இளைஞர்மணி

மினி ஜேசிபி... கிராமத்து இளைஞர்!

11th Jan 2022 06:00 AM | ச.பாலசுந்தரராஜ்

ADVERTISEMENT


இந்திய சாலையில் கார், லாரி, பேருந்து, டிராக்டர், ஜேசிபி, மினிலாரி, டிப்பர் லாரி உள்ளிட்ட பலவகையானவாகனங்கள் இயங்கிக் கொண்டிருக்கின்றன. இந்நிலையில் சாலையில் இயக்கப்படாதவாகனத்தைத் தயாரித்து ஒருவர் சந்தைப்படுத்தி வருகிறார் என்பது ஆச்சரியமானவிஷயமாக உள்ளது.

ஜேசிபி இயந்திரம் 1945-இல் இங்கிலாந்தில் ஜோசப் சிரில் பேம்ஃபோர்ட்என்பவரால் வடிவமைக்கப்பட்டது. பின்னர் அதில் பல தொழில் நுட்ப மாறுதல்கள் செய்யப்பட்டு, மண் அள்ளுவதற்கும், கட்டடங்களை இடிப்பதற்கும், முள்செடிகளை அகற்றவும்,கட்டிடங்களுக்கு அஸ்திவாரம் தோண்டவும் பல்வேறு விதங்களில் பயன்பாட்டில் உள்ளது.

பொதுவாக ஜேசிபி இயந்திரம் கட்டுமானத் தொழிலுக்குப் பெரிதும் உதவுகிறது.

இந்நிலையில் விவசாயத்திற்குப் பயன்படும் வகையிலும், விலை குறைவாகவும், சிறிய விவசாயிகளுக்கும் பயன்படும்விதமாக மினி ஜேசிபி இயந்திரத்தை தயாரித்தால் என்ன என்றுதிண்டுக்கல் மாவட்டம் கூட்டத்துப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ஏ.தாமஸூக்கு தோன்றியது.

ADVERTISEMENT

அதன் விளைவாக, தற்போது அவர் "டேம்கோ அக்ரோ மெஷின்ஸ்' என்ற பெயரில் மினி ஜேசிபி இயந்திரங்களைத் தயாரித்து சந்தைப்படுத்தி வருகிறார். இது குறித்து அவர் நம்மிடம் பகிர்ந்து கொண்டதாவது:

""நான் எம்பிஏ, பிஎட் படித்து முடித்ததும் ஜேசிபி இயந்திரத்திற்கான உதிரி பாகங்களை வாங்கி விற்பனை செய்யத் தொடங்கினேன். பின்னர் பழைய ஜேசிபி இயந்திரங்களை வாங்கி விற்பனை செய்தேன். அந்த சமயத்தில் பல விவசாயிகள் ஜேசிபி இயந்திரம் விலை சுமார் 35 லட்சம் வரை உள்ளது. அதனை இயக்க சிறப்பு பயிற்சி பெற்ற ஓட்டுநர்கள் தேவைப்படுகிறார்கள். எனவே மினி ஜேசிபி இயந்திரம் இருந்தால் விவசாயிகளுக்குப் பயன்படும் என கூறினர். இதையடுத்து, நாமே மினி ஜேசிபி இயந்திரம் தயாரிக்கலாமே என எண்ணிணேன்.

பின்னர் அதற்கான வடிவமைப்பு பணியில் ஈடுபட்டேன். காகிதத்தில் பலமுறை வரைகலை மூலம் முயற்சித்து மினி ஜேசிபி இயந்திரத்தை வடிவமைத்தேன். பிறகு லேத் பட்டறை அமைத்து, மினி ஜேசிபி இயந்திரத்தைத் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டேன். சுமார் 6 மாத கால உழைப்பின் பலனாக மினி ஜேசிபி இயந்திரம் உருவானது. அதை நண்பர் ஒருவரிடம் கொடுத்து சோதனை செய்து பார்த்தேன். அவர் கூறிய கருத்துகளைத் தொடர்ந்து ஒரு சில மாற்றங்களைச் செய்தேன். அதற்கு 2019- இல் முழு வடிவம் கொடுத்தேன். எனது தயாரிப்புக்கு ஐ.எஸ்.ஓ. தரச்சான்று மற்றும் காப்புரிமை பெற்றேன்.

பின்னர் முகநூல், யூடியூப் ஆகிய சமூக வலைதளங்களில் எனது தயாரிப்பு குறித்து விளம்பரம் செய்தேன்.

எனது தயாரிப்பான மினி ஜேசிபி இயந்திரத்திற்கு வாகன பதிவு தேவை இல்லை. விவசாயிகள் தங்களது விளைநிலங்களில் பாத்தி அமைக்க, சிறு குழி தோண்ட இதைப் பயன்படுத்தலாம்.

குடிநீர் குழாய் பதிக்க, மரக்கன்றுகள் நடுவதற்கு குழி தோண்ட, சீமைக்கருவேல மரங்களை அகற்ற இந்த இயந்திரத்தால் இயலும். விவசாயிகள் 4 அடி ஆழம் வரை உழுவதற்கு இதனைப் பயன்படுத்தலாம். மலைகளில் பலன் தந்து நிறைவடைந்த காப்பி செடிகளை தற்போது யானையை வைத்து பிடுங்கி வருகிறார்கள். இந்த இயந்திரம் மூலம் காப்பி செடிகளை சுலபமாக அகற்றிவிடலாம்.

ஹலோ பிளாக் தயாரிப்பாளர்களுக்கு கல் தூக்குவது, தெருக்களில் உள்ள குப்பைகளை அள்ளுவது என 5 வகையான வேலைகளைச் செய்யும்படி இயந்திரம் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதாவது டிராக்டரில் தேவையானதைப் பொருத்தி பயன்படுத்துவதைப் போல இதிலும் தேவையான வற்றை பொருத்தி பயன்படுத்திக் கொள்ளலாம். இதன் விலை சுமார் 3.50 லட்சம்தான்.

பொதுவாக நடைமுறையில் உள்ள ஜேசிபி இயந்திரத்தின் அகலம் எட்டரை அடியாகும். நான் வடிவமைத்திருக்கும் இயந்திரத்தின் அகலம் நாலோ கால் அடியாகும். இதன் மொத்த எடை சுமார் 500 கிலோ. இந்த இயந்திரத்தில் 10 முதல் 21 ஹெச்பி மோட்டார் பொருத்தப்பட்டுள்ளதால், டீசல் செலவு மிகவும் குறைவாகும்.

இதனை சாலையில் இயக்கக் கூடாது. வேலை இருக்கும் இடத்திற்கு மினிலாரி
அல்லது டிராக்டரில் இதனைக் கொண்டு செல்லலாம்.

இதற்கான உதிரிபாகங்கள் இந்தியாவில் அனைத்து இடங்களிலும் கிடைக்கும். வாடிக்கையாளர்கள் கேட்கும் வடிவத்தில் தயாரித்துக் கொடுக்கிறோம். கர்நாடகா, கேரளா, குஜராத், ஜார்கண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் வாடிக்கையாளர்கள் இயந்திரத்தை வாங்கி பயன்படுத்தி வருகிறார்கள். இதனை இயக்க 30 நிமிடத்தில் பழகிக் கொள்ளலாம். தற்போது மின் மோட்டார் இணைத்து மினி ஜேசிபி இயந்திரம் தயாரித்து வழங்கி வருகிறோம்.

என்னைப் போல சுயதொழில் செய்ய நினைக்கிற இளைஞர்கள் தெரிந்து கொள்ள வேண்டியது இதைத்தான்: புதிய முயற்சி, புதிய சிந்தனை, வெற்றியைத் தரும். அடுத்து நுகர்வோர் என்ன எதிர்பாக்கிறார்கள் என இளைஞர்கள் ஆய்வு செய்து அந்தத் தொழிலை தொடங்கி ஆர்வத்துடனும், முயற்சியுடனும் உழைத்தால் வெற்றி பெறலாம்'' என்கிறார் தாமஸ்.

ADVERTISEMENT
ADVERTISEMENT