இளைஞர்மணி

இணையவழி பணப் பரிவர்த்தனை... தேவை... எச்சரிக்கை!

18th Jan 2022 06:00 AM | சுரேந்தர் ரவி

ADVERTISEMENT


தொழில்நுட்பங்கள் வாழ்வை எளிமைப்படுத்தி வருகின்றன. நாளுக்கு நாள் தொழில்நுட்பமும் வளர்ந்து வருகிறது. புதிய தொழில்நுட்பங்கள் ஒருபுறம் வாழ்வை எளிமையாக்கினாலும் மறுபுறம் அதில் ஆபத்துகளும் இருக்கவே செய்கின்றன. பணப்பரிவர்த்தனையானது தொழில்நுட்பங்கள் காரணமாகப் பெரும் மாற்றங்களைச் சந்தித்துள்ளது.
முன்பெல்லாம் குறிப்பிட்ட நபருக்குப் பணம் செலுத்த வேண்டுமென்றால் வங்கிகளில் நீண்ட நேரம் வரிசையில் நின்று அவரது வங்கிக் கணக்கில் பணத்தைச் செலுத்த வேண்டும். கிட்டத்தட்ட பாதி நாள்களே இதற்கு வீணாகிவிடும். முன்பு தொழிலாளர்களுக்கான ஊதியமும் நேரடியாகவே வழங்கப்பட்டது. அந்தப் பணத்தை வங்கிகளில் செலுத்தவும் நீண்ட நேரம் ஆகும்.
ஆனால், தற்போது நொடிப்பொழுதில் உலகின் எந்த மூலைக்கும் பணத்தை அனுப்ப முடிகிறது. வங்கிகளுக்குச் சென்று நேரத்தை வீணடிக்கும் தேவை பெருமளவில் குறைந்துவிட்டது. இதில் பெரும் பயன் கிடைக்கிறது என்றாலும், இணையவழி பணப் பரிவர்த்தனை சார்ந்த மோசடிகளும் அதிகரித்து வருகின்றன.
புதிய தொழில்நுட்பங்களுக்கு இளைஞர்கள் எளிதில் அறிமுகமாகிவிடுகின்றனர். ஆனால், முதியவர்கள்அத்தொழில்நுட்பத்தைப் பழகிக் கொள்வதற்கு சற்று தாமதமாகிறது. அதனால், இணையவழிபண மோசடிகளால் முதியவர்களே அதிகமாகப் பாதிக்கப்படுவதாக நினைக்கலாம். ஆனால், தற்போதைய இணையவழி பண மோசடிகளில் சிக்கிக் கொள்பவர்கள் பெரும்பாலும் இளைஞர்களாகவே இருக்கின்றனர்.

பேராசையே பேரிழப்புக்கு முக்கியக் காரணமாக அமைகிறது. உங்களுக்கு லட்சக் கணக்கில் பரிசுவிழுந்துள்ளது, தள்ளுபடியில் குறைந்த விலையில் பொருள் கிடைக்கிறது எனப் பல்வேறு ஆசை வார்த்தைகளைக் குறுஞ்செய்தி மூலமாகவும், மின்னஞ்சல் வாயிலாகவும் அனுப்பி மோசடியாளர்கள் இளைஞர்களை வலையில் சிக்க வைக்கின்றனர். அவர்கள் கூறுவதை உண்மை என நம்பிச் செல்வோரிடம் வங்கிக் கணக்கு விவரங்களைப் பெற்று, மோசடியில் ஈடுபடுகின்றனர். அதிகமாகப் பணம் கிடைக்கும் என நம்பிச் செல்வோர் கையில் இருக்கும் பணத்தையும் இழந்துவிடும் சூழல் உருவாகிறது.
எனவே, "பரிசு பெற்றுள்ளீர்கள்; அதைப் பெறுவதற்காக இந்த வலைதள முகவரியைப் பின்தொடருங்கள்' என வரும் குறுஞ்செய்தியையோ, மின்னஞ்சலையோ எக்காரணத்தைக் கொண்டும் நம்ப வேண்டாம். அதிக சம்பளத்தில் வேலை உள்ளது என வரும் குறுஞ்செய்திகளையும் நம்ப வேண்டாம்.

வாடிக்கையாளர்களிடம் வங்கிக் கணக்கு எண், அதன் விவரங்கள், ஏடிஎம் அட்டை விவரங்கள், கைப்பேசிக்கு வரும் ஓடிபி எண் உள்ளிட்டவற்றை வங்கியில் இருந்து யாரும் கேட்கமாட்டார்கள். வங்கி மேலாளர்கள் பேசுகிறோம் எனக் கூறிக் கொண்டு இதுபோன்றவிவரங்களை யாராவது கேட்டால், ஏமாந்து கொடுத்துவிடக் கூடாது. வேறு யார் கேட்டாலும் இதுபோன்றவிவரங்களைக் கொடுக்கக் கூடாது.

இணையவழியில் பணம் செலுத்தும்போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். முக்கியமாக, புதியசெயலிகளைப் பதிவிறக்கம் செய்யும்போது அதீதகவனத்துடன் செயல்பட வேண்டும். தேவையில்லாத, அடையாளம் தெரியாத செயலிகளை ஒருபோதும்பதிவிறக்கம் செய்யக் கூடாது. குறிப்பிட்ட விஷயத்தைச் செய்வதாக அந்தச் செயலி குறிப்பிட்டிருந்தாலும், கைப்பேசியில் உள்ள தகவல்களையும், இணையவழியில் பணம் செலுத்தும்போது பதிவிடும் விவரங்களையும் அந்தச் செயலி மூலமாக திருடுவதற்கு வாய்ப்புள்ளது.

ADVERTISEMENT

இணையவழியில் பொருள்களை வாங்குவதற்கு முன் நம்பத்தகுந்த வலைதளங்களில் இருந்துதான் வாங்குகிறோமா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

சிலர் போலியான வலைதளங்களை உருவாக்கி அதன் மூலம் பொருள்களை விற்பதாகக் கூறி பணத்தைப் பெற்றுக் கொண்டு மோசடியில் ஈடுபடுவர்.

வங்கி ஏடிஎம் அட்டை, இணையவழி வங்கிச் சேவைகளைப் பெறுவதற்கான செயலி உள்ளிட்டவற்றின்கடவுச்சொல்லை அடிக்கடி மாற்றுவது அவசியம்.

கடவுச்சொல்லை மாற்றும் சிலர், அது மறந்துவிடக் கூடாது என்பதற்காகக் கைபேசியில் பதிவு செய்து வைத்திருப்பர். ஒருவேளை கைப்பேசியை வேறு யாரும் பயன்படுத்தும்போது அந்தக் கடவுச்சொல்அவர்களுக்குத் தெரிந்துவிட வாய்ப்புள்ளது.

கைப்பேசி தொலைந்துபோனால் அதில் இடம் பெற்றிருக்கும் கடவுச்சொல்லைப் பயன்படுத்தி மோசடியாளர்கள் பணத்தைத் திருடவும் வாய்ப்புள்ளது. எனவே, எளிதில் ஞாபகத்தில் நிற்கும் அதே வேளையில் மற்றவர்களுக்கு எளிதில் தோன்றாதகடவுச் சொல்லைப் பயன்படுத்துவது நல்லது. அந்தக் கடவுச்சொல்லை எந்த இடத்திலும் குறித்து வைக்க வேண்டாம்.
கடவுச்சொல்லை மறந்துவிட்டால் கூட வேறு சில வழிகளைப் பயன்படுத்தி குறிப்பிட்ட செயலியையோ ஏடிஎம் அட்டையையோ பயன்படுத்துவதற்கானவாய்ப்புகள் உள்ளன. கடவுச்சொல்லை மறந்துவிடுவோம் என்று நினைத்து, அதை எங்காவது குறித்து வைத்து அதன் மூலம் பணத்தை இழக்கவேண்டாம். எளிதில் ஏமாந்துவிடாமல் கவனமுடன் செயல்பட்டாலே, இணையவழி பணமோசடியில் இருந்து தப்பித்துவிட முடியும்.

ADVERTISEMENT
ADVERTISEMENT