இளைஞர்மணி

கிளர்ந்தெழுங்கள் தோழர்களே! - 46: பன்னாட்டு வணிகம்!

26th Apr 2022 06:00 AM | ஆர். நடராஜ்

ADVERTISEMENT


"வரவு எட்டணா செலவு பத்தணா
அதிகம் ரெண்டனா
கடைசியில் துந்தனா!'

நடுத்தர குடும்பங்கள் மாத வருவாயில் எவ்வளவு தான் சிக்கனமாக குடும்பம் நடத்தினாலும் பாடலில் வருவது போல் ஒரு துண்டு விழுகிறது. அதை அப்போதைக்கு கடன் வாங்கி சமாளித்து , வாங்கிய கடனுக்கு வட்டி கட்ட வருவாயிலிருந்து கொடுத்து, அதனால் மேலும் வரவு செலவில் துண்டு விழும். கடன் சுமை அதிகரித்து கொண்டே போகும். ஒரு கட்டத்தில் இந்த சுழற்சியிலிருந்து மீள முடியாமல் பல குடும்பங்கள் தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு தள்ளப்படுகின்றன.

இதே நிலை தான் நாட்டை ஆட்சி செய்யும் அரசாங்கங்களுக்கும். மக்களின் அன்றாட வாழ்க்கையை சுமுகமாக நடத்த பொதுப்பணிகளை அரசு பழுதின்றி நிறைவேற்ற வேண்டும். அதற்கு மக்களுக்கு அதிகம் சிரமம் இல்லாத வகையில், எப்படி தேனீ மலர்களிலிருந்து தேனை மலர்களுக்கு பாதிப்பு இல்லாத வகையில் நுகர்கிறதோ, அதே போல் அரசு வரி வசூல் செய்ய வேண்டும் என்கிறார் அரசியல் மேதை கொளடில்யா.

நிகர வரி வசூலிக்க இயலவில்லை என்றால் கடன் வாங்கித்தான் ஆட்சி நடத்த வேண்டும். நிதியில் பற்று வைத்து பற்றாக் குறை நிதி நிர்வாகம், ஜான் மேனார்ட் கீன்ஸ் என்ற ஆங்கிலேய நிபுணரால் நடைமுறை படுத்தபட்ட பொருளாதார கோட்பாட்டை எல்லா நாடுகளும் பின்பற்றுகின்றன. 1930- களில் அவர் ஏற்படுத்திய "கீனீசியன்' கோட்பாட்டின்படி பொருளாதாரத்திற்கு உயிரூட்ட தனியார் முதலீட்டை மட்டும் நம்பாது அரசு அதிக அளவில் பொதுப்பணிகளில் முதலீடு செய்ய வேண்டும். இந்த முறை மூலம் பொதுப்பணிகள் நடைபெற அதிக பணம் சுழற்சியில் விடப்படுகிறது. மக்களுக்கு வேலை வாய்ப்பு, உழைப்புக்கு அவர்கள் கையில் பணம், அவர்களது தேவைகளைப் பூர்த்தி செய்ய உற்பத்தி பெருக்கம், அதன் மூலம் பலருக்கு வேலை வாய்ப்பு என்ற வகையில் பணப்புழக்கம், நலிந்த நிலையில் இருக்கும் பொருளாதாரத்தை சமன் செய்கிறது.

ADVERTISEMENT

ஆங்கிலேயர் ஆட்சியில் 1878-79 -ஆம் வருடங்களில் மதராஸ் மாகாணத்தில் கடும் வறட்சி ஏற்பட்டது. அப்போதிருந்த மதராஸ் கவர்னர் பக்கிங்காம் சென்னையில் பாயும் அடையாறு, கூவம் ஆறுகள் இரண்டையும் இணைக்கும் கால்வாய் கட்டும் பணியை, வறட்சி நிவாரணப் பணியாக அறிவித்தார். இதன்மூலம் மக்களுக்கு வேலை வாய்ப்பு கிடைத்தது, தேவைகள் அதிகரித்தது. அதன்மூலம் உற்பத்தி பெருக்கம் ஏற்பட்டது.

ஆந்திரா மாநிலம் காக்கிநாடா நகரிலிருந்து விழுப்புரம் வரை 796 கி.மீ. நீளமுள்ள கால்வாய் பல கட்டத்தில் கட்டப்பட்டு மக்களுக்கு பயனுடைய போக்குவரத்து தளமாக திகழ்ந்தது. இத்தகைய உபயோகமுள்ள வறட்சி காலப் பணி பொருளாதா ரத்தை சீர்திருத்தும், நிரந்தரமாக ஒரு தரமான கட்டமைப்பை சமுதாயத்திற்கு அளிக்கும். கீனீசியன் பொருளாதார சீர்திருத்ததிற்கு பொருத்தமான எடுத்துக்காட்டு சென்னை நகர வாழ்க்கையோடு பின்னிப்பிணைந்த பக்கிங்காம் கால்வாய்!

ஒரே நாட்டில் தேவையான எல்லா பண்டங்களும் கிடைப்பதில்லை. சர்வதேச சந்தையில் பண்ட பரிமாற்றம் , அதை சார்ந்த வர்த்தகம் முக்கியப் பங்கு வகிக்கிறது. பண்டை காலத்திலிருந்து கப்பல் மூலம் வாணிகம் நடக்கிறது. ரோமானியர்கள் அகண்ட பாரதத்திற்கு வணிகம் செய்ய வந்தனர், நமது நாட்டு வியாபாரிகளும் பண்டகங்களில் சேகரித்து அப்பொருட்களை வெளிநாடுகளுக்கு எடுத்து சென்றனர் என்ற குறிப்பு சரித்திர ஏடுகளில் பதிவாகியுள்ளது. சோழ மன்னர்கள் தெற்காசிய நாடுகளை தங்கள் ஆளுகைக்குள் வசப்படுத்தினர்.

நாட்டின் வளர்ச்சிக்கு பன்னாட்டு வியாபாரத்தை பெருக்க வேண்டும் என்று பொருள்பட கூறுகிறார் மகாகவி பாரதி
வெட்டுக் கனிகள் செய்து தங்கம்முத லாம்
வேறு பலபொருளும் குடைந்தெடுப் போம்,
எட்டுத் திசைகளிலுஞ் சென்றிவைவிற் றே
எண்ணும் பொருளனைத்தும் கொண்டுவரு வோம்
ஆயுதம் செய் வோம்நல்ல காகிதம் செய் வோம்
ஆலைகள்வைப் போம் கல்விச் சாலைகள்வைப் போம்
குடைகள்செய் வோம்உழு படைகள் செய் வோம்
கோணிகள் செய் வோம்இரும் பாணிகள் செய் வோம்
நடையும் பறப்புமுணர் வண்டிகள்செய் வோம்
ஞாலம் நடுங்கவரும் கப்பல்கள்செய் வோம்

ஏற்றுமதி இறக்குமதி விகிதம் நாட்டின் பொருளாதார ஸ்திரத்தை உணர்த்துகிறது. வளர்ந்து வரும் நாடுகளில் மூலதன பொருள்கள் அதிகமாக இருக்கும், ஆனால் அவற்றை வைத்து நுகரக்கூடிய பொருள்களாக மாற்றம் செய்யும் தொழில் நுட்பம் இருக்காது. முன்னேறிய நாடுகள் மூலப்பொருள்களை அடிமாட்டு விலைக்கு வாங்கி அவற்றை வைத்து உபயோகமுள்ள இறுதி பொருள்களாக மாற்றி அதிக விலைக்கு ஏனைய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து தங்கள் அன்னிய செலவாணியை பெருக்கிக் கொள்கின்றனர். ஆனால் எல்லா இயற்கை வளமும் உள்ள வளர்ந்து வரும் நாடுகள் உற்பத்தி திறன் இல்லாதலால் பின்தங்கிய நிலையில் உள்ளன. இந்த நிலை மாறுவதற்கு ஒரே வழி உற்பத்தி திறனை மேம்படுத்த வேண்டும். அதனால் தான் மத்திய அரசு "மேக் இன் இந்தியா' - இந்தியாவில் வந்து உற்பத்தி செய்யுங்கள் என்ற திட்டத்தை நடைமுறை படுத்தியுள்ளது.

இந்தியாவில் மற்ற நாடுகளை ஒப்பிடுகையில் அமைதியான சூழல் இருக்கிறது, நல்ல ஒழுக்கமான இளைய சமுதாயம் உள்ளது, மற்ற கட்டமைப்புகளும் உள்ளன என்பதும் இந்த திட்டத்தை வலுப்படுத்த காரணிகளாக வைக்கப்படுகிறது.

ஒவ்வொரு நாடுகளின் ஏற்றுமதி இறக்குமதி தேவைக்கு ஏற்றவாறு மாறுபடும். ஒரு நாட்டின் பண்டங்களின் ஏற்றுமதி இறக்குமதியைவிட அதிகமாக இருந்தால் அந்நிய செலவாணி அதிகம் ஈட்டிய வளர்ந்த நாடாக விளங்கும். நமது நாட்டின் ஏற்றுமதி இந்திய பொருளாதார வளர்ச்சி குறியீட்டில் -ஜிடிபி யில் 20.6 %. உலகின் வியாபார பொருள்கள் ஏற்றுமதியில் இந்தியாவின் பங்கு 1.7 சதவிகிதம் தான்! அமெரிக்கா, சீனா உலக சந்தையில் அதிகமாக பொருள்களை ஏற்றுமதி செய்கின்றன.

இந்தியா அதிக அளவில் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்கிறது. கச்சா எண்ணெய் விலை உயர்வால் நமது இறக்குமதியின் மதிப்பு அதிகம். 2020-21- இல் இந்தியா 196.5 மில்லியன் மெட்ரிக் டன் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்தது, அதன் விலை 62.2 பில்லியன் அமெரிக்க டாலர். நமது மொத்த இறக்குமதியில் 19 % கச்சா எண்ணெய், அடுத்து எலெக்ட்ரானிக் சாதனங்கள். ஏற்றுமதி இறக்குமதியில் விழும் வித்தியாசம் சுமார் 90 பில்லியன் அமரிக்க டாலர் .

வர்த்தக பற்றை குறைப்பதற்கு நாம் பெட்ரோல், டீசல் உபயோகத்தை முடிந்த வரை கட்டுப்படுத்த வேண்டும். அதிக அளவில் மின்சாரத்தால் இயங்கும் வாகனங்கள் தயாரிப்பை அரசு ஊக்குவிக்கிறது. மின்சார வாகனங்கள் பேட்டரி சார்ஜ் செய்துகொள்ள நெடுஞ்சாலைகளில் சார்ஜிங் மையங்கள் உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. மின்சார வாகனங்களுக்கு சாலை வரியிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.

பத்து வருடங்களுக்கு முன்னால் கச்சா எண்ணெய் உயர்ந்தாலும் பெட்ரோல் டீசல் விலையை ஏற்றாததால் இந்தியாவின் கடன் சுமை அளவிற்கு மேல் அதிகரித்து ரூ 2,50,000 கோடியாக இருந்தது. வருடத்திற்கு வட்டி மட்டும் ரூ 25,000 கோடி! சேர்ந்துவிட்ட கடன் சுமையை தீர்க்க, கச்சா எண்ணெய் விலை உலக சந்தையில் இறங்கினாலும் அரசு பெட்ரோல் டீசல் விலையை குறைக்கவில்லை.

இதன் மூலம் ரூ 2,50,000 கோடி கடனை மோடி அரசு அடைத்துவிட்டது. இதற்கு இந்திய மக்கள் அனைவரின் பங்கும் உள்ளது என்று பெருமிதத்தோடு பிரதமர் சமீபத்தில் மக்களுக்கு தன் உரையில் குறிப்பட்டார். 18,500 கிராமங்களுக்கு மின்சார இணைப்பு, 40 ஆயிரம் கி.மீ. புதிய நெடுஞ்சாலைகள், 1.5 லட்சம் கோடி ரூபாய் முத்ரா திட்டத்தில் இளைஞர்களுக்கு கடன், எல்லையில் நாட்டின் பாதுகாப்பை மேம்படுத்தல் போன்ற முக்கிய நாட்டு நல பணிகள் சாத்தியமானது என்றும் பிரதமர் கூறினார்.

கரோனா பாதிப்பில் உலகமே முடங்கியபோது இந்தியா தடுப்பூசி தயாரிப்பில் கவனம் செலுத்தி நாட்டு மக்கள் அனைவருக்கும் விலையில்லா தடுப்பூசி அளித்து உலக நாடுகளுக்கும் தடுப்பூசியை ஏற்றுமதி செய்து நற்பெயர் ஈட்டியுள்ளது. அதுமட்டுமல்ல சமீப உக்ரேன் ரஷிய போரால் மத்திய கிழக்காசிய நாடுகளில் ஏற்பட்ட உணவு தட்டுப்பாட்டை போக்க இந்தியா கோதுமை ஏற்றுமதி செய்துள்ளது. உக்ரேனில் உள்ள இந்திய மக்கள் மட்டுமல்லாது பாகிஸ்தான் பாங்களா தேச மாணாக்கரையும் பாதுகாப்பாக திரும்ப அழைத்து வந்தது பெருமை பட வேண்டிய சாதனை.

சில அத்தியாவசிய திட்டங்களை நிறைவேற்ற கடன் வாங்கி சமாளிக்கும் முறையை பொருளாதார மேலாண்மை அங்கீகரிக்கிறது. ஆனால் வாங்கும் கடன் நாட்டின் மொத்த பொருளாதார வளர்ச்சி குறியீட்டில் 60% தாண்டாமல் இருக்க வேண்டும். ஆனால் வளர்ந்த நாடுகள் வளர்ச்சி குறியீட்டை நிச்சயம் அடையும் திறமை இருப்பதால் அதிக கடன் சுமக்கும் வலிமை உள்ளது. பாகிஸ்தான், ஸ்ரீலங்கா போன்ற நாடுகள் அதிகம் முறையற்ற கடன் வாங்கியதால் இப்போது வாங்கிய கடன் திரும்பசெலுத்த முடியாமல் மிகப் பெரிய நெருக்கடியில் சிக்கியுள்ளார்கள். ஏப்ரல் 2021-இல் ஸ்ரீலங்காவின் கடன் 35பில்லியன் டாலர். ஜிடிபியோடு ஒப்பிட்டால் 125% , அந்நிய செலவாணி கையிருப்பு ஒரு மாத செலவிற்கு கூட பத்தாது! விலைவாசி உயர்வு கட்டுக்கடங்காமல் 17.5% தாண்டியுள்ளது. இந்தியாவின் கடன் "ஜிடிபி'யில் 60% ற்கு குறைவாகவே உள்ளது என்பதால் நாம் தலை நிமிர்ந்து நிற்க முடிகிறது.

பொருளாதார கட்டுப்பாட்டை பின்பற்ற வேண்டும் என்பதை உறுதி செய்ய "எஃப் ஆர் பி எம்'சட்டம் 2003 -இல் அமலாக்கப்பட்டது. அதன்படி கடன், மாநிலங்களை பொருத்த வரை ஜிடிபி யில் 20 % தாண்டக்கூடாது, மத்திய அரசிற்கு 40% உச்ச வரம்பு. அதேபோல் நிதி பற்றாக்குறை மொத்த பட்ஜெட்டில் நான்கு சதவிகிதத்திற்கு கீழே இருக்க வேண்டும். குஜராத், மஹாராஷ்டிரா மாநிலங்களை தவிர்த்து மற்ற மாநிலங்கள் கடன் 20% த்தை கடந்துவிட்டன, தேவையில்லா ஜனரஞ்சக நலத்திட்டங்களால், என்று மத்திய அரசின் உயர் அதிகாரிகள் எச்சரிக்கை கொடுத்துள்ளார்கள்.

மேற்கு வங்காளம், ஆந்திரா, தெலங்கானா பஞ்சாப் மாநிலங்களின் கடன்சுமை அளவு கடந்து விட்டது. ஸ்ரீலங்காவி கடன் சுமைக்கு நிகராக இந்த நான்கு மாநிலங்களின் நிதி மேலாண்மை குலைந்துவிட்டது என்ற எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.

ஒரு நாட்டின் அந்நிய செலவாணி கையிருப்பு, நாட்டின் பொருளாதார வளர்ச்சி, உற்பத்தி திறன், சர்வதேச சந்தையில் உற்பத்தியான பொருள்களின் தரம் இவற்றை பிரதிபலிக்கும். இந்தியாவின் அந்நிய செலவாணி கையிருப்பு செப்டம்பர் 2021 கணக்குப்படி 642.453 பில்லியன் டாலராக எப்போதும் இல்லாத அளவு உயர்ந்திருக்கிறது.

அதிகம் அந்நிய செலவாணி கையிருப்பு வைத்திருக்கும் நாடுகள் பட்டியலில் முதல் இடம் சீனாவுக்கு. இந்தியாவிற்கு நான்காவது இடம் என்பதில் பெருமை கொள்ளலாம். அதைத் தக்க வைத்து கொள்ள பன்னாட்டு வர்த்தகத்தை நாம் எல்லோரும் இணைந்து உயர்த்த வேண்டும்.

போன வார கேள்விக்கு பதில்: பிஸ்கல் ரெஸ்பான்சிபிலிடி அண்ட் பட்ஜெட் மேனேஜ்மெண்ட்' சட்டம் 2003-இல் பாராளுமன்றம் நிறைவேற்றியது.

கட்டுரையாளர்: மேனாள் காவல்துறைத்தலைவர்
மேனாள் சட்டமன்ற உறுப்பினர்

ADVERTISEMENT
ADVERTISEMENT