இளைஞர்மணி

இணைய வெளியினிலே...

1st Feb 2022 06:00 AM

ADVERTISEMENT


முக நூலிலிருந்து....

நான் இளைஞனாக இருந்தபோது 'எல்லாம் தெரியும்' என நினைத்தேன்.
கொஞ்சம் வயதானபோது, 'கொஞ்சம்தான் தெரியும்' என உணர்ந்தேன்.
முதிர்ச்சி அடைந்தபோதுதான் தெரிந்தது, "எனக்கு எதுவுமே தெரியாது' என்று.

சாக்ரடீஸ்

மரணமும் வாழ்க்கையும் சந்தித்தன. 
வாழ்க்கையிடம் மரணம் கேட்டது: 
""எல்லாரும் உன்னை நேசிக்கிறார்கள்; ஆனால் என்னை வெறுக்கிறார்கள். அது ஏன் ?''
சிரித்துக் கொண்டே வாழ்க்கை சொன்னது: 
""இது கூடவா தெரியவில்லை?  நான் ஓர் அழகான பொய் ; நீயோ ஒரு கோரமான உண்மை!''

ADVERTISEMENT

 

சொல் ஒன்றுதான். 
சொல்லும் நபரைப் பொறுத்தும், சூழலைப் பொறுத்தும், 
கொல்கிறது...  அல்லது 
வெல்கிறது.

பிருந்தா ஸ்ரீனிவாசன்

 

சுட்டுரையிலிருந்து...

உலகத்தில் எத்தனை டெக்னாலஜி இருந்து என்ன பயன்? 
வறுத்த கடலைகளுக்குள் ஒளிந்திருக்கும் 
ஒரு சொத்தைக் கடலையை கண்டுபிடிக்க முடிய மாட்டேங்குது! 

கோழியின் கிறுக்கல்!!

 

இன்றைக்காக வாழ்வேன்...
நாளையும் இதே கதைதான்.

ஜா.வி

 

தேட யாருமே இல்லாதபோது... 
தொலைவதில் 
என்ன சுவாரஸ்யம் 
இருந்துவிடப் போகிறது?

சாமுவேல் ராஜா

 

வலைதளத்திலிருந்து...


சாதாரண பள்ளிச் சிறுவனை அண்ணல் காந்தியடிகளாக மாற்றிய "அரிச்சந்திரன்' நாடகம் முதல் "இந்தியன்', "அந்நியன்' போன்ற இன்றைய தலைமுறையின் விழிப்புணர்வுத் திரைப்படங்கள் வரை எல்லாக் காலகட்டங்களிலுமே கலைவடிவங்கள் பண்புநலனில் பெருத்த தாக்கத்தைத் தனிமனித அளவிலும், சமூக அளவிலும் ஏற்படுத்தியே வருகின்றன.

கதை, கவிதை, கட்டுரை, திரைப்படம், சொற்பொழிவு போன்றவை நற்பண்புகளை நேரடியாக வலியுறுத்துகின்றன என்றால், இசை, நடனம், கணிதம், ஓவியம் போன்ற நுண்கலைகள் உளவியல்ரீதியாகச் செயல்பட்டு நம் உள்ளத்தை மறைமுகமாக நெறிப்படுத்துகின்றன. விஷயம் தெரிந்தவர்கள் மட்டுமே ரசிக்கக் கூடிய தரத்திலான இசை, கலையழகைத் தன்னுள் ஒளித்து வைத்திருக்கும் புதின ஓவியம் (மாடர்ன் ஆர்ட்) எனக் கலைகளின் நுட்பமான பரிமாணங்களையே ரசிக்கும் அளவுக்கு நுண்ணறிவும் மென் உணர்வும் கொண்டவர்களால், உடன் வாழும் மனிதர்களையும் எளிதில் புரிந்துகொள்ள முடிகிறது. 

அப்படி சக மனிதர்களைப் புரிந்து நடக்கும் நேசமுள்ள மனிதர்கள் ஒருபொழுதும் பிறருக்குத் தீங்கிழைக்க மாட்டார்கள். பொதுவாகவே, கலாரசனை மிகுந்த உள்ளம் கொண்டவர்கள் பெருந்தன்மையும், குழந்தை உள்ளமும் கொண்டவர்களாக இருப்பது வழக்கம். ஆக, ரசனை வளர வளர நம் பண்பும் வளரும் என்பது உறுதி!

ஒரு மனிதரின் மிகப்பெரிய சொத்தே அவருடைய அறிவும் பண்பும்தாம். இந்த இரண்டின் மூலம்தான் மற்ற எல்லாச் சொத்துக்களையும் உறவுகளையும் நாம் சம்பாதிக்க முடிகிறது. 

யாராலும் பறித்துக் கொள்ளவோ உரிமை கொண்டாடவோ முடியாத இந்தச் சொத்துக்கள்தாம், ஒரு தனி மனிதரின் இணையற்ற அடையாளங்களாகவும் கருதப்படுகின்றன. அப்பேர்ப்பட்ட அறிவு, பண்பு இரண்டையும் வளர்த்தெடுக்கிற, அதுவும் எந்தவிதமான சிரமமோ முயற்சியோ இல்லாமல், நமக்குப் பிடித்த விஷயத்தைத் தொடர்ந்து அனுபவிப்பதன் மூலமாகவே இந்த இரண்டிலும் உச்சத்தைத் தொட வழி வகுக்கிற ரசனை உணர்வை வளர்த்துக் கொள்வதைத் தவிர, நமக்கு வேறு என்ன வேலை?

https://agasivapputhamizh.blogspot.com/

ADVERTISEMENT
ADVERTISEMENT