முக நூலிலிருந்து....
இசைத்தட்டிலிருந்து அந்தச் சொல் ஆவியைப் போல வெளியேறியது...
அழுத்தும் முள்ளின் வலியிலிருந்தும், வட்டப்பாதையிலிருந்தும்,
தன்னைக் காப்பாற்ற வேண்டிய கடைசித் தருணமாக...
அது இருந்திருக்கலாம்.
அதற்காக அது இந்த உலகத்தையே கைவிட வேண்டியிருந்தது.
பழநிபாரதி
எவ்வளவு அன்போடு அணைத்தாலும் கத்திக்கு வெட்டத்தான் தெரியும்.
அது போலத்தான் சில உறவுகளும்...
எவ்வளவு அன்பாக நாம் இருந்தாலும் காயப்படுத்தி விடுவார்கள்.
வசந்தி ஆதித்தன்
பொய்களோடு புழங்குவதில் ஒரு சவுகர்யம் இருக்கிறது...
நாம் அவற்றிற்கு உண்மையாய் இருக்க வேண்டியதில்லை.
அம்பிகா குமரன்
குருவே...
நியாயம் பேசுவதில் ஓர் அர்த்தமுமில்லை...
வல்லூறுவுக்கு ஒரு நியாயம் இருக்கிறது.
அச்சிறு பறவைக்கு ஒரு நியாயம் இருக்கிறது.
அதன் அலகில் ஒரு சிற்றுயிரிக்கு
ஒரு நியாயம் இருக்கிறது.
அதன் கூட்டில்
நிழலாடும்போதெல்லாம் வாய் பிளக்கும்
குஞ்சுகளுக்கு
ஒரு நியாயம் இருக்கிறது.
சீடரே...
இவை யாவற்றிற்கும்
வயிற்றுப் பசி நியாயமின்றி
பிறிதொன்றில்லை.
இயற்கை
சுட்டுரையிலிருந்து...
"நாய்கள் ஜாக்கிரதை' எனும் போர்டுகள்
நாய்களுக்கு முன்பே குரைத்து விடுகின்றன.
குருநாதா
ஓராயிரம் நன்மை செய்யுங்கள்...
ஒருவரும் வரமாட்டார்கள்
எட்டிப் பார்க்க.
ஒரேயொரு தவறு செய்யுங்கள்...
ஒரு நூறு பேர் ஓடி வருவார்கள்...
குறை சொல்ல.
அன்பின் மொழி
பிறர் வேலையில்
கவனம் செலுத்தி
வேதனைப் படுவதை விட...
நமது வேலையில்
கவனம் செலுத்தினால்
சாதிக்க முடியும்.
கயல்
வலைதளத்திலிருந்து...
""நாம் ஆக்சிஜனை எடுத்துக்கொண்டு அசுத்தமான கார்பன் டை ஆக்சைடை வெளியிடுகிறோம். மரங்கள் அசுத்தமான கார்பன் டை ஆக்சைடை எடுத்துக் கொண்டு ஆக்சிஜனை வெளியிடுகின்றன'' என்று திரும்பத் திரும்பக் கூறிக்கொண்டிருக்கிறோம். இந்த இரண்டு செயல்களும் வெவ்வேறானவை.
முன்னது சுவாசம்; பின்னது ஒளிச்சேர்க்கை. இரண்டு வெவ்வேறு செயல்களை ஒன்றாக்கி ஒப்பிடுவதன் வாயிலாக தாவரங்கள் கார்பன்டை ஆக்சைடை சுவாசிக்கின்றன என்கிற கற்பிதத்தை குழந்தைகளிடம் விதைக்கிறோம். நாமும் குழம்பிக் குழந்தைகளைக் குழப்பவும் செய்கிறோம்.
சுவாசிக்கும் போது மனிதர்கள், தாவரங்கள், விலங்குகள் என அனைத்து உயிர்களும் ஆக்சிஜனை எடுத்துக் கொள்கின்றன; கார்பன் டை ஆக்சைடை வெளியிடுகின்றன. சுவாசித்தலில் கழிவாக வெளியான கார்பன் டை ஆக்சைடு மட்டுமல்லாது, வளிமண்டலத்தில் உருவான கார்பன் டை ஆக்சைடையும் சேர்த்து தாவரங்கள் ஒளிச்சேர்க்கை எனப்படும் உணவு (ஸ்டார்ச்) தயாரித்தலில் பயன்படுத்துகின்றன.
அப்போது ஒட்டுமொத்த உயிரினங்களுக்கும் சுவாசிக்கத் தேவையான ஆக்சிஜன் கிடைக்கின்றது. நாம் இந்த ஆக்சிஜனை எடுத்துக்கொள்கிறோம்; தாவரங்கள் கார்பன் டை ஆக்சைடை எடுத்துக்கொள்கின்றன என்று சொல்வது எவ்வளவு அபத்தம் பாருங்கள்!
https://panmai2010.wordpress.com/