இளைஞர்மணி

பழைமை... புதுமை...  சுற்றுச்சூழல் பாதுகாப்பு வீடு!

வா. ஆதவன்


"கல்யாணத்தைப் பண்ணிப் பார்... வீட்டைக் கட்டிப் பார்' என்று சொல்வார்கள். வீடு கட்டுவது என்பது அவ்வளவு கடினமான பணி என்பதால்தான் அப்படிச் சொல்கிறார்கள். அதிலும் சுற்றுச் சூழலுக்குப் பாதிப்பில்லாத  வீட்டைக் கட்டுவதென்றால்...?

பெங்களூருவில் வாழும் தமிழ்நாட்டைச் சேர்ந்த 29 வயதான இளம்பொறியாளர் பாலசுந்த கெளசிக், சுற்றுச் சூழலுக்குப் பாதிப்பில்லாத ஒரு வீட்டைக் கட்டியிருக்கிறார்.   கம்பத்தில் இருந்து குமுளி செல்லும் பாதையில் உள்ள தனது சொந்த ஊரான ஹனுமந்தன்பட்டியில் அந்த வீட்டைக் கட்டியிருக்கிறார்.   அதென்ன சுற்றுச் சூழலுக்குப் பாதிப்பில்லாத வீடு? என்ற கேள்வியுடன் அவரை அணுகினோம்.

""நான் கோவையில் உள்ள தமிழ்நாடு என்ஜினியரிங் காலேஜில் பி.ஆர்க் படிப்பை முடித்ததும்,  2 ஆண்டுகள் பெங்களூருவிலும், 6 மாதங்கள் மும்பையிலும், இரண்டரை  ஆண்டுகளுக்கும் மேலாக துபாயிலிலும்  கட்டுமானப் பணி தொடர்பான வேலை செய்தேன். அங்கு கிடைத்த அனுபவம், அறிவு ஆகியவற்றின் அடிப்படையில்,  நம்நாட்டுக்குப் பொருந்தக் கூடிய, சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பில்லாத வீடுகளைக் கட்ட வேண்டும் என்று முடிவு செய்தேன். அதனால் 8 மாதங்களுக்கு முன் "அர்பன் ஆர்க்கிடெக்' என்ற கட்டுமான நிறுவனத்தை பெங்களூருவில் தொடங்கி நடத்தி வருகிறேன். 

வீடு  நமது வாழ்க்கையோடு நெருங்கிய தொடர்பு உடையது. உணர்வுகளோடு தொடர்பு உடையது.  ஆனால் வீடு ஒவ்வொரு பகுதிக்கும் ஒவ்வொருவிதமாக உள்ளது. 

கேரளாவில் எடுத்துக் கொண்டால்,  தோட்டங்களுக்கு நடுவே தனித்தனி வீடுகள் அதிகம் இருக்கும்.  தமிழ்நாட்டில் தெருக்களில் வீடுகள் இருக்கும்.  

சிங்கப்பூரில் எல்லா நாள்களும் மழை பெய்வதால்,  அதற்கேற்ற வகையில் வீடுகள் கட்டப்பட்டிருக்கும். 

துபாயில் வெப்பம் அதிகம்.  அங்கே பஸ் நிறுத்தத்தில் கூட குளிர்சாதன வசதி செய்திருப்பார்கள். நமது தமிழ்நாட்டிலோ மழை, வெயில் இரண்டுமே சமஅளவில் இருக்கும். 

ஒரு வீட்டைக் கட்டும்போது இவ்வளவையும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். மழையையும், வெயிலையும் அனுபவிக்கும் விதமாக நமது வீடு  அமைக்கப்பட வேண்டும். 

ஏசியை அதிகம் பயன்படுத்தினால் அதில் இருந்து வெளியேறும் கார்பன் டை ஆக்ûஸடு சுற்றுச்சூழலைப் பாதிக்கும்.  வீடு கட்டும்போது கான்கிரீட்டை அதிகம் பயன்படுத்தினால் அதிலிருந்தும் கார்பன் டை ஆக்ûஸடு வெளியேறும்.
 தண்ணீரைச் சிக்கனமாகச் செலவழிப்பது,  மழைநீரைச் சேகரிப்பது,  வீட்டின் கழிவுகள், மனிதக் கழிவுகளை பூமியில் கலக்காமல் மறுசுழற்சி செய்வது, குறைந்த அளவு மின்சாரத்தைப் பயன்படுத்துவது என்ற அடிப்படையில் நாம் வீட்டை அமைத்துக் கொண்டோம் என்றால், சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் பாதிப்பு  அதிக அளவில்  குறையும். 

இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு, நான் எனது சொந்த ஊரான ஹனுமந்தன்பட்டியில் எங்களுடைய தோட்டம் இருக்கும் பகுதியில் 3000 ச.அடி அளவில் வீடு கட்டியிருக்கிறேன். 

இந்தப் பகுதியில் உள்ள மக்கள் பயன்பட வேண்டும் என்பதற்காக வீடு கட்டுவதற்கான எல்லாப் பொருள்களையும் பத்து கிலோமீட்டர் சுற்றளவிலேயே வாங்கினேன்.  இயந்திரங்களால் செய்யப்படும் டைல்ஸ்களுக்குப் பதிலாக கைகளால் தயாரிக்கப்படுமம் ஆத்தங்குடி டைல்ஸ்களையே வீடு கட்ட பயன்படுத்தியிருக்கிறேன். 

ஏசியைப் பயன்படுத்தாமல் இருக்க,  வீட்டை அதிகம் வெப்பமடையாததாகக் கட்ட வேண்டும்.  அதற்கு வீட்டின் மேல்தளத்தில் கான்கிரீட் போடும்போது மண் பானை மூடிகளை இடையிடையே வைத்து பூசினோம். 

அதுபோன்று செங்கல்களை வைத்து வீடு கட்டும்போது முழுக்க முழுக்க கான்கிரீட் கலவையைப் பயன்படுத்தாமல் இடைவெளிவிட்டுப் பயன்படுத்தினோம். கான்கிரீட்டின் பயன்பாட்டைக் குறைப்பதற்காக தூண்கள் (பில்லர்) இல்லாமல் வீட்டைக் கட்டியிருக்கிறோம்.  பிற வீடுகளுக்குப் பயன்படுத்தப்படும் கான்கிரீட்டின் அளவில் 30 சதவீதம் அளவுக்குக் குறைவாகவே பயன்படுத்தியிருக்கிறோம்.   

வீட்டின் நடுவே திறந்த வெளியுள்ள முற்றம் அமைத்திருக்கிறோம்.  சூரிய ஒளி, மழை எல்லாம் வீட்டுக்குள் நேரடியாக விழும். காற்றும் வரும்.  இப்படி எல்லாம் வீட்டை அமைத்ததனால் சாதாரண வீடுகளை விட வெப்பம் குறைவாகவே இந்த வீடு இருக்கிறது.  இதனால் வீட்டுக்கு ஏசி தேவையில்லை.

மின்சாரத்தின் பயன் பாட்டைக் குறைக்க சோலார் 

மின்சாரத்தை அதிகமாகப் பயன்படுத்துகிறோம்.  மிக்ஸி, கிரைண்டர், வாஷிங்மெஷின், ரெப்ரிஜிரேட்டர் ஆகியவை தவிர எல்லாவற்றிற்கும் சூரிய ஒளி மின்சாரத்தையே பயன்படுத்துகிறோம். 70 சதவீதம் சோலார் மின்சாரத்தையே பயன்படுத்துகிறோம். 

ஒவ்வொரு வீட்டின் முன்புறத்தில் திண்ணை அமைக்கும் பழக்கும் நம் முன்னோர்களுக்கு இருந்தது. நான் கட்டியிருக்கும் வீட்டிலும் திண்ணை இருக்கிறது. 

தோட்டத்தில் நடுவே அமைந்துள்ள வீடு என்பதால்,  இங்கு வளர்க்கப்படும் மாடுகளின் சாணத்தைப் பயன்படுத்துவதற்காக  பயோ கேஸ் பிளான்ட் ஒன்றை அமைத்திருக்கிறோம். அதில் சாணத்தைப் போட்டுவிட்டால், அதிலிருந்து வெளி வருகிற எரிவாயுவை சமைப்பதற்குப் பயன்படுத்திக் கொள்ளலாம். அதுபோன்று சமையல் அறை கழிவுகளையும்  பயோகேஸ் டேங்க்கில் போட்டுவிட்டால், 1 மணி நேரத்துக்குள் மீதேன் வாயு உற்பத்தியாகிவிடும். அந்த வாயுவை சமையல் செய்யும் எரிவாயுவாகப் பயன்படுத்தலாம். 

நாம் குளிக்கும், துவைக்கும், பாத்திரம் கழுவும் 

தண்ணீரை எல்லாம் தூய்மைப்படுத்தி,  தோட்டத்துக்குப் பயன்படுத்தவும் ஏற்பாடு செய்திருக்கிறோம். பெய்யும் மழைநீர் வீணாகாமல் இருப்பதற்காக அமைத்திருக்கும் மழைநீர் சேமிப்புக் கிடங்கில் 20 ஆயிரம் லிட்டர் தண்ணீர் வரை சேமிக்க முடியும்.    

கழிவறைகளிலிருந்து வெளியேறும் மனிதக் கழிவுகள் நாங்கள் அமைத்துள்ள  பயோ செப்டிக் டேங்கிற்குச் சென்றுவிடும். அங்குள்ள பாக்டீரியாக்கள் மனிதக் கழிவுகளைத் தின்றுவிடும்.  கழிவறையிலிருந்து வெளியேறும் தண்ணீர் 99 சதவீதம் தூய்மையாக்கப்பட்டுவிடும்.  அந்த தண்ணீரை தோட்டத்தில் உள்ள செடிகளுக்குப் பாய்ச்சலாம். 

இப்படி சுற்றுச்சூழலுக்கு எந்தவிதத்திலும் பாதிப்பை ஏற்படுத்தாதவிதத்தில் வீட்டைக் கட்டியிருக்கிறேன்.  இப்படிப்பட்ட வீடுகள் அதிகமானால் சுற்றுச்சூழல் பாதிப்பு மிகவும் குறையும்'' என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்திய வருகையை ஒத்திவைத்தது ஏன்? எலான் மஸ்க்

வாக்குப்பதிவு சதவீதம் குறைந்திருப்பது கவலையளிக்கிறது: தமிழிசை

மகாராஷ்டிரம், கர்நாடக பொதுக் கூட்டத்தில் மோடி இன்று உரை!

சிறையில் மனைவியின் உணவில் கழிப்பறை சுத்திகரிப்பான்: இம்ரான் கான் புகார்

ஊழல் பள்ளியை நடத்துகிறார் பிரதமர் மோடி: ராகுல்

SCROLL FOR NEXT