இளைஞர்மணி

அதிசயமான புகைப்படங்கள்!

4th Jan 2022 06:00 AM | எஸ்.ராஜாராம்

ADVERTISEMENT


சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து (ஐஎஸ்எஸ்) விண்வெளி வீரர்களால் பூமியை நோக்கி எடுக்கப்படும் புகைப்படங்களை அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா வெளியிட்டு வருகிறது.

அந்த வகையில் 2021-ஆம் ஆண்டு நாசா வெளியிட்ட புகைப்படங்களில் மிகச் சிறந்தவற்றைப் பற்றி இப்போது பார்ப்போம். 

துருவ ஒளி:

அரோரா அல்லது துருவ ஒளி எனப்படுபவை வானில் இயற்கையாகத் தோன்றும் ஒளிகளின் வண்ணக் கலவையாகும். தாமஸ் பெஸ்கொயட் என்ற விண்வெளி வீரரால் ஆக. 20-ஆம் தேதி எடுக்கப்பட்ட துருவ ஒளி புகைப்படம் ஐஎஸ்எஸ்-இலிருந்து எடுக்கப்பட்ட புகைப்படங்களிலேயே சிறந்ததாகக் கருதப்படுகிறது. 

ADVERTISEMENT

அமேசான் தங்கச் சுரங்கம்:

நாசா வெளியிட்ட இந்தப் புகைப்படம் தென்கிழக்கு பெருவில் அமேசான் காடுகளில் உள்ள சட்டவிரோத தங்கச் சுரங்கங்களைக் காண்பிக்கிறது. மேகமூட்டம் காரணமாக இந்தச் சுரங்கங்கள் ஐஎஸ்எஸ்-இலிருந்து எடுக்கப்படும் புகைப்படங்களில் தெரியாது. ஆனால், இந்தப் புகைப்படத்தில் வானம் மேகமின்றி காணப்பட்டதால் தங்கச் சுரங்கம் தெளிவாகத் தெரிகிறது. 

சகாரா பாலைவனத்தின் கண்:

தாமஸ் பெஸ்கொயட்டால் எடுக்கப்பட்ட மற்றொரு புகைப்படம் மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள "சகாரா பாலைவனத்தின் கண்'. இது சகாரா பாலைவனத்தில் காணப்படும் 40 கி.மீ. விட்டம் கொண்ட கண்போன்ற ஓர் அமைப்பாகும். 

செவ்வாய் கிரகத்தில் ஹெலிகாப்டர்: 

செவ்வாய் கிரகத்துக்கு பெர்செவரன்ஸ் விண்கலத்தை நாசா அனுப்பியுள்ளது. அதனுடன் இணைத்து அனுப்பப்பட்டுள்ள இன்ஜெனியூட்டி என்ற சிறிய வகை ஹெலிகாப்டர் செவ்வாயின் தரைப்பரப்பிலிருந்து மேலெழும்பிப் பறக்கும்போது அதன் நிழல் தரையில் விழும். அந்த புகைப்படத்தை ஹெலிகாப்டரின் அடிப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கேமரா படம்பிடித்தது. வேற்று கிரகத்தில் பறந்த முதல் ஹெலிகாப்டர் என்ற சாதனையை உலகுக்குச் சொன்னது இந்தப் புகைப்படம். 

ADVERTISEMENT
ADVERTISEMENT