இளைஞர்மணி

ஆன்லைன் கற்றல்... எதிர்கொள்ளுங்கள்... சவால்களை!

18th Jan 2022 06:00 AM | வி.குமாரமுருகன்

ADVERTISEMENT


கல்வி முறையில் பெரும் அளவில் மாற்றத்தை கரோனா ஏற்படுத்தியுள்ளது. மாணவர்கள் வீட்டில் இருந்தபடியே தாங்கள் விரும்பும் படிப்புகளையும், புத்தகங்களையும் தேர்வு செய்து படிக்கக் கூடிய சூழலுக்கு மாறிவிட்டனர். கல்வி முறையில் நெகிழ்வுத்தன்மையை விரும்பும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு இத்தகைய ஆன்லைன் கல்வி முறை மிகுந்தநன்மையை வழங்குகிறது என்று சொல்ல முடியும்.

ஏனெனில், மாணவர்கள் தங்கள் விருப்பப்படி சொந்தமாக அட்டவணை தயாரித்து படிக்கும் வாய்ப்பினை இந்த கல்விமுறை வழங்குகிறது. இருப்பினும் கூட, இத்தகைய ஆன்லைன் வகுப்புகளில் மாணவர்கள் பல்வேறு சிக்கல்களை எதிர்கொள்ளத்தான் செய்கிறார்கள். உலகம் முழுவதும் பரவிக் கிடக்கும் இணையதள வசதிகளால் ஆன்லைன் கற்றல் எல்லாராலும் பயன்படுத்தப்பட்டு வந்தாலும் கூட கற்றல் அனுபவத்தில் அவ்வப்போது எழும் சந்தேகங்களுக்கு தீர்வு கிடைப்பதில் சில பிரச்னைகள் இருக்கத்தான் செய்கின்றன.இப்படி எழும் பிரச்னைகளுக்கு தீர்வு தான் என்ன?

தகவமைத்துக் கொள்ளுதல்:

காலங்காலமாக வகுப்பறை கற்றல் சூழலில் பழகிய மாணவர்களுக்கு ஆன்லைன் கற்றலில் பல்வேறு பிரச்னைகள் இருக்கத்தான் செய்கின்றன. என்றாலும், புதிய கற்றல் சூழ்நிலையை மாணவர்கள் ஏற்றுக் கொள்ள பழக வேண்டும். "தகவமைத்துக் கொள்ளுதல்' என்ற வார்த்தை நீண்ட காலமாகப் பயன்படுத்தப்படும் வார்த்தையாகும். சூழலுக்கு ஏற்ப தங்களைத் தயார்ப்
படுத்திக் கொள்வது என்பது அதன் பொருள்.

ADVERTISEMENT

இணைய குறைபாடுகள்:

ஆன்லைன் கற்றலுக்கு அவசியமான உயர்தர இணைய இணைப்பு பல மாணவர்களுக்குக் கிடைப்பதில்லை. இதன் காரணமாக மெய்நிகர் கற்றல் மற்றும் நேரலை மூலம் கல்வி கற்பதில் பல்வேறு சிக்கல்கள் எழுகின்றன. பெரும்பாலான மாணவர்கள் தொழில் நுட்பம் குறித்தோ, கணினிப் பயன்பாடு குறித்தோ தெளிவான அறிவைப் பெற்றிருப்பதில்லை. இந்நிலையில் ஆன்லைன் வகுப்புகளில் தொழில்நுட்பச் சிக்கல்கள் பல எழத்தான் செய்கின்றன. இணைய குறைபாடுகளால் நேரலை கற்றலிலும், தகவல்களையும் வீடியோக்களையும் பதிவிறக்கம் செய்வதிலும் சிரமம் ஏற்படுகின்றன.

கணினி குறித்த அறிவு:

ஆன்-லைன் வழி கற்றலில் ஈடுபடும் அனைத்து மாணவர்களுமே கணினி குறித்த அறிவு உடையவர்களாக இருப்பார்கள் என்று சொல்ல முடியாது. பவர்பாயிண்ட், எம்எஸ் வேர்டு போன்ற அடிப்படை கணினி பயன்பாடுகள் கூட சிலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அத்துடன் ஆன்லைன் வகுப்பில் உள்நுழைவது, நேரலை வகுப்புகளைத் தொடர்ந்து பார்ப்பது, ஆசிரியருடன் இன்டராக்ட் செய்வது, அதற்குரிய ஐகான்களை தேர்வு செய்து பயன்படுத்துவது என பல்வேறு அடிப்படை விசயங்களே கூட சில மாணவர்களுக்கு தெரிந்திருப்பதில்லை.

மேலும் ஆன்லைன் மூலம் வழங்கப்படும் அசைன்மெண்ட்களை எப்படி சப்மிட் செய்வது என்பது கூட அவர்களுக்குப் பிரச்னைதான். (கரோனா காலத்தில் ஆன்லைன் மூலம் நடைபெற்ற தேர்வுகளில் ஆன்லைன் மூலம் தேர்வு எழுதிய மாணவர்கள் அந்த விடைத்தாள்களைப் பதிவேற்றம் செய்து சமர்ப்பிப்பதில் பெரும் சிரமத்தை எதிர்கொண்டனர். பின்னர் அவர்கள் விடைத்தாள்களை நேரடியாக கல்லூரிகளில் கொடுத்தது குறிப்பிடத்தக்கது). எனவே ஆன்லைன் கற்றலை நடத்துபவர்கள் மாணவர்களுக்கு போன் கால் மூலமாகவோ, இ மெயில் மூலமாகவோ அல்லது சாட் மூலமாகவோ தொழில் நுட்பச் சிக்கல்களைத் தீர்ப்பதற்கான உதவிகளை வழங்க வேண்டும்.

நேர மேலாண்மை:

ஆன்லைன் கற்றலில் நேர மேலாண்மை என்பது மிக முக்கிய அம்சம். வகுப்பறை கற்றலில் பயின்றவர்கள் ஆன்லைன் கற்றலுக்கு சரியான நேரத் திட்டமிடல் இன்றி சிரமப்படுகிறார்கள். அவர்களுக்கு நேரம் குறித்த திட்டமிடல்களுக்கான பயிற்சியை வழங்க வேண்டும். சிறப்பான கற்றலுக்கு முயற்சியும் , நேர திட்டமிடலும் மிக அவசியம்.

கவனச் சிதறல்:

இணையதளங்களில் வருகின்ற விளம்பரங்களால் கவனச்சிதறல் ஏற்படுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன. ஆனால், இவற்றைத் தவிர்த்து பொழுதுபோக்கிற்கு என்று நேரத்தை ஒதுக்கி வைத்துவிட்டு அந்த நேரத்தில் மட்டுமே அத்தளத்திற்குள் செல்ல வேண்டும். இதனால் நேரடி வகுப்புகள் பாதிக்கப்படாது.

பள்ளிச் சூழலில் கற்றலுக்கும், வீட்டுச் சூழலில் கற்றலுக்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன. உங்களைத் திசை திருப்ப ஏராளமான விஷயங்கள் வீட்டில் உள்ளது. ஆன்லைன் கற்றல் தொடர்பான விஷயங்களை குடும்பத்தில் உள்ள அனைவரும் தெரிவித்து, அவர்களால் உங்களுக்கு கவனச்சிதறல் ஏற்படாத வகையில் இருக்க அறிவுறுத்துங்கள். வீடியோ கால் மூலம் கற்றல் நடைபெறும்பொழுது தேவையின்றி அப்பகுதிக்குள் நுழைய வேண்டாம் என்று அன்பாகத் தெரிவித்து விடுங்கள். அத்துடன் நேர அட்டவணைப்படி ஓய்வு நேரங்களில் உங்கள் குடும்பத்தினருடன் செலவிடுங்கள். இதனால் கற்றலில் எந்தப் பாதிப்பும் ஏற்படாது.

ஒரு நேரத்தில் ஒரு வேலை:

சிலர் ஒரு நேரத்தில் பல வேலைகளை இழுத்துப் போட்டுக் கொண்டு செய்வார்கள். இதனால் எந்த வேலையும் நிறைவுபெற்று இருக்காது. எனவே, ஆன்லைன் கற்றலில் ஒரு சமயத்தில் ஒரு வேலையை மட்டுமே செய்து முடியுங்கள். இது வேலையை விரைவாக முடிக்க உதவும்.

சுய ஆர்வம் அவசியம்:

ஆன்லைன் கற்றலில் செல்ப் மோடிவேஷன் மிக அவசியம். சிலர் ஆன்லைன் கற்றலில் சிரமம் ஏற்பட்டவுடன் நம்பிக்கை இழந்து விடுகின்றனர். இதனால் அவர்கள் தத்தம் வாய்ப்பை இழந்துவிடுகின்றனர். எனவே பிரச்னை ஏற்பட்டவுடன் அதைச் சரி செய்வதற்கு கற்றல் வகுப்பை நடத்துபவர்களிடம் தொடர்பு கொண்டு பிரச்னைக்கு தீர்வு காண முயலுங்கள். கற்றல் செயல்பாடு முடியும் வரை ஆன்லைனை விட்டு வெளியே வராமல் அனைத்து விஷயங்களிலும், விவாதங்களிலும் பங்கெடுத்துக் கொள்ளுங்கள். தகவலை கேட்பதற்கும், பகிர்வதற்கும் எப்போதும் ஆன்லைனில் இணைந்திருங்கள். கிடைக்கும் ஓய்வில் ரெப்ரெஸ் செய்துவிட்டு அதே ஆர்வத்துடன் மீண்டும் இணையுங்கள்.

தகவல் தொடர்புத் திறன்:

இதுவரை நேரடி வகுப்புச் சூழலில் படித்த மாணவர்களுக்கு மெய்நிகர் சூழலில் படிப்பது சிரமம் தான். இருப்பினும் நமக்கு வசதிப்படும் பாணிகளை உருவாக்கிக் கொண்டு கணினி தொழில்நுட்பம் குறித்த பயிற்சியை நண்பர்களிடம் கேட்டு கற்றுக் கொண்டு அதன் மூலம் கற்றல் திறனை மேம்படுத்திக் கொள்ளலாம்.

சிலர் நண்பர்களுடன் சிறப்பாகப் பேசுவார்கள். ஆனால், ஒரு மேடையில் அவர்களைப் பேசச் சொன்னால் அவர்களால் பேச முடியாது. இதை ஸ்டேஜ் ஃபியர் என்பார்கள். அதேபோல்தான் நேரடி கற்றல் வகுப்புகளுக்கும், மெய்நிகர் கற்றல் வகுப்புகளுக்கும் உள்ள வித்தியாசம். எனவே, சந்தேகங்களை ஆன்லைன் மூலம் கேட்க யோசிப்பவர்கள், ஆசிரியர்களை நேரடியாகத் தொடர்பு கொண்டு தனிப்பட்ட முறையில் தங்களின் சந்தேகங்களை தெரிவித்து விளக்கங்களைக் கேட்கலாம். ஆசிரியர்கள் உங்கள் கற்றல் திறனை பொறுத்து இன்னும் சிறப்பாக விளக்குவதற்கான வாய்ப்புகளும் உள்ளன. மேலும், உங்களுக்குப் புரிந்து கொள்ளக் கூடிய சில எளிய வாசிப்பு பொருட்களுடன் அவர்கள் உங்களுக்கு உதவுவார்கள். எனவே, ஆன்லைன் வகுப்பு நிறைவடைந்த பின்னர் ஆசிரியர்களுடனும், மாணவ நண்பர்களுடனும் சற்று நேரத்தை ஒதுக்கி கற்றலை மேம்படுத்தலாம்.

விளைவுதான் முக்கியம்:

எந்த ஒரு செயலைச் செய்யும்போதும் அதனுடைய விளைவுதான் நமது வெற்றியைத் தீர்மானிக்கும். அதேபோல் கற்றலின் நோக்கமே அதை நாம் எவ்விதம் புரிந்து கொண்டோம் என்பதை பொறுத்துதான் அமையும். எனவே , நமது செயல்பாடுகள் குறித்து ஆசிரியர்களின் பின்னூட்டம் என்பது மிக முக்கியமானது. ஆன்லைன் வகுப்புகள் மூலம் ஆசிரியர்கள் நமது திறன் குறித்து தெரிந்து கொள்வதற்கான கேள்விகளுக்கு நாம் தெரிவிக்கும் கருத்து இப்போது அவர் நமது பலம் என்ன பலவீனம் என்ன என்பதை புரிந்து கொண்டு பலவீனத்தையும் பலமாக மாற்றுவதற்கான வழி காட்டுதலே வழங்குவார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT