இளைஞர்மணி

11 ஆயிரம் இருக்கு!: அதில் 1 எனக்கு!

4th Jan 2022 06:00 AM | கே.பி. மாரிக்குமார் 

ADVERTISEMENT

 

பறக்கவேண்டும் என்று முடிவெடுத்துவிட்டால், முதலில் உங்களது சுமைகளை தூக்கி எறியுங்கள்.

 - கெளதம புத்தர்.


2022-ஆம் ஆண்டுக்கான டி.என்.பி.எஸ்.சியின் கால அட்டவணை வெளியிடப்பட்டிருக்கிறது. ஏதாவது ஓர் அரசுப்பணியில் சேர்ந்துவிட வேண்டும் என்கிற முனைப்பில் உழைத்துக் கொண்டிருக்கும் போட்டித் தேர்வு மாணவர்களின் உலகம்,  ஒரு புதிய உத்வேகத்தோடு தயாராகிக் கொண்டிருக்கிறது. குரூப் - 4 உள்பட கிராம நிர்வாக அலுவலர் பதவிகளுக்கான மொத்தம் 11 ஆயிரத்துக்கும் மேலான காலியிடங்கள் இருப்பதாக தேர்வாணையத்தின் அறிவிப்பு சொல்கிறது. இந்த எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கலாம் என்றும் நம்பத் தகுந்த தகவல்கள் வருகின்றன. 

ADVERTISEMENT

இனி வரும் காலங்களில் தமிழக அரசுத்துறை மற்றும் மாநில பொதுத்துறையில் உள்ள பணியிடங்கள் அனைத்திலும் தமிழக இளைஞர்களை நூறு சதவிகிதம் நியமனம் செய்யும் பொருட்டு, தேர்வு முகமைகளால் நடத்தப்படும் அனைத்துப் போட்டித் தேர்வுகளிலும் தமிழ் மொழி பாடத்தாள் தகுதி தேர்வாக கட்டாயாமாக்கப்படும் என்று தமிழக அரசு வெளியிட்டிருக்கும் அரசாணையை தேர்வர்கள் மனதில் கொள்வது நல்லது.

பயிற்சி நிறுவனங்களின் விளம்பரங்கள் ஊடகங்களில் களைகட்டத் தொடங்கி
யிருக்கும் இவ்வேளையில், எதைப் படிக்க வேண்டும்? எப்படி படிக்க வேண்டும்? எது மாதிரியான பயிற்சி நிறுவனங்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும்? என்பதை நாம் பேசுவது சரியாக இருக்கும். 

முதலில், இலட்சக்கணக்கான போட்டியாளர்கள் பங்குபெறும் இத்தேர்வில்  வெற்றி பெற்று, நாமும் அரசு ஊழியராகி விடுவோமா என்கிற சந்தேகமேயின்றி ஒருவர் தனது தயாரிப்புகளை தொடங்க வேண்டும். இது சாத்தியமா? என்கிற அவநம்பிக்கைகளை விரட்டிவிட்டு, நம்புவோம், நம்மால் இது முடியும் என்று நம்பி  தொடங்குவது நலம்.

சரி... என்ன செய்ய வேண்டும்? எங்கிருந்து தொடங்கலாம்? 

போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் ஓர் அடிப்படையைப் புரிந்து கொள்ள வேண்டும். தமிழக அரசுத் தேர்வாணையத்தின் குரூப் - 4  தேர்வுகளுக்கு மட்டுமல்ல, வேறு எந்த அரசுப் பணிக்கான போட்டித் தேர்வாக இருந்தாலும், நாம் தொடங்க வேண்டிய இடம்,  பள்ளிப் பாடப் புத்தகங்கள்தாம். "அதான் தெரியுமே! அதான் ஏற்கெனவே படிச்சுட்டோமே!' என்கிற இறுமாப்பில் போட்டியாளர்கள் யாரும் தங்களைத் தாங்களே ஏமாற்றிக் கொள்ள வேண்டாம். 

பட்டப் படிப்பினை முடித்து, அதற்கும் மேலே பல பட்டங்களை வாங்கி, வரிசையாகக் கல்வித் தகுதிகளை அடுக்கி வைத்திருந்தாலும், நல்ல நிலையான அரசுப் பணியில் சேர வேண்டுமென்றால், ஒருவருக்கு பள்ளிப் பாடங்களில் ஆழ்ந்த அறிவு கட்டாயம் இருந்தாக வேண்டும். மீண்டும்  மீண்டும் பள்ளி பாடப் புத்தகங்களைப் படிப்பதற்கு வெட்கப்படத் தேவையில்லை. எனவே, முதல் வகுப்பில் இருந்து பத்தாம் வகுப்பு வரையிலான எல்லாப் பாடங்களையும் முறையாக முழுமையாகப் படிப்பது அவசியம். நாம் இங்கு பேசிக் கொண்டிருப்பது வழக்கமான அறிவுரை அல்ல; இதுதான் சரியான வழிமுறை.

ஒருவர் படிக்க வேண்டிய நேரமும், காலமும் ஒவ்வொருவரின் கவனம் மற்றும் உள்வாங்கும், புரிந்து கொள்ளும் ஆற்றலின் அடிப்படையில் மாறுபடும் என்றாலும், குறைந்த பட்சம் மூன்று மாதத்திலிருந்து ஆறு மாதங்களோ, ஓராண்டு காலமோ படிக்க வேண்டும் என்பது இங்கு அவசியமாகிறது. 

தவறாமல் செய்தித்தாள்களை வாசிப்பதில் தொடங்கி, புத்தகங்களோடு தரமான கையேடுகள், முந்தைய தேர்வுகளின் வினா வங்கிகளின் தொகுப்புகள், ஏற்கனவே போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற்று தங்களது சமூகக் கடமையாக ஒரு சில அரசு ஊழியர்கள், சங்கங்கள்  நடத்தும் பயிற்சி வகுப்புகளும் வழிகாட்டலும் ஒருவருக்கு வெற்றியைச் சுலபமாக்கும். 

இவற்றோடு சீரான உணவும், உறக்கமும், உடல்நிலையும் மிக  மிக முக்கிய காரணிகளாக ஒருவரது வெற்றியில் அமைந்துவிடுகிறது. 

"முடிஞ்ச வரைக்கும், எல்லாத்தையும் படிக்கணும்', என்பது சாத்தியமாகாத பட்சத்தில், அதிகமாகவும்  ஆழமாகவும் படிக்க வேண்டும் என்பது வெற்றிக்கான ஒரு முக்கிய நியதி. "எவ்வளவு அதிகம் படிக்கிறோமோ... 

அவ்வளவு நமக்கு நல்லது'  என்பதைப் புரிந்து கொண்டு எந்த  தகவலையும் "தேவையில்லை' என்று ஒதுக்கிவிடக் கூடாது. 

பொதுவாக, பொது அறிவு மற்றும் மொழித் திறனுக்கான தேர்வுகள் என்று வரும் இரண்டு பாகங்களிலும் தனித்தனியே 100 கேள்விகள் என்கிற வகையில், மொத்தம் 200 கேள்விகளைக் கொண்ட தேர்வில், ஒவ்வொரு சரியான விடைக்கும் 1.5 மதிப்பெண்கள் கொடுக்கப்படுகிறது. மொத்தத்தில் 300 மதிப்பெண்கள். தவறான விடைக்கு "நெகடிவ்' மதிப்பெண்கள் கிடையாது என்பதாலும், இதுமாதியான போட்டித் தேர்வுகளில் ஒவ்வொரு மதிப்பெண்ணும் ஓராயிரம் போட்டியாளர்களைப் பின்னுக்குத் தள்ளி ஒருவருக்கு வெற்றியைப் பெற்றுத் தருகிற வாய்ப்பு இருப்பதால், பதில் தெரிகிறதோ இல்லையோ, அனைத்து கேள்விகளுக்கும், ஏதாவது ஒரு விடையை  விடைத்தாளில் குறிப்பது புத்திசாலித்தனமான நகர்வாக இருக்கும். 

இப்போது வந்திருக்கின்ற கால அட்டவணை மற்றும் அறிவிப்புகள் போன்று இதற்கு முன்னர் எவ்வளவோ வந்திருக்கின்றன.  தேர்வுகளும் நடந்திருக்கின்றன. அப்போதெல்லாம் போட்டியாளர்களாக பலவகையான மாணவர்களை நாம் சந்தித்திருக்கிறோம். அவர்களில் யாரெல்லாம் ""என்ன... தம்பி! எப்படி படிச்சுட்டிருக்கீங்க?''  என்கிற நமது கேள்விக்கு, இத்தனை  வேக்கன்சீஸ்  இருக்குண்ணே. அதுல ஒன்னு... எனக்குத்தான்ணே! என்று நம்பிக்கையோடு பதில் சொல்லிவிட்டு உழைத்தார்களோ, அவர்கள் அனைவருமே இன்று தமிழக அரசில்  பதவிகளில் இருக்கிறார்கள். 

எனவே, இப்போது நமக்கு தெரிய வந்திருக்கும், "இந்த 11 ஆயிரம் காலியிடங்களில்... அதுல, எனக்கு ஒன்னு... மிச்ச சொச்சம் மட்டுமே 
அடுத்தவர்களுக்கு'  என்று நம்பிக்கையோடு உழைக்க நாம் தயார் என்றால், நமக்கான பணி நியமன ஆணையும் இப்போதே நமக்குத் தயார்தான் என்பதை உறுதி செய்து கொள்வோம்.

ADVERTISEMENT
ADVERTISEMENT