இளைஞர்மணி

அலுவலகம்... விரட்டுங்கள் மனஅழுத்தத்தை!

11th Jan 2022 06:00 AM | ந.முத்துமணி

ADVERTISEMENT

 

மெய்வருத்தம் பாரார் பசிநோக்கார் கண்துஞ்சார் எவ்வெவர் தீமையும் மேற்கொள்ளார் - செவ்வி அருமையும் பாரார் அவமதிப்புங் கொள்ளார் கருமமே கண்ணாயினார் என்று நீதிநெறி விளக்கத்தில் குமரகுருபரர் கூறியிருப்பதை பலரும் சுட்டிக்காட்டி, வேலையின் முக்கியத்துவத்தை உணர்த்திக் கொண்டே இருப்பார்கள்.  

வேலை என்பது முடிவில்லாத நடைமுறை. வேலை நேரத்திற்கு பிறகும் அலுவலகத்தில் இருப்பவர் கடின உழைப்பாளி அல்ல. மாறாக, வரையறுக்கப்பட்ட நேரத்தில் வேலைகளை நிர்வகிப்பவரே, திறமைசாலி.

புதிதாக வேலைக்கு சேரும் இளைஞர்களிடம் வீட்டில் உள்ள பெரியவர்கள், "உங்கள் நிறுவனத்திற்காக வேலை செய்யாதீர்கள். 

ADVERTISEMENT

உங்கள் முதலாளி அல்லது மேலதிகாரிக்காக வேலை செய்யுங்கள்' என்று வழிகாட்டுவார்கள். இது ஏதோ பொருத்தமற்றதாகத் தெரியலாம்.  நம்நாட்டில் உள்ள நிர்வாகமுறைகளில் உள்ள ஒரு சில குறைபாடுகளே,  அவர்களை இப்படி வழிகாட்ட வைக்கின்றன.  வேலை செய்பவர் நிறுவனத்துக்காகவே வேலை செய்ய வேண்டும். 

குறிப்பாக நிர்வாகத்தில் தலைமைப் பொறுப்பில் உள்ளவர்களில் சிலர், எப்படி நிர்வகிக்க வேண்டும் தெரியாமல் மனம் போன போக்குப்படி நடந்து கொள்வதால் பிரச்னைகள் ஏற்படுகின்றன.  அப்படிப்பட்ட அலுவலகத்தில் வேலை செய்பவர்கள் தங்களை எப்படிக் காத்துக் கொள்வது? வேலைச் சூழ்நிலையை எப்படி தங்களுக்கு ஏற்ப மாற்றிக் கொள்வது?  இதோ சில வழிமுறைகள்: 

எல்லாம் எழுத்தில்:

அலுவலகரீதியான எல்லாத் தகவல் தொடர்பு அல்லது பரிமாற்றங்களை எழுத்தில் வடித்துக் கொள்வது நல்ல பழக்கம். மேலாளர் தனியாக அழைத்து வேலை இலக்குகளை நிர்ணயித்தாலும் அல்லது ஊதியம் குறித்து பேசினாலும், எல்லாவற்றையும் எழுத்தில் கொண்டு வந்துவிடுவது நல்லது. 

மின்னஞ்சல் வழியாக தகவல்களைப் பரிமாறிக் கொள்வதோடு, அவற்றை ஆவணப்படுத்திக் கொள்வதும் நல்லது. மனம்போன போக்கில் செயல்படும் மேலாளர்கள் வாய் வார்த்தைகளில் ஆணையிட்டதை,  சூழ்நிலைகள் மாறும்போது தாங்கள் அப்படிக் கூறவில்லை என்று சொல்வதற்கு வாய்ப்புகள் உள்ளன.  அவர் கூறியதை சரியாகப் புரிந்து கொள்ளாமல் தவறான செயல்முறைகளில் ஊழியர்கள் ஈடுபடவும் வாய்ப்பு உண்டு.  எனவே எதையும் எழுத்து வடிவில் வைத்திருப்பது பிரச்னைகளைத் தவிர்க்க உதவும். 

வேலை நேர மன அழுத்தம்:

வேலையின் தன்மை ஒவ்வொரு நிறுவனத்துக்கும் ஒவ்வொருவிதமாக இருக்கும். செய்யும் வேலையைப் பொருத்தும் வேலையின் தன்மை மாறுபடும். நிறைய வாடிக்கையாளர்களை தினம்தோறும் சந்தித்துப் பேசும் வேலைக்கும்,  ஓர் இயந்திரத்தை இயக்கி பொருள்களை உருவாக்கும் வேலைக்கும் நிறைய வேறுபாடுகள் இருக்கும்.  அந்தந்த வேலைக்கு ஏற்ற மாதிரியான மனஅழுத்தம் ஏற்படும்.  அப்படிப்பட்ட சூழலில், வேலையில் இருந்து சிறிதுநேரம் விடுவித்துக் கொண்டு, கவனத்தை திசை மாற்றி மன அழுத்தத்தில் இருந்து விடுபட  முயற்சி செய்யுங்கள். 

தேநீர் அருந்தச் செல்வது அல்லது சிறுநடைப்பயிற்சியில் ஈடுபடுவது அல்லது நெருங்கிய நண்பரை செல்பேசியில் அழைத்துப் பேசுவது மன அழுத்தத்தைப் போக்கும் சில வழிகளாகும்.

கடந்து செல்லுங்கள்: தவறு இழைக்காதவர் எவரும் இல்லை. எனவே, வேலையில் நேரும் தவறுக்கு உங்கள் தன்மதிப்பை கேள்விக்கு உட்படுத்திக் கொள்ளாதீர்கள். வேலைக்கும் தன்மதிப்புக்கும் இடையே கோடு வரைந்து கொள்வது நல்லது. பெரும்பாலான நேரங்களில் உங்கள் வேலையை பற்றி உங்கள் மேலாதிகாரி கூறுவது சரியாக இருக்கலாம். ஆனாலும், எல்லைகளை வரையறுத்துக் கொள்ளுங்கள். 

தவறிழைத்திருந்தால் ஏற்றுக்கொண்டு, கடந்து செல்லுங்கள். 

சுயமதிப்பீடு: 

உங்கள் வேலைத்திறன் குறித்து மேலாளர் எப்போதும் எதிர்மறையான கருத்து தெரிவித்துக் கொண்டிருந்தால், அதற்கு மதிப்பளிப்பதற்கு முன் உடன் வேலை செய்வோர், நண்பர்களிடம் உங்கள் வேலைத் திறனை மதிப்பிட கேட்கலாம். ஏன் உங்களையே கூட நீங்கள் கேட்டுக் கொள்ளலாம்.  சரியான சுயமதிப்பீடு ஒருவருக்கு இருந்தால்,  வெளியிலிருந்து கூறப்படும் எத்தகைய மோசமான விமர்சனங்களும் அவரைப் பாதிக்காது.  

மனம்விட்டுப் பேசுங்கள்: வேலையில் ஏற்படும் குறைகள் அல்லது தவறுகள் குறித்து மேலதிகாரிகளிடம் நேர்மையாக அல்லது வெளிப்படையாகப் பேசுவது நல்லது. உங்களிடம் எதிர்பார்க்கப்படும் வேலைத்திறன் குறித்து வெளிப்படையாக நடத்தப்படும் கலந்துரையாடல் மாற்றங்களுக்கு வழிவகுக்கும் என்றால், அதை முயற்சித்து பாருங்கள். பக்குவம் கொண்ட மேலதிகாரி, உங்கள் கருத்தைஆராய்ந்து, மறுமதிப்பீடு செய்யும் வாய்ப்புகளும் உள்ளன.  

அலுவலகத் தகவல் தொடர்பு: 

வேலை நேரத்தில் மட்டும் அலுவலக கைப்பேசி அல்லது தொலைபேசியைப் பயன்படுத்த வேண்டும். அலுவலகத் தொடர்புகளின் எல்லையை வரையறுக்க இது உதவும்.  வேலைக்கும் தனிப்பட்ட வாழ்க்கைக்கும்   உள்ள இடைவெளியைப்  புரிந்து கொள்ள இது உதவும். வீட்டில் இருக்கும்போது தனிப்பட்ட கைபேசியை மட்டுமே பயன்படுத்தலாம். 

அலுவலகத் தகவல் தொடர்பு சாதனங்களைப் பயன்படுத்தும் ஒருவருக்கு அலுவலகம், வீடு என்ற வேறுபாடில்லாத சூழ்நிலை ஏற்பட்டுவிட வாய்ப்புண்டு.
வேறு துறை:  ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தில் ஒரு குறிப்பிட்ட பிரிவில் நீங்கள் வேலை செய்யும்போது உங்களால் மேலாளர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்ற முடியாமல் இருந்தால், அதை நீங்கள் ஆராய்ந்து பார்க்க வேண்டும். பிரச்னை எங்கிருந்து தொடங்குகிறது என்று ஆராய்ந்து பார்த்தால், ஒரு வேளை அந்த குறிப்பிட்ட வேலை உங்களுடைய இயல்புக்குப் பொருந்தாமல் இருக்கலாம். அப்படிப் பொருந்தாமல் இருந்தால், உங்களுக்குப் பொருத்தமான வேலை உள்ள பிரிவுக்கு மாறி வேலை செய்வது சிறந்தது. இதனால் வேலை செய்யும் இடத்தில் ஏற்படும் பிரச்னைகளைக் குறைக்கலாம். மனஅழுத்தத்திலிருந்தும் தப்பிக்கலாம்.

ADVERTISEMENT
ADVERTISEMENT