இளைஞர்மணி

ஹபிள் தொலைநோக்கிக்கு வயது 31!

18th Jan 2022 06:00 AM | எஸ்.ராஜாராம்

ADVERTISEMENT

 

அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசாவின் ஹபிள் விண்வெளி தொலைநோக்கிக்கு இந்தப் புத்தாண்டு ஒரு சாதனை ஆண்டாகும்.

1990, ஏப்ரல் 25-ஆம் தேதி விண்வெளியில் நிலைநிறுத்தப்பட்ட இந்த ஹபிள் தொலைநோக்கி, கடந்த ஜனவரி 1-ஆம் தேதியுடன் 100 கோடி விநாடிகளை நிறைவு செய்துள்ளது. ஹபிள் செயல்படத் தொடங்கியதிலிருந்து கணக்கிட்டால் இது 31 ஆண்டுகளாகும்.

சக்திவாய்ந்த இந்தத் தொலைநோக்கி வானியலாளர்களுக்கும், விண்வெளி ஆர்வலர்களுக்கும் கடந்த மூன்று தசாப்தங்களாக விண்வெளியிலிருந்து ஏராளமான புகைப்படங்களைத் தந்துள்ளது. பல அரிய அறிவியல் கண்டுபிடிப்புகள், அரிய புகைப்படங்கள் கிடைத்ததற்கு ஹபிள் தொலைநோக்கியே காரணம். அது அளித்த தரவுகளைப் பயன்படுத்தி 19,000-க்கும் மேற்பட்ட மதிப்பாய்வுகள் செய்யப்பட்டுள்ளன.
அமெரிக்க விண்வெளித் திட்டம் மற்றும் ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் இடையிலான கூட்டுத் திட்டமாக இந்தத் தொலைநோக்கி மேம்படுத்தப்பட்டது.
பூமியிலிருந்து 547 கி.மீ. உயரத்தில் சுற்றி வரும் ஹபிள் தொலைநோக்கியின் தெளிவான புகைப்படங்களால் நமது பிரபஞ்சத்தை சிறப்பாகப் புரிந்துகொள்ளும் வாய்ப்பு விஞ்ஞானி
களுக்குக் கிடைத்துள்ளது. பூமியிலிருந்து செயல்படும் தொலைநோக்கிகளை விட மிகச் சிறப்பான பங்களிப்பை ஹபிள் அளித்துள்ளது.
ஹபிள் தொலைநோக்கியுடன் கடந்த டிசம்பரில் விண்வெளி ஆய்வுப் பணியில் இணைந்தது ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி. சுமார் 1400 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் பிரபஞ்சத்தின் முதல் நட்சத்திரங்கள், விண்மீன் திரள்கள் தோன்றியது குறித்த ஆய்வைப் பதிவு செய்யவுள்ளது ஜேம்ஸ் வெப்.
ஹபிள் தொலைநோக்கியின் கண்டுபிடிப்புகளின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள "நான்சி கிரேஸ் ரோமன்' விண்வெளி தொலைநோக்கியையும் விண்ணில் செலுத்தவுள்ளது நாசா. இத்தொலைநோக்கி ஹபிளுடன் இணைந்து செயல்படும்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT