியில் இருந்து நமது நிறுவன இணையதளத்திற்கு வாடிக்கையாளரை
இழுக்கும் உத்தியாகும்.

உள்ளடக்க சந்தைப்படுத்தல்:

விற்பனை பொருட்களை யாருக்கு அல்லது எந்த வகையான வாடிக்கையாளருக்கு குறிவைக்கிறோம் என்பதை பொருத்து விளம்பர வாசகங்கள், வடிவமைப்புகள், கருத்தோட்டங்கள் அமைக்கப்பட வேண்டும். நாம் குறிவைத்துள்ள வாடிக்கையாளரை ஈர்க்கும் வகையில் விளம்பர வாகசங்கள் அமைந்தால், அது நிறுவனம் மற்றும் வாடிக்கையாளருக்கு இடையே நெருக்கத்தை அதிகமாக்கி, உறவை மேம்படுத்தி, வணிகத்தை பெருக்கும். வாசகரை வாடிக்கையாளராக மாற்ற இதைவிட நல்ல உத்தி இல்லை.

சமூக ஊடக சந்தைப்படுத்தல்:

முகநூல், சுட்டுரை போன்ற சமூக ஊடகங்களில் அதிக நேரத்தை மக்கள் செலவழிப்பதால், இத்தளத்தில் தென்பட பல நிறுவனங்கள் விரும்புகின்றன. வணிகப்பெயரை பிரபலமாக்குவதற்கும் அல்லது நேரடியாகபொருட்களை விற்பதற்கும் இதுதான் சிறந்த சந்தைப்படுத்தல் தளமாக உள்ளது. இதுபோன்ற தளங்களில் வாடிக்கையாளரின் பின்னூட்டத்திற்கு நிறுவனங்கள் பதிலளிக்க நேரிடும்.

பரிந்துரை சந்தைப்படுத்தல்:

தனது சமூகவலைதளம் அல்லது வலைப்பூவில் (பிளாக்) விற்பனை பொருள் அல்லது சேவையின் சிறப்புகளை பதிவிடுவதன்மூலம் வாடிக்கையாளர்களை ஈர்க்க உதவியாக இருக்க முடியும். அதுபோன்ற விளம்பரங்களில் ஈடுபடுவோருக்கு நிறுவனங்கள் தரகுத்தொகை என்ற பெயரில் கட்டணம் செலுத்தும்.

தனிமனித சந்தைப்படுத்தல்:

விற்பனை பொருள் அல்லது சேவை குறித்து வாடிக்கையாளருக்கு தனிப்பட்ட அனுபவங்களைத் தருவதை தனிமனித சந்தைப்படுத்தல் என்கிறார்கள். இனிப்புக்கடைக்கு சென்றால், வாங்க தூண்டுவதற்காக சிறுஇனிப்பு துண்டை தந்து சுவைக்க சொல்வதில்லையா? அது தான் தனிமனித சந்தைப்படுத்தல். ஆடைகள், அணிகலன்கள், சுவைக்கக்கூடிய உணவுகள், அலங்காரப்பொருட்கள், நறுமணப் பொருட்களை இவ்வகையில் சந்தைப்படுத்தலாம்.

மின்னஞ்சல் சந்தைப்படுத்தல்:

வாடிக்கையாளருக்கு நிறுவனப்பொருட்கள், சேவைகளை விளக்கி மின்னஞ்சல் வழியே கடிதம் எழுதுவது வாடிக்கையாளரை ஈர்க்கும். இந்த மின்னஞ்சலில் பொருள் அல்லது சேவையின் விவரங்கள் இடம்பெறும். அதில் மின்னஞ்சல் முகவரி, இணையதளமுகவரி, தொடர்பு எண்கள் கூட இருக்கும். இது நம்பகத்தன்மையை அதிகமாக்கி, வாடிக்கையாளரின் மனதை ஈர்த்து, விற்பனையை சாத்தியமாக்கலாம்.

வேலைவாய்ப்பு:

டிஜிட்டல் மார்க்கெட்டிங் விரிவடைந்துகொண்டே செல்வதால், வேலைவாய்ப்புகளுக்கும் குறைவில்லை. நிறுவனத்தின் விற்பனை இலக்கு மற்றும் செலவினத்தை பொருத்து, சரியான சந்தைப்படுத்தல் உத்திகளை நிறுவனங்கள் தேர்ந்தெடுக்கும். இணையதள மேம்பாடு அல்லதுவடிவமைப்பு, மின்-வணிகம், இணையதள பயன்பாட்டு மேலாண்மை, கணக்கு மேலாண்மை என பல வேலைவாய்ப்புகள் எண்ம சந்தைப்படுத்தல் சார்ந்து கொட்டிக்கிடக்கின்றன. டிஜிட்டல் மார்க்கெட்டிங்கில் ஈடுபடுவதற்கு சுறுசுறுப்பு, புத்தாக்கத்திறன், சிறந்த தகவல்தொடர்புத்திறன் மிகவும் அவசியமாகும்.

டிஜிட்டல் மார்க்கெட்டிங்கில் வாழ்வாதாரத்தை கண்டறிய விரும்புவோர் மக்கள் தகவல்தொடர்பு அல்லது டிஜிட்டல் மார்க்கெட்டிங் சார்ந்த இளங்கலை அல்லது முதுகலை பட்டப் படிப்புகளை படிக்கலாம். எந்த கல்வி பின்னணியை சேர்ந்தவர்களாக இருந்தாலும், டிஜிட்டல் மார்க்கெட்டிங்கின் புதுமையான போக்கை அறிந்து கொள்ள சில மாத நேரிடை பயிற்சி போதுமானது என்கிறார்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கறந்த பாலில் பறவைக்காய்ச்சல் வைரஸ்: உலக சுகாதார நிறுவனம் கடும் எச்சரிக்கை

நினைவுகொள்... மீண்டெழு... ரச்சிதா மகாலட்சுமி!

தேர்தல் புறக்கணிப்பு: உர ஆலையை மூட ஆட்சியர் உத்தரவு!

அதிகபட்ச வெப்பநிலை 5 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கக்கூடும்!

சேலையில் சிலிர்க்கும்... கேஜிஎப் நாயகி ஸ்ரீநிதி ஷெட்டி!

SCROLL FOR NEXT