இளைஞர்மணி

தோல்வியும் வேண்டும்!

18th Jan 2022 06:00 AM | கோமதி எம்.முத்துமாரி

ADVERTISEMENT

 

வெற்றிக்கான படிக்கட்டுகளில் இன்று பலரும் ஏறாததற்குக் காரணம் தோல்வி பயமே. தோல்வி பயத்தால் பலரும் முயற்சி எடுக்காமலேயே நிலைகுலைந்து போய்விடுகின்றனர். ஏன், தோல்வி அடைபவர்கள் மற்றுமின்றி தோல்வி வரும் முன்னே பயத்தால் தற்கொலை செய்துகொள்பவர்களின் எண்ணிக்கையும் இன்று அதிகரித்துக் கொண்டுதான் இருக்கிறது.
முடிவு வருவதற்கு முன்பே முடிவெடுத்தல் முற்றிலும் தவறு. அதிலும் வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு தோல்வியைஎதிர்கொள்ளும் தைரியம் இல்லாவிட்டால் வெற்றியாளர்களுக்கான அடிப்படைத் தகுதியே இல்லை என்றே கூறலாம்.
இன்றைய வெற்றியாளர்கள் அனைவரும் எடுத்தவுடன் சாதனை உலகத்துக்கோ புகழின் உச்சிக்கோ நேரடியாகச் சென்றுவிடவில்லை. உங்களுக்கு ஏற்படும் தோல்வி பயம் அவர்களுக்கும் ஏற்பட்டிருக்கிறது. பல ஆண்டுகளாக பல தோல்வி அனுபவங்களின் மூலம் பாடம் கற்றே அவர்கள் வெற்றியை அடைந்திருக்கிறார்கள்.
ஒரே ஒரு முயற்சியை மட்டும் செய்துவிட்டு அதில் தோல்வி அடைந்துவிட்டால், உடனே துவண்டு போவது நியாயமே இல்லை. வாழ்க்கையின் வெற்றிக்கு தோல்வியும் தேவை. தோல்வியை அடைந்தவனுக்கு மட்டுமே வெற்றியும் கிடைக்கும்.
மின்சாரத்தைக் கண்டறிந்த தாமஸ் ஆல்வா எடிசன் முதல் இன்றைய ஆப்பிள் நிறுவனத் தலைவர் ஸ்டீவ் ஜாப்ஸ் வரை சாதனையாளர்கள் அனைவரும்
தோல்வியில் மூழ்கித் திளைத்தவர்களே.
வாழ்க்கையில் வெற்றிகளும் அனுபவங்களும் ஒருசேர கிடைக்க வேண்டும். தோல்வியின் மூலமே அனுபவங்கள் கிடைக்கின்றன. அனுபவங்கள் மூலமே வெற்றி கிடைக்கிறது.

தோல்வி பயம் வேண்டாம்

முதலில் தோல்வி பயம் குறித்து பார்த்தால், இது பொதுவாக எல்லாருக்கும் இருக்கக் கூடியதுதான்.
"இதனைச் செய்து முடிக்க முடியுமா? முயற்சி செய்து தோல்வி அடைந்தால் பெரும் நஷ்டம் ஆகிவிடுமே?
மற்றவர்கள் என்ன நினைப்பார்கள்?' போன்ற கேள்விகள் எழலாம். இவையனைத்தையும் யோசித்துப் பார்த்தால் தோல்வி பயத்துக்கான காரணங்கள் எல்லாம் சுற்றியுள்ள சூழல்களே.
நம்மைச் சுற்றியுள்ள சூழல்களில் பொருளாதாரம் குறித்து மட்டும் மாற்றுத் திட்டத்தை வகுத்துக்
கொள்ளுங்கள். அதைத் தவிர்த்து மற்றவர்களின் கருத்து குறித்து நீங்கள் கவலை கொள்ள வேண்டிய அவசியமே இல்லை. வெற்றி பெற வேண்டும் என்று விரும்புபவர்கள் தோல்வியை எதிர்கொள்ளும் மனப்பக்குவத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும். நீங்கள் வெற்றி பெற்றுவிட்டால் மற்றவர்களின் முந்தைய விமர்சனங்கள் எல்லாம் ஒரு நொடியில் காணாமல் போய்விடும்.

ADVERTISEMENT

தோல்வியையும் மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்ளுங்கள்!

தோல்வியை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் வந்துவிட்டாலே வெற்றி எட்டும் தொலைவில் வந்துவிடும். தோல்வியையும் மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்ளுங்கள்.
ஒவ்வொரு முறை தோல்வியுறும்போது அதில் என்ன தவறு இருக்கிறது என்று பகுத்தறிந்து அடுத்த முறை அது நிகழாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு தோல்வியும் வாழ்க்கையில் எண்ணற்ற அனுபவங்களைக் கற்றுக்கொடுக்கின்றன. அனுபவங்கள் அதிகரிக்கும்போது வெற்றி எல்லாம் ஒரு பொருட்டே அல்ல.

நல்ல நண்பர்களைத் தேர்ந்தெடுங்கள்

ஒரு செயலைத் தொடங்குவதும் நம்மைச் சுற்றியுள்ள சூழல்களால் நிர்ணயிக்கப்படுகிறது. அந்தவகையில், உங்களுடைய யோசனைகளைச் செயல்படுத்த புத்திசாலித்தனமான நண்பர்களைத் தேர்ந்தெடுங்கள். வாழ்க்கையில் சாதிக்கத் துடிக்கும் கூட்டத்தோடு சேருங்கள்.
குறிப்பாக உங்களைச் சுற்றியுள்ள எதிர்மறை நபர்களை விலக்குங்கள். உங்களை கீழ்மைப்படுத்தும் நபர்களை வாழ்க்கையில் இருந்து அகற்றுங்கள். சிறந்த சுற்றுச்சூழல் இருந்தால் மட்டுமே கனவுகளை நனவாக்க முடியும்.

பின்தொடர்பவர்கள்

வாழ்க்கையில் சாதிக்க வேண்டும் என்று நினைப்பவர்கள், கண்டிப்பாக "ரோல் மாடல்' எனும் முன்மாதிரியாளரைக் கொண்டிருக்க வேண்டிய அவசியமில்லை. மாறாக, உங்களுக்கு நீங்களே முன் மாதிரியாக இருக்கலாம்.
அப்படியே முன்மாதிரியாளராக யாரையாவது பின்தொடர்ந்தாலும் அவர்கள் செய்யும் அனைத்தையும் நீங்கள் செய்ய வேண்டிய அவசியமில்லை. ஒவ்வொருவருக்கும் வெற்றியை அடைய ஒவ்வொரு வழி இருக்கிறது. எனவே, உங்களை உற்சாகத்தோடு செயல்படுவதற்கு தூண்டுபவராகவே அவர்களை நீங்கள் பார்க்க வேண்டும். அவர்களது அறிவுரைகளை, அனுபவங்களைக் கேட்கலாம்.

தோல்வியைக் கொண்டாடுங்கள்

வெற்றியைக் கொண்டாடுவது சகஜமானதுதான். ஆனால், முயற்சியில் தோல்வியடைந்துவிட்டால் துவண்டுவிடாமல் அதனைக் கொண்டாடுங்கள். நீங்கள் எடுத்த முயற்சிக்காக அந்த கொண்டாட்டம் இருக்க வேண்டும். முயற்சியில் இருந்து நீங்கள் கற்றுக் கொண்ட பாடங்கள் வாழ்க்கையின் முக்கிய அனுபவங்கள்.
சரியான நேரத்தில் உங்களுக்குத் தேவைப்படும் பொருள் உங்களை வந்துசேரும். ஆனால், அனுபவங்களைச் சேகரித்த பின்னரே நீங்கள் வெற்றியை பெறமுடியும். தோல்வியில் இருந்து வெற்றியை அடைவது எப்படி என சிந்தித்து அதனை நோக்கி பயணப்பட வேண்டும்.
நீங்கள் எடுக்கும் முயற்சிகளுக்கு உங்களை நீங்களே பாராட்டிக் கொள்ள வேண்டும். அதுபோல, முயற்சியை ஊக்குவிக்கும் நபர்களை அருகில் வைத்துக் கொள்வதும் வெற்றிக்கு உதவும்.

தோல்வியை எழுதி வையுங்கள்

வெற்றியை விட தோல்விகளும் நிராகரிப்புகளும்தான் வாழ்க்கையை ஒழுங்குபடுத்துபவை. வாழ்க்கையின் கடினங்களைப் புரிந்து கொள்ள உதவுபவை.
ஒரு திட்டத்தைச் செயல்படுத்தி வெற்றி காண உங்களுக்கு ஒரு வாரம், ஒரு மாதம், சில ஆண்டுகள் என ஆகலாம். அதில் நீங்கள் பெற்ற அனுபவங்களை எழுதி வையுங்கள். அடுத்த முயற்சி எடுக்கும்போது இந்த அனுபவங்களைப் படித்துவிட்டுச் செல்லுங்கள்.
அதுபோல ஒருவேளை உங்கள் முயற்சியில் நீங்கள் தோல்வி அடைந்தால் கூட, நீங்கள் எழுதி வைத்த அனுபவங்களே உங்களின் முயற்சியைப் பறைசாற்றும்.

புலம்ப வேண்டாம்

வாழ்க்கையில் ஒரு சிறிய கஷ்டம் வந்துவிட்டாலே அதுபற்றி புலம்புவோர் அதிகம். தோல்வி என்றால் சொல்லவே வேண்டியதில்லை. வெகு சிலரே அதனை எளிதாகக் கடக்கின்றனர். ஆனால், நம்பிக்கையை விடாமல் இருந்தால் தோல்வியைக் கண்டு புலம்ப மாட்டீர்கள்.
தோல்வியைக் கண்டு புலம்புவதால் உங்களுக்கு மனதளவில் பாதிப்புதான் ஏற்படுமே தவிர வேறு ஒரு பயனும் இல்லை. தோல்வி ஒரு பாடம் என்று அதில் உள்ள அனுபவங்களை மட்டும் எடுத்துக்கொண்டு கடந்துசென்றால் அதுவே வெற்றிக்கான வழி.
வாழ்க்கைக்கான நேரம் மிகக்குறுகியது. தோல்வியை நினைத்து புலம்புவதால் உங்கள் வெற்றிக்கான நேரம் தள்ளிப் போய்க் கொண்டிருக்கிறது என்றே அர்த்தம்.
தோல்வி பயத்தை விட்டொழித்து தோல்விகளை எளிதாகக் கடத்தலே வெற்றியை அடைவதற்கான முதல் தகுதி. நல்ல முயற்சியும் பயிற்சியும் இருந்து தோல்வி ஏற்பட்டால் அது வெற்றியை நோக்கிய முதல் பயணம் என்று வைத்துக் கொள்ளுங்கள். ஒவ்வொரு முறையும் விழுவதும் எழுவதற்காகவே! நம்பிக்கையுடன் தோல்வியை எதிர்கொள்ளுங்கள்! வாழ்க்கையில் தோல்வியும் வேண்டும்!

ADVERTISEMENT
ADVERTISEMENT