இளைஞர்மணி

மத்திய பல்கலைக் கழகங்களில் ஒருங்கிணைந்த பட்டப் படிப்பு: பிளஸ்-2 தேர்வு எழுதவுள்ளோர் விண்ணப்பிக்கலாம்

26th Apr 2022 06:00 AM | வி.குமாரமுருகன்

ADVERTISEMENT

 

மத்திய அரசின் மனித வளத் துறையின் நேரடி கட்டுபாட்டில் 40-க்கும் மேற்பட்ட மத்திய பல்கலைக்கழகங்கள் செயல்பட்டு வருகின்றன. பொதுவாக, கல்வி நிறுவனங்களின் தர மதிப்பில் ஐஐடி-கள் முதல் வரிசையிலும், அதற்கு அடுத்து மத்தியப் பல்கலைக்கழகங்கள் முக்கிய இடத்திலும் இருக்கின்றன. தமிழ்நாட்டில் திருவாரூர் மத்திய பல்கலைக்கழகம், மத்திய அரசின் கீழ் இயங்கும் பல்கலைக்கழகங்களில் மிக முக்கியமானது. இந்தப் பல்கலைக்கழகத்தில் பிளஸ் டூ தேர்வை எழுதவுள்ளவர்கள் ஒருங்கிணைந்த பட்டப்படிப்பு படிக்கவும், தற்போது இளநிலை பட்டப்படிப்பு படித்துக்கொண்டிருப்பவர்கள் முதுநிலை பட்டப்படிப்பு படிக்கவும் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

திருவாரூரில் இருந்து ஒன்பது கிலோ மீட்டர் தொலைவில் நீலக்குடி பகுதியில் சுமார் 516 ஏக்கர் பரப்பளவில் தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. இப்பல்கலைக்கழகத்தில் உயிர் அறிவியல் ,இயற்பியல், வேதியியல், ஆங்கிலம் கற்றல், தமிழ், பொருளியல், சமூகப் பணிகள், ஹிந்தி, வரலாறு ,பூச்சியியல் மற்றும் பொது சுகாதாரம், நுண்ணுயிரியல், கணிதம், கணினி அறிவியல், உளவியல், காமர்ஸ் ,நிர்வாக மேலாண்மை ,மீடியா அண்ட் கம்யூனிகேஷன் ,நூலக அறிவியல் ,கல்வி இயல் ,மெட்டீரியல் சயின்ஸ், இசை, சட்டம் ,புள்ளியியல், தோட்டக்கலை, சுற்றுலா, புவியியல், ஜியாலஜி என 27 துறைகள் செயல்பட்டு வருகின்றன. இத்துறைகளில் கற்பித்தல் பணியில் 158 ஆசிரியர்கள் ஈடுபட்டுவருகின்றனர்.

62 வகையான பாடப்பிரிவுகளின் கீழ் கற்பித்தல் பணி நடைபெற்று வருகிறது. இதில் 27 பிரிவுகளில் அகடமிக் புரோகிராம்களும், 25 பிரிவுகளில் ரிசர்ச் புரோகிராம்களும் ,6 பிரிவுகளில் ஒருங்கிணைந்த புரோகிராம்களும் ,3 பிரிவுகளில் அண்டர் கிராஜுவேட் புரோகிராம்களும், சர்தார் வல்லபாய் பட்டேல் இன்டர்நேஷனல் ஸ்கூல் ஆஃப் டெக்ஸ்டைல் அண்ட் மேனேஜ்மென்ட் புரோகிராம் ஒன்றும் அடங்கும்.

ADVERTISEMENT

இது தவிர கம்யூனிட்டி கல்லூரிகள் மூலமாக 20 வகையான பிரிவுகளில் கற்றல் பணியும் நடைபெற்று வருகிறது. இங்கு பிளஸ் டூ மாணவர்கள் ஒருங்கிணைந்த ஐந்தாண்டு முதுகலை படிப்புகளாக வேதியியல், பொருளியல், உயிரி அறிவியல், கணிதம், இயற்பியல் படிப்புகளும், இளநிலை பட்டப்படிப்பு படிப்பவர்களுக்கு இரண்டு ஆண்டு முதுநிலை படிப்புகளாக வேதியியல், கணினி அறிவியல், நோயியல் மற்றும் பொது சுகாதாரம், புவியியல், மைக்ரோபயாலஜி, அப்ளைடு சைக்காலஜி, எம்டெக் படிப்புகளாக மெட்ரியல் சயின்ஸ் & நானோ டெக்னாலஜி, எனர்ஜி & என்வியார்ண்மென்ட் டெக்னாலஜி படிப்புகளும், முதுநிலை கலைப் பிரிவில் எம்ஏ ஆங்கிலம், ஹிந்தி, மீடியா & கம்யூனிகேஷன், சோசியல் சர்வீஸ், வரலாறு, கிளாசிக் தமிழ், எக்னாமிக்ஸ், எம்பிஏ, எம்.காம், நூலகவியல் மற்றும் தகவல் அறிவியல் பாடப்பிரிவுகளும் உளளன.

இங்கு பி.எட் படிப்புடன் கூடிய பிஎஸ்சி கணிதம் படிப்பும் உள்ளது. மெட்ராஸ் ஸ்கூல் ஆஃப் எக்னாமிக்ஸ் கல்வி நிறுவனத்துடன் இணைந்து பொருளியல் - பொது, நிதி பொருளியல் , காப்பீட்டுப் பொருளியல், சுற்றுச்சூழல் பொருளியல், பயன்பாட்டு நிதி பகுப்பாய்வு போன்ற பாடப்பிரிவுகள் செயல்பட்டு வருகின்றன.

செம்மொழித் தமிழ் ஆய்வு நிறுவனத்துடன் இணைந்து முதுகலை தமிழ் துறை இயங்கி வருகிறது. தேசிய சட்டப் பள்ளி மற்றும் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் போன்றவற்றுடன் இணைந்து பல பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

தற்போது, 994 மாணவிகள் உள்பட 2133 பேர் இந்த பல்கலைக்கழகத்தில் பயின்று வருகின்றனர்.

இந்த பல்கலைக்கழகத்தில் உள்ள நூலகத்தில் 36,511 புத்தகங்கள் உள்ளன. மேலும் பாடம் தொடர்பான 114 சிடிக்களும் இருப்பதுடன் 130 பருவ இதழ்கள் நூலகத்தில் வாங்கப்பட்டு வருகின்றன,


இந்த பல்கலைக் கழகத்தில் சேருவதற்கு தகுதித் தேர்வு கட்டாயமாகும். நேஷனல் டெஸ்டிங் ஏஜென்சி (National Testing Agency (NTA) மூலம் நடைபெறும் CUET (Common University Entrance Test) தேர்வை எழுதி தகுதி பெற்றால்தான் இந்த பல்கலைக் கழகத்தில் சேர முடியும். இந்த தகுதித் தேர்வை தமிழ், ஆங்கிலம், ஹிந்தி,அஸ்ஸாமி,பெங்காலி,குஜராத்தி,கன்னடம்,மலையாளம்,மராத்தி,ஒடியா,பஞ்சாபி,தெலுங்கு,உருது ஆகிய 14 மொழிகளில் எழுதமுடியும். இதற்காக இந்தியா முழுவதும் 547 மையங்கள் தயார் செய்யப்பட்டு வருகின்றன. மே-6 ஆம் தேதி மாலை 5 மணி வரை ஆன்-லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். https://cuet.samarth.ac.in என்ற இணையதளத்திற்கு சென்று விண்ணப்பிக்க வேண்டும்.

ஜூலை முதல் அல்லது 2ஆவது வாரத்தில் தேர்வு இருக்கும். கம்யூட்டர் பேஸ்டு தேர்வாகவும், மல்டிபில் சாய்ஸ் கொஸ்டினாகவும் தேர்வு இருக்கும். பஹ்ரைன்,இலங்கை,கத்தார்.யுஏஇ,இந்தோனேஷியா,நேபால்,மலேசியா,குவைத்,நைஜீரியா,ஓமன்,சவூதிஅரேபியா,சிங்கப்பூர் போன்ற வெளிநாட்டினரும் அந்தந்த பகுதியில் அமைக்கப்படும் தேர்வு மையங்களில் தேர்வு எழுதலாம். இந்த தகுதி தேர்வில் தேர்வு செய்யப்படுவோர் கலந்தாய்விற்கு அழைக்கப்பட்டு அதன் பின் விரும்பிய மத்திய பல்கலைக் கழகங்களில் அனுமதிக்கப்படுவர்.

மேலும் விபரங்களுக்கு 011-4075 9000 அல்லது 011-69227700 தொலைபேசியில் அழைக்கலாம். அல்லது www.cuet}ug@nta.ac.in என்ற மெயிலில் அனுப்பலாம். தமிழ்நாட்டிலுள்ள மத்திய பல்கலைக் கழகத்தை 04366 277230 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு விபரங்களைப் பெறலாம்.

ADVERTISEMENT
ADVERTISEMENT