இளைஞர்மணி

மடிக்கும் மடிக்கணினி முதல் நிறம் மாறும் கார் வரை!

18th Jan 2022 06:00 AM | அ.சர்ஃப்ராஸ்

ADVERTISEMENT

 

உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்கள் பங்கேற்ற சிஇஎஸ்-2022 கண்காட்சி அமெரிக்காவில் கடந்த வாரம் நடைபெற்று முடிந்தது. வீட்டு உபயோகப் பொருள்கள் முதல் மக்களின் தினசரி பயன்பாட்டு பொருள்களில் நவீன தொழில்நுட்பத்தைப் புகுத்தி பார்ப்பவர்களை வியப்பில் ஆழ்த்துவதுதான் இந்த கண்காட்சியின் நோக்கம். இந்த கண்காட்சியில் நிறம் மாறும் கார், திரையையே மடிக்கும் மடிக்கணினி உள்பட எண்பதுக்கும்  மேற்பட்ட நவீன தொழில்நுட்பப் பொருள்கள் நிறைந்திருந்தன.

அறிதிறன் பேசிகளின் தொடுதிரைகளை மடித்து பயன்படுத்தும் தொழில்நுட்பம் 2019-இல் அறிமுகமாகி தற்போது பல்வேறு நிறுவனங்கள் அதனை வெளியிட்டு வருகின்றன.

2022-இல் தற்போது திரையை மடிக்கும் மடிக்கணினி அறிமுகமாகி உள்ளது. பொதுவாக மடிக்கணினியில் திரைக்கு கீழ் கீபோர்ட் இருப்பதால் அதை மடித்து வைப்பதற்கு தனியாக ஒரு பை தேவைப்படும்.

ADVERTISEMENT

முழுவதும் தொடு திரையுடன் கூடிய இந்த புதிய மடிக்கணியை, மடித்து பாதியை தட்டச்சு செய்வதற்கும், அல்லது மீதி பகுதியை கையடக்க (டேப்) கணினியாகவும் அல்லது தட்டச்சு செய்யும் கீ போர்டை தனியாக இணைத்தும் சாதாரண மடிக்கணினியாகவும் பயன்படுத்தலாம்.

புத்தக வடிவிலும் இதனைப் பயன்படுத்தலாம். அந்த அளவுக்கு இந்த மடிக்கணினி முழுவதும் தொடு திரையாக உள்ளது. சிஇஎஸ் கண்காட்சியில் இந்த மடிக்கும் திரைகொண்ட மடிக்கணினி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

ரத்த மாதிரிகளை வைத்து உடலின் சர்க்கரை அளவைக் கண்டுபிடிக்காமல், வெறும் விரல்களை வைத்தே கண்டுபிடிக்கும் புதிய கருவி, குவளை அளவு நீர் செலவில் பாத்திரங்களைக் கழுவும் இயந்திரம், டெஸ்லாவின் சூரிய மின் சக்தியைச் சேகரிக்கும் மேற்கூரைகள், பல்வேறு வீட்டுப் பணிகளை செய்யும் சிறு ரோபோக்கள், தானியங்கி டிராக்டர் என ஏராளமான   நவீன தொழில்நுட்ப பொருள்கள் இந்தக் கண்காட்சியில் இடம் பெற்றிருந்தன.

ADVERTISEMENT
ADVERTISEMENT