இளைஞர்மணி

பயணிகள் கவனிக்கவும்..

26th Apr 2022 10:00 AM | கே. பி. மாரிக்குமார்

ADVERTISEMENT


"வழியின்றி சிரிக்கும் சிரிப்பிற்கும், வலியின்றி சிரிக்கும் சிரிப்பிற்கும் அர்த்தங்கள் ஆயிரம் உண்டு. வலிகளை சுமந்தும், மறந்தும் வழியைத் தேடி பயணிப்பதுதான் வாழ்க்கை'

- எமர்சன்

தம்பி... பார்த்து போப்பா, வேகமா போகாதப்பா, ஹெல்மெட் போட்டுக்கப்பா... தான் கல்லூரிக்கு கிளம்ப பைக்கை எடுக்கும்பொழுதெல்லாம், ஏதோ வேண்டுதலைப் போல... தினந்தோறும் தன் தாய் இப்படி சொல்வதை அன்றும் எரிச்சலுடனேயே பார்த்தான் விவேக். விவேக்கிற்கு மட்டுமல்ல, இன்றைய பெரும்பாலான மாணவர்களுக்கும், இளைஞர்களுக்கும் பெற்றோர்கள், ஆசிரியர்களின் இதுபோன்ற யோசனைகளும், பேருந்துகளில் காணப்படும் "படியில் பயணம், நொடியில் மரணம்', மற்றும்தலைக்கவசம்... உயிர்கவசம், போன்ற வாசகங்களும் ஏனோ புரியாமலேயே இருக்கிறது.

தினந்தோறும் வாகனங்களிலும் வாழ்க்கையிலும் பயணிக்கும் நாம் ஒவ்வொருவரும் பயணிகளே. நமது வாகன வாழ்க்கைப் பயணங்கள் மிகுந்த கவனத்துடனும், அக்கறையுடனும் திட்டமிடப்பட வேண்டிய அவசரமான, பரபரப்பான, பாதுகாப்பற்ற காலமிது. உண்மை நிலவரம் இவ்வாறிருக்க, இரு சக்கர வாகனங்களில் பயணிக்கும் போது நம்மில் பலருக்கு தலைக் கவசங்கள் தலையில் இருப்பதில்லை. பிரதான சாலைகளில்... வாகனங்கள் பரபரக்கும் நேரங்களில், நம் தலை தடாரென்று பெருத்த ஓசையுடன் சாலைகளை தொடாதவரை, வாகன ஓட்டிகள் அனைவரும் புத்திசாலிகள்தான். நம் அனைவரது புத்திசாலித்தனத்தையும், புஜ பலத்தையும் ஒரு நொடியில் தரையோடு தரையாக நசுக்கிடும் வல்லமை கொண்டது இன்றைய விபத்துலகம் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது.

ADVERTISEMENT

உலகெங்கிலும் ஒவ்வொரு ஆண்டும் நடக்கும் சாலைகள் மற்றும் வாகன விபத்துகளில் இந்தியாவில் ஏற்படும் விபத்து மரணங்களின் எண்ணிக்கை மட்டும் ஐந்து இலட்சத்திற்கும் மேல் என்கிறது புள்ளிவிவரங்கள். சமீபத்தில் மதுரையிலிருந்து ஓர் இளைஞர்கள் கூட்டம் இருசக்கர வாகனங்களில் உல்லாசப் பயணமாக கொடைக்கானலுக்கு சென்று ஆட்டம் பாட்டத்தோடு திரும்பிக்கொண்டிருந்தனர். வரும் வழியில் மதுரை வாடிப்பட்டிக்கு அருகில் நிலக்கோட்டையில் இளைஞர்களின் இரண்டு வாகனங்கள் விபத்துக்குள்ளாகி சம்பவ இடத்திலேயே இரண்டு இளைஞர்கள் பிணமாகிப் போனார்கள். அதில் ஒரு இளைஞரின் பிரேதம் கனரக வாகனம் மோதிய அதிர்வில் தூக்கி வீசப்பட்டு அந்தரத்தில் மின் கம்பியில் தொங்கி ஊசலாடிய காட்சியும், படங்களும் காண்பவர்கள் அனைவரின் மனதையும் பதைபதைக்க வைத்தது.

நாம் முதல் பத்தியில் பார்த்த விவேக்கின் வாழ்விலும் மிகப்பெரிய மாற்றமும், நிதானமும் திடீரென்று வந்தது. இது அவனது தாயாருக்கே பெரிய ஆச்சரியமாக இருந்தது. ஆனால், இந்த மாற்றத்திற்கு விவேக் கொடுத்த விலையோ மிகப்பெரியது. சமீபகாலம் வரை, அவனுக்கு போட்டியாளராக அவனது இருசக்கர வாகன பயணத்தின்போது, அவனுடன் இணைந்தே அரட்டை அடித்துக்கொண்டு அவனோடு பைக்கில் வந்துகொண்டிருந்த, எதிலும் முதன்மையாக திகழக்கூடிய அவனது நண்பன் ஒருவன், விவேக்கின் கண் எதிரிலேயே விபத்தில் சிக்கி... துடிதுடித்து உயிரிழந்ததே அந்த மாபெரும் கொடிய விலை. ஒருவேளை விவேக்கின் நண்பன் தலைக்கவசம் அணிந்திருந்திருப்பானேயானால் பிழைத்திருக்கலாம் என்று அனைவரும் ஒரேமாதிரி சொன்னார்கள்.

இலக்குகளே மனித வாழ்வை இயக்குகின்றன. ஒவ்வொருவருக்கும் அவரவர் இலக்குகளுக்கான காரணங்கள் வெவ்வேறாக இருக்கிறது. ஆனால், எல்லோரும் அவர்களது முயற்சிகளை இவ்வுலகத்தில்தான் செயல்படுத்தியாக வேண்டும். இன்றைய மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கோ வானத்தை தொடும் அளவிற்கு இலக்குகள், குறிக்கோள்கள் மற்றும் இலட்சியங்கள். இதில் தவறொன்றுமில்லை. எப்படி சுவரில்லாமல் சித்திரம் வரைய முடியாதோ அப்படியேதான் கண்களை விற்றும் சித்திரம் வாங்கக் கூடாது.

விபத்துகள் நிறைந்ததுதான் நம் ஒவ்வொருவரது வாகனப் பயணமும் வாழ்க்கை பயணமும். நான் பலசாலி... நான் மிகப் பெரிய இலட்சியவாதி, நான் புத்திசாலி, நான் எனது கல்லூரியில்... படிப்பில் முதல் மாணவன் என்கிற காரணங்களுக்காகவெல்லாம் விபத்துகள் நம்மை நெருங்காமல் இருப்பதில்லை. படிப்பு, பதவி, அதிகாரம், மதம், சாதி, இனம் என்று இங்கு எதுவும் யாருக்கும் சாகாவரத்தை கொடுத்து நம்மை விபத்துகளிலிருந்து காப்பாற்றப் போவதில்லை. விபத்துகள்... குறிப்பாக வாகன விபத்துகள், மரணத்தைப் போலவே ஒரு சமத்துவவாதி; எந்த பாகுபாடும், பாரபட்சமும் பார்ப்பதில்லை.

பள்ளி, கல்லூரிகளில் பல வண்ண வண்ணக் கனவுகளோடு தொடங்கும் இளைஞர்களின் வாழ்க்கை இப்படி சற்றும் எதிர்பாராத நேரத்தில் முறிக்கப்பட்டு, நொறுக்கப்பட்டு பிரேதமாக அந்தரத்தில் தொங்குவதற்குத்தானா என்கிற கேள்வி நம்மைப் போன்றவர்களின் தூக்கத்தை தொலைக்க செய்துவிடுகிறது. பிள்ளைகளின் ஆசைகளை நிறைவேற்றுகிறோம் என்று சொல்லி அங்கும் இங்குமாக கடன் வாங்கி அல்லது சுலபத் தவணைகளில் லட்சக்கணக்கான பணத்தை செலவழித்து நம் சாலைகளுக்கு பொருந்தாத அதிவேக நவீன இரு சக்கரவாகனங்களை மாணவப் பருவத்தில் உள்ள தங்களது பிள்ளைகளுக்கு, இளைஞர்களுக்கு வாங்கித்தரும் பெற்றோர்களின் நுகர்வு கலாசார கெளரவ முடிவுகளை பேரன்பு என்று நாம் கொண்டாட முடியாது.

பள்ளி, கல்லூரி மாணவர்கள் தங்களது படிப்பை முடிக்கும்வரை அரசு, கல்விநிறுவன போக்குவரத்து மற்றும் பொது போக்குவரத்தை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகள் சட்டம் கொண்டு வரவேண்டும். மாணவர்கள் தத்தமது படிப்பை முடிக்கும்வரை ஏற்கெனவே ஓட்டுநர் உரிமம் பெற்றிருந்தால் அதை கல்வி நிறுவனத்திடம் ஒப்படைத்திட வேண்டும் என்றும் போக்குவரத்து விதிகளையும், சட்டத் திட்டங்களையும் மாணவர்களது தேர்ச்சிக்கான மதிப்பெண் வகைமைக்குள் கொண்டு வருவது பற்றியும் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் நலனில் அக்கறையுள்ள நமது அரசுகளும் கல்வியாளர்களும் சிந்திக்க வேண்டிய அவசரத் தேவையிருக்கிறது.

ADVERTISEMENT
ADVERTISEMENT