இளைஞர்மணி

மனிதவள மேலாண்மை...: தேவையான திறன்கள்!

வி.குமாரமுருகன்


எல்லாவிதமான வளங்களைக் காட்டிலும் மிகச் சிறந்தது மனிதவளம். அத்தகைய மனிதவளம் இந்தியாவில் பெருமளவு உள்ளது. மனித வளம் அதிக அளவில் இருந்தாலும் கூட,  ஒரு நிறுவனம் எதிர்பார்க்கும் திறன்களைக் கொண்டவர்கள் எண்ணிக்கை மிகக் குறைவான அளவிலேயே உள்ளது. அப்படி திறன் மிக்கவர்களை தேடி கண்டறியும் மேலாண்மைத் திறனுடைய நபர்கள் மனிதவளத்துறை மேலாளராக நியமிக்கப்பட்டு வருகிறார்கள். இன்றைய கார்ப்பரேட் உலகில்   மனிதவளத்துறை மேலாளர்களின் தேவை அதிகரித்த வண்ணம் இருக்கிறது.  மனிதவளத்துறை  மேலாளராகப் பணிபுரிய விரும்புவர்கள் பல்வேறு திறன்களை வளர்த்துக் கொள்ள வேண்டியது அவசியம். 

தகவல் தொடர்பு:

ஒரு மனிதவளத்துறை மேலாளர் என்பவர் தகவல் தொடர்பில் மிகச் சிறந்து விளங்க வேண்டும். அதாவது பேச்சு மூலமாகவோ அல்லது எழுத்து மூலமாகவோ ஒரு கருத்தைத் தெளிவாக சொல்லும் திறன் உடையவராக இருத்தல் அவசியம். மனித வள மேலாண்மைப் பிரிவுதான் ஒரு நிறுவனத்திற்கு தேவையான பணியாளர்களை தேர்வு செய்ய வேண்டிய பொறுப்பில் இருக்கிறது. மனிதவளப் பிரிவு மேலாளர் தொடர்ந்து பல்வேறு நேர்காணல்களை நடத்த வேண்டி இருக்கும்.  நிறைய பேசும் தேவை இருக்கும்.

ஒரு  நிறுவனத்தில் வேலை செய்யும் பணியாளர்களுடன் வேலை சம்பந்த மான விஷயங்களை தொடர்ந்து பேசுவதுடன், பணிக்குத் தொடர்பில்லாத விஷயங்களையும் கேட்டுத் தெரிந்து கொள்வதில் திறன் உடையவராக மனிதவளத்துறை மேலாளர் இருக்க வேண்டும். பணியாளர் ஒருவரின் குடும்பம்,  அவரின் பொருளாதாரச் சூழல், அவருடைய கஷ்ட நஷ்டங்கள் போன்றவற்றைப் பற்றியும் தெரிந்து கொள்வதில் ஆர்வம் காட்ட வேண்டும். அப்படி செய்யும்போது அந்த பணியாளருக்கு மனிதவளத்துறை  மேலாளர் மீது ஒரு நம்பிக்கையையும் பிணைப்பையும் அது ஏற்படுத்தும். இது நிறுவனத்தின் வளர்ச்சிக்கு உதவி புரியும். 

பல்வேறு பணிகள்:

மனிதவளத்துறை மேலாளர் ஒரே சமயத்தில் பல பணிகளைச் செய்யக் கூடிய திறன் பெற்றவராக இருக்க வேண்டும். ஒரு நிறுவனத்தில் மனிதவள மேலாண்மைப் பிரிவின் பணி, நிறுவனத்திற்குத் தேவையான பணியாளர்களைத் தேர்ந்தெடுப்பது, அவர்களுக்கு பணி குறித்த பயிற்சி வழங்குவது, பணியாளர்களின் செயல்திறனை மதிப்பீடு செய்வது, பணியாளர் உறவுகளை மேம்படுத்துவது என பல்வேறு செயல்பாடுகளை உள்ளடக்கியதாக 
உள்ளது. இவை அனைத்தையும் ஒருங்கிணைத்து செல்வதற்கான தகுதி உடையவராக மனிதவளத்துறை மேலாளர்  இருப்பது அவசியம்.   

பணியாளர் தொடர்பான விவரங்கள் மற்றும் சட்டரீதியான ஆவணங்களையும் பராமரிக்க வேண்டிய பொறுப்பும் அவருக்கு உண்டு. 

முடிவெடுக்கும் திறன்:

முடிவெடுக்கும் திறன் மனிதவளத்துறை மேலாளருக்கு மிக அவசியம் இருக்க வேண்டிய திறனாகும். நிறுவனத்தில் பணியாளர் - நிர்வாகம் தொடர்பான பல சிக்கல்கள் ஏற்படும்போது,  நிறுவனத்துக்குப் பாதிப்பு இல்லாத வகையில் முடிவெடுத்து செயல்பட வேண்டிய  தேவை மனிதவளத்துறை மேலாளருக்கு இருக்கிறது. அதேசமயம் பணியாளர்களின் மனக்கசப்புக்கும் இலக்காகிவிடக் கூடாது. ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையில், குறிப்பிட்ட தருணத்தில் சரியான முடிவெடுக்காவிட்டால்,  அதனால் ஏற்படும் பிரச்னைகளைச் சமாளிக்க முடியாமல் போய்விடும் ஆபத்து இருப்பதால்,  முடிவெடுக்கும் திறன் மனிதவளத்துறை மேலாளருக்கு மிக மிக அவசியம். 

பட்ஜெட்:

இவை எல்லாவற்றையும்விட ஒரு நிறுவனத்தின் பட்ஜெட் இத்துறையின் கையில்தான் உள்ளது. நிர்வாகம் தொடர்பான செலவினங்களைக் கட்டுப்படுத்துவது மற்றும் தேவையற்ற செயல்களுக்கு செலவு செய்யாமல் இருப்பது போன்றவற்றை கண்காணிக்கும் பொறுப்பும் இவர்களுடையது தான். பணியாளர்களுக்கு வழங்க வேண்டிய இழப்பீடுகள் மற்றும் பணியாளர்களின் நலன்கள் தொடர்பான பணப்பட்டுவாடாக்கள் போன்ற அனைத்தும் மனிதவளத்துறை மூலமாகவே செயல்படுத்தப்படும் என்ற நிலை உள்ளதால் மனிதவளத்துறை மேலாளருக்கு கூடுதல் பொறுப்பு உள்ளது.  

பணியாளர்களின் சம்பளம் முதல் பணியிடத்தில் ஏற்படும் பிரச்னைகள் வரை அனைத்தையும் தெரிந்துகொண்டு அவற்றைக் கையாள வேண்டிய மிகப்பெரிய திறன் மனிதவளத்துறை மேலாளருக்கு  அவசியம். பணியாளர் கூறும் பிரச்னையை உணர்ந்து கொண்டு அதற்கு தீர்வு காண்பதற்கு முன் தொடர்புடைய பணியாளரின் முழு விவரங்களையும் தெரிந்து கொண்டு அதற்கேற்ப தீர்வு சொல்ல வேண்டியது அவசியம். அவர் சொல்லும் தீர்வு, பிற பணியாளர்களின் நலனையும் பாதிக்கக் கூடாது. நிறுவனத்தின் நலனையும் பாதிக்கக் கூடாது.   

மனித வள மேலாண்மைப் பணி என்பது எல்லாவிதமான பணிகளையும் செய்யக் கூடிய அனைத்து நிறுவனங்களிலும் தேவைப்படும் ஒரு பணியாகும். அரசு நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள் என்ற பாகுபாடின்றி எல்லா நிறுவனங்களிலும் மனிதவளத்துறையினருக்கு வேலைவாய்ப்புகள் உள்ளன.  எனவே மனிதவளத்துறையில் பணியாற்றக் கூடிய கல்வியைக் கற்பதோடு அதற்கான திறன்களை இளைஞர்களாகிய நீங்கள் வளர்த்துக் கொள்ள வேண்டியது மிக மிக அவசியமாகும்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இதுவல்லவா ஃபீல்டிங்...

ரஜினி 171: படத் தலைப்பு டீசர் அறிவிப்பு!

மாயக் குரலாள்... ஸ்ரேயா கோஷல்!

சூர்யா 44: அதிகாரபூர்வ அறிவிப்பு!

அழகு பா(ர்)வை.. நேகா ஷெட்டி!

SCROLL FOR NEXT