இளைஞர்மணி

அலுவலகம்... வீடு... செயல்திறன்!

4th Jan 2022 06:00 AM | -சுரேந்தர் ரவி

ADVERTISEMENT

 

வீட்டில் இருந்தே பணியாற்றுவதற்கான வாய்ப்பை கரோனா தொற்று பரவல் ஏற்படுத்தியுள்ளது. சில தொழில்நுட்ப நிறுவனங்கள் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக தங்கள் பணியாளர்களை வீட்டில் இருந்து பணியாற்றுவதற்குத் தொடர்ந்து அனுமதித்து வருகின்றன. 

தற்போது நாட்டில் கரோனாவின் 2-ஆவது அலை பரவல் பெருமளவில் குறைந்துவிட்டது. பெரும்பாலான நிறுவனங்கள் பணியாளர்களை மீண்டும் அலுவலகத்துக்கு அழைக்கலாமா? என்று ஆலோசித்துக் கொண்டிருந்த வேளையில், ஒமைக்ரான் வகை கரோனா தொற்று பரவல் படிப்படியாக அதிகரித்து வருகிறது. எனவே, பணியாளர்களைத் தொடர்ந்து வீட்டில் இருந்து பணியாற்ற அந்நிறுவனங்கள் அனுமதித்துள்ளன. 

இவ்வாறு சில நிறுவனங்கள் இருக்க, வேறு சில நிறுவனங்கள் தங்கள் பணியாளர்களுக்கு வீட்டில் இருந்து பணியாற்றும் வாய்ப்பையே வழங்கவில்லை. போதிய வசதிகள் இருந்தாலும், வீட்டில் இருந்து பணியாற்றும் சூழலை அந்நிறுவனங்கள் விரும்பாததே அதற்கு முக்கிய  காரணம். வீட்டில் இருந்து வேலை செய்தால் பணியாளர்கள் திறம்பட செயல்பட மாட்டார்கள்;அவர்களது கவனம் சிதறும்; 

ADVERTISEMENT

நிறுவனத்தின் கலாசாரம் சீர்கெட்டுவிடும்; பணியாளர்களிடையே நிலவும் ஒத்துழைப்பு பாதிக்கப்படும் எனப் பல்வேறு காரணங்களை அந்த நிறுவனங்கள் முன்வைக்கின்றன. ஆனால், இத்தகைய   காரணங்களை உறுதிப்படுத்துவதற்கு அடிப்படை ஆதாரங்கள் இல்லை என்பதே உண்மை.

வீட்டில் இருந்து பணியாற்றினால், பணியாளர்கள் திறம்படச் செயல்படமாட்டார்கள் என்பதை ஏற்க முடியாது. கடந்த 20 மாதங்களுக்கு மேலாகப் பெரும்பாலான நிறுவனங்களின் பணியாளர்கள் வீட்டில் இருந்துதான் பணியாற்றி வருகின்றனர்.  

அந்நிறுவனங்களின் ஒட்டுமொத்த செயல்பாடு அதிகரித்துள்ளதே தவிர, எந்த நிறுவனமும் வீழ்ச்சியை சந்திக்கவில்லை. பணியாளர்கள் வீட்டில் இருந்து பணியாற்றியபோதும் பெரும்பாலான நிறுவனங்களின் வருவாய் அதிகரித்துள்ளது. வீட்டில் இருந்தே பணியாற்றும்போது பணியாளர்களின் செயல்திறன் பெருமளவில் குறையவில்லை. 

இன்னும் சொல்லப் போனால் அலுவலகத்தில் இருந்து பணியாற்றுவதை விட வீட்டில் இருந்து பணியாற்றும்போது பணியாளர்கள் இன்னும் சிறப்பாகவே பணியாற்றுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.   

வீட்டில் இருந்து பணியாற்றினால் பணியாளர்களின் கவனம் சிதறும் என்ற காரணமும் ஏற்கும்படியாக இல்லை. தொழில்நுட்பங்கள் வளர்ந்து விட்ட காலகட்டத்தில், அலுவலகத்திலேயே பணியாளர்களுக்கு எண்ணற்ற கவனச்சிதறல்கள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. அதிலும், சமூக வலைதளங்கள் உள்ளிட்டவை எங்கிருந்தாலும் கவனத்தைச் சிதறடிக்கவே செய்யும்.  

அலுவலகத்தில் இருக்கும்போது வேறு நல்ல நிறுவனத்தில் பணி வாய்ப்பு தேடுவதில் கூட பணியாளர்கள் ஈடுபடலாம். எனவே, கவனச் சிதறல் என்பது பணியாளர்களைப் பொருத்தது மட்டுமே.  

நிறுவனங்களின் கலாசாரம் பாதிக்கப்படும் என்ற காரணமும் உறுதியாக இல்லை. பணியாளர்கள் தினமும் அலுவலகத்துக்கு வருவதால் மட்டுமே நிறுவனத்தின் கலாசாரம் பாதுகாக்கப்படும் என்று கூற முடியாது. அப்படியிருக்கும்போது அவர்கள் வீட்டில் இருந்து பணியாற்றினாலும் நிறுவனங்களின் கலாசாரம் பாதிப்படாத வகையில் என்ன செய்யலாம் என்பதை  நிறுவனங்கள் ஆய்வு செய்து வகுக்க வேண்டும். 

பணியாளர்கள் வீட்டில் இருந்து பணியாற்றினால், அவர்கள் இணையத்தின் வாயிலாக அடிக்கடி சந்தித்துக் கொள்வதற்கான ஏற்பாடுகளை நிறுவனங்கள் முன்னெடுக்கலாம். இணைய வழியிலான போட்டிகளை நடத்தி அவர்களை ஒற்றுமையுடன் வைத்திருக்கலாம். அத்தகைய முன்னெடுப்புகள் பணியாளர்கள் இடையேயான ஒத்துழைப்புக்கு எந்தவித பாதிப்பையும் 
ஏற்படுத்தாது.  

பணியாளர்கள்  எங்கிருந்து பணியாற்றினாலும் அவர்களின் செயல்திறனை மட்டுமே நிறுவனங்கள் ஆராய வேண்டும். இல்லையேல், அவையனைத்தும் வெற்றுக் காரணங்களே என நிறுவனங்களுக்குப் பணியாளர்கள் எடுத்
துரைக்கும் சூழல் ஏற்பட்டுவிடும்.   

பெரும்பாலான ஆய்வுகளின்படி, தொடர்ந்து வீட்டில் இருந்தே பணியாற்றுவதையே அதிகப்படியான பணியாளர்கள் விரும்புகின்றனர். 

இன்னும் சில பணியாளர்கள், வாரத்தின் பாதி நாள்கள் அலுவலகத்திலும் மீதி நாள்கள் வீட்டில் இருந்தவாறும் பணியாற்ற விருப்பம் தெரிவித்துள்ளனர். 

ADVERTISEMENT
ADVERTISEMENT