இளைஞர்மணி

கார் மருத்துவமனை!

18th Jan 2022 06:00 AM | வா.ஆதவன்

ADVERTISEMENT

 

கரோனா தொற்று நம்முடைய அன்றாட வாழ்க்கை முறையை மாற்றிவிட்டது. முதல் கட்ட கரோனா, இரண்டாம் கட்ட கரோனா என்று தொடர்ந்து இப்போது மூன்றாவது அலையும் வந்துவிட்டது. அரசுகளினால் போடப்படும் பொதுமுடக்கத்தினால், மக்கள் வெளியே செல்ல முடியவில்லை.
போக்குவரத்து வசதிகள் குறைவாகவே இருக்கின்ற இக்காலத்தில் அவசர மருத்துவ உதவிகளை நோயாளிகள் எப்படிப் பெறுவது?
அதிலும் நகரங்களில் கூட போக்குவரத்து வசதிகள் ஓரளவுக்கு இருக்கும். கிராமங்களில் சொல்லவே வேண்டியதில்லை. கிராமத்திலிருந்து குறைந்தது 50 கி.மீ. பயணம் செய்துதான் ஒரு மருத்துவமனையை அடைய முடியும்.
பெங்களூருவைச் சேர்ந்த டாக்டர் சுனில்குமார் ஹெப்பி, மக்கள் மருத்துவமனையை நாடி வருவதற்குப் பதிலாக, மருத்துவமனை மக்களைச் சென்றடையும் புதிய நடைமுறையைக் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாகச் செய்து வருகிறார்.
கடந்த 10 ஆண்டுகளில் 800க்கும் மேற்பட்ட மருத்துவமுகாம்களை மக்களை நேரில் தேடிச் சென்று நடத்தியிருக்கிறார். 1 லட்சத்து 20 ஆயிரம் நோயாளிகளுக்கு நேரில் சென்று மருத்துவம் செய்திருக்கிறார். அதுவும் இலவச மருத்துவம். இப்படிச் செய்ய வேண்டும் என்று சுனில்குமாருக்குத் தோன்றியது எப்படி? அவரே கூறுகிறார்:
""பெங்களூருவில் மல்லேஸ்வரத்தில் வாழ்ந்து வரும் நான் 2010- ஆம் ஆண்டு, ஓசூர் - சென்னை நெடுஞ்சாலையில் காரில் பயணம் செய்து கொண்டிருந்தேன். அப்போது சாலையில் ஒரு விபத்து ஏற்பட்டது.எனக்கு முன் சாலையில் சென்று கொண்டிருந்த ஓர் இளைஞன் விபத்துக்கு உள்ளாகி சாலையில் துடிதுடித்துக் கொண்டிருந்தான். நான் உடனே காரை விட்டு இறங்கி அவனுக்குத் தேவையான முதல் உதவிகளைச் செய்தேன். அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று அவனுக்குச் சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்தேன். அந்த இளைஞன் பிழைத்துக் கொண்டான்.
அதற்கு மறுநாள் அவனுடைய தாயார் என்னை மொபைலில் அழைத்து வீட்டுக்கு வரச் சொன்னார். நன்றியைத் தெரிவிக்க அவர் அழுதவாறு என் கைகளைப் பிடித்துக் கொண்டு பேசியது என்னைக் கலங்க வைத்தது. அப்போதுதான் நான், மருத்துவம் கிராமத்தில் வாழும் ஏழை எளிய மக்களுக்குச் சென்று அடைய வேண்டும் என்று நினைத்தேன். போக்குவரத்து வசதிகள் இல்லாத பகுதிகளில் வாழும் மக்கள் மருத்துவ வசதி பெற என்ன செய்வார்கள்?
நான் பெங்களூருவில் உள்ள பிஜிஎஸ் குளோபல் மருத்துவமனையில் வேலை செய்து கொண்டிருந்தேன். நல்ல சம்பளம் கிடைக்கும் வேலையை விட்டுவிட்டு, மக்கள் சேவையில் இறங்க நினைத்தேன். ஆனால் வீட்டின் பொருளாதார நிலை என்னைத் தடுத்தது.
நான் எம்பிபிஎஸ் படித்துக் கொண்டிருக்கும் காலத்தில் படிப்புச் செலவை என் பெற்றோரால் தர முடியாத நிலை இருந்தது. அதை ஈடுகட்டும்விதமாக, நான் படித்துக் கொண்டிருந்த காலத்திலேயே தனியார் மருத்துவமனைகளில் வேலை செய்து அங்கு கிடைக்கும் சம்பளத்தைப் படிப்புச் செலவுக்காகப் பயன்படுத்திக் கொண்டேன்.
எனவே வேலையை விட முடியாத சூழலில் சனி, ஞாயிறு ஆகிய இருநாள்களிலும் பெங்களூருவைச் சுற்றியுள்ள பகுதிகளில் மருத்துவச் சேவை செய்ய மக்கள் இருக்கும் இடங்களுக்கு நேரில் சென்றேன்.
இதற்காக என் காரை மருத்துவமனையாக மாற்றினேன். தேவையான மருந்து, மாத்திரைகள், குளூகோமீட்டர், ஆக்சிஜன் டேங்க், பிளட் பிரஷர் மானிட்டர், இசிஜி மெஷின் உள்பட மருத்துவம் செய்வதற்குத் தேவையான எல்லாப் பொருள்களும் இருக்கும் காராக என் கார் மாறியது.
2011 - இல் பிஜிஎஸ் குளோபல் மருத்துவமனையில் செய்த பணியை ராஜிநாமா செய்துவிட்டு, முழுநேரமாக நடமாடும் கார் மருத்துவமனையை மாத்ரு ஸ்ரீபவுண்டேஷன் என்ற அறக்கட்டள மூலமாக இயக்கத் தொடங்கினேன்.
தகவல் தொழில்நுட்பம் மிக வளர்ந்துவிட்ட இக்காலத்தில், வாட்ஸ்ஆப், முகநூல் ஆகியவற்றை நகரம், கிராமம் என்ற வேறுபாடின்றி எல்லா மக்களும் பயன்படுத்துகிறார்கள். நான் சமூக ஊடகங்களைப் பயன்படுத்திக் கொண்டேன்.
வாட்ஸ்ஆப், முகநூல் ஆகியவற்றில் நோயாளிகளிடம் இருந்து வரும் அழைப்புகளைத் தெரிந்து கொண்டு அந்த இடத்துக்கு காரை ஓட்டிச் செல்வேன். இப்படி குறைந்தது 120 கிலோ மீட்டர் தூரம் வரை ஒவ்வொருநாளும் எனது காரில் மருத்துவச் சேவைக்காகப் பயணம் செய்கிறேன்.
மருத்துவத்துக்காக நான் செய்யும் செலவை ஈடுகட்டுவது இதில் பிரச்னையாக உள்ளது.
நான் பெரும்பாலும் ஏழை, எளிய நகர்ப்புற மக்கள், கிராமப்புற மக்களுக்கு இலவச மருத்துவ சேவை செய்து வருவதால், மருத்துவத்துக்கான கட்டணத்தை அவர்களிடம் வசூலிப்பதில்லை. நோயாளிகள் தாமாகவே முன்வந்து ஏதாவது கட்டணம் கொடுத்தால் வாங்கிக் கொள்வேன். பணம் தர முடியாத நிலையில் உள்ள நோயாளிகளிடம் பணம் கேட்பதில்லை.
என் மருத்துவ சேவையைப் புரிந்து கொண்டு பலர் நன்கொடை அளித்தார்கள். சில மருத்துவர்கள், செவிலியர்கள் என்னுடன் இணைந்து சேவை செய்ய ஆர்வம் காட்டினார்கள்.
கரோனா தொற்று பெங்களூருவைச் சூழத் தொடங்கியதும் என்னுடைய பணிகள் அதிகமாகின. காலை 8.30 மணியிலிருந்து இரவு 11.30 மணி வரை நான் கரோனா தொற்றுள்ள நோயாளிகளை நேரில் சந்தித்து சிகிச்சை அளிக்கத் தொடங்கினேன். இதற்கிடையில் 2021- இல் எனது சகோதரர் கரோனா தொற்றால் இறந்துவிட்டார். இரண்டு நாளைக்கு எங்கும் வெளியே போகாமல் சும்மா இருந்தேன்.
நோயாளிகளிடம் இருந்து நிறைய அழைப்புகள் வந்த வண்ணமிருந்தன. மனது கேட்காமல், பழையபடி என் சேவையைத் தொடர்கிறேன்.
நோயாளிகளின் எண்ணிக்கை அதிகமானதால், நேரில் சென்று சிகிக்சை அளிக்க முடியவில்லை. பலருக்கு தொலைபேசி மூலம் மருத்துவ ஆலோசனைகள் வழங்குகிறேன்.
கரோனாவைப் பொருத்தவரை தொடக்க அறிகுறிகள் இருக்கும்போதே கண்டறிந்து சிகிச்சை செய்தால் நிச்சயம் நோயாளியைக் குணப்படுத்த முடியும். அதைத்தான் என்னால் இயன்ற அளவுக்கு செய்து கொண்டு இருக்கிறேன்'' என்கிறார் சுனில்.

ADVERTISEMENT
ADVERTISEMENT