இளைஞர்மணி

மாறி வரும் ஐ.டி. துறை வாழ்க்கை முறை!

கோமதி. முத்துமாரி

"சொகுசான வாழ்க்கை என்றாலே ஐ.டி. துறைதான்' என்ற கண்ணோட்டம் தலைமுறை தலைமுறையாக இருந்து வருகிறது. துறை ரீதியான படிப்பும் அதுகுறித்த கொஞ்சம் திறனும் இருந்தால் நல்ல ஊதியம், போக்குவரத்துக்கு "கேப்' வசதி, வெளிநாட்டுப் பயணம் என வாழ்க்கை செட்டில் ஆகிவிடும் என்பதுதான் இன்றைய நவீன தலைமுறையினரின் எண்ணமும்கூட. அதனால்தான் ஐ.டி. மோகம் இன்னும் குறையாமல் இருக்கிறது. 

தொழில்நுட்பம் அதிவேகமாக வளர்ந்துவரும் இந்த காலகட்டத்தில் ஐ.டி. துறையின் தேவை அளவுக்கதிகமாகவே இருக்கிறது. பொறியியல் கல்லூரிகள் பலவற்றிலும் ஐ.டி. நிறுவனங்கள் நேரடியாக வந்து மாணவர்களை தேர்ந்தெடுத்து அழைத்துச் செல்லும் "கேம்பஸ்' நடைமுறையும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. இதற்காக திறன்மிகு மற்றும் கேம்பஸ் வசதி உள்ள கல்லூரிகளைப் பார்த்தும் மாணவர்கள் தேர்வு செய்கின்றனர்.

தனியாக தொழில் தொடங்குவதற்கு அடுத்தபடியாக இளைஞர்களின் இரண்டாவது விருப்பமாக ஐ.டி. துறை இருக்கிறது எனலாம். 

ஏனெனில், பிற துறை படிப்புகளுக்கு ஆரம்பத்தில் கிடைக்கும் ஊதியத்தைவிட ஐ.டி. துறையில் கிடைக்கும் ஊதியம் இருமடங்குக்கும் அதிகமாக இருப்பதால் பணம் ஈட்ட வேண்டும்; ஹை}பையான வாழ்க்கை வேண்டும்' என்று நினைப்பவர்கள் பலரும் இந்தத் துறையை தேர்வு செய்கின்றனர். 

கரோனா காலத்தில்கூட மற்ற துறைகள் பெரும் அடி வாங்கிய நிலையில் ஐடி துறை தப்பித்துக்கொண்டது. ஆனால், இந்த கரோனாதான் அவர்களின் வாழ்க்கைமுறையையும் அதிகளவு மாற்றியுள்ளது. 

கரோனா ஊரடங்கால் "வீட்டிலிருந்து வேலை செய்யும் முறை' அறிமுகமானது. முதலில் புதிதாக அசெüகரியமாக இருந்தாலும் பின்னர் இது பழக்கமானது. ஐ.டி. துறைக்கு இது மிகவும் வசதியாக மாறிவிட்டது என்றே  கூறலாம். ஐ.டி. ஊழியர்கள் அனைவரும் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக வீட்டில் இருந்து வேலை செய்து வருகின்றனர். 

பெரிய  நிறுவனங்கள் அனைத்தும் தங்கள் ஊழியர்களுக்கு கணினி, வை}பை, மேசை, நாற்காலி என அலுவலக சூழ்நிலையை ஏற்படுத்தித் தந்திருப்பதுதான் அவர்களின் வாழ்க்கைமுறை மாற்றத்திற்கு காரணம். 

ஆரம்பத்தில், வீட்டில் இருந்து வேலை செய்யும் முறையால் கூடுதல் நேரம் வேலை வாங்குவதாக ஊழியர்களிடையே ஒரு குற்றச்சாட்டு இருந்து வந்தது. அதன்பின்னர் சில ஒருங்கிணைப்புகளுக்குப் பிறகு சரியாகிவிட்டதாகக் கூறுகின்றனர் அவர்கள். 

மாறாக, ஊழியர்கள்தான் இப்போது அவர்கள் விருப்பப்பட்ட நேரத்தில் வேலை செய்வதாகக் கூறுகின்றன நிறுவனங்கள்.

நிறுவனங்களைப் பொருத்தமட்டில் ஊழியர்களுக்கு பாதுகாப்பு என்பதுடன் முதலில் அலுவலகத்தில் ஆகும் செலவுகள் மிகவும் குறைந்துள்ளதால் இந்த நடைமுறையை மனதார வரவேற்றன. ஆனால், அதுவே நிறுவனங்களுக்கு ஒரு பெரும் தலைவலியாக மாறியுள்ளது. ஏனெனில், இப்போது ஊழியர்களை நிறுவனத்திற்கு அழைத்தாலும் அவர்கள் வரத் தயாராக இல்லை என்பதுதான் மிகப்பெரும் மாற்றம். 

இந்த மாற்றத்திற்கு என்னதான் காரணம்? 

முதலில் வீட்டில் இருந்து வேலை செய்வது, வேலைப்பளு, வேலை நேரம் ஆகியவற்றால் சற்று மன அழுத்தமாக இருந்தாலும் பின்னாளில் அது ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது. வீட்டில் உள்ளவர்களுடன், நண்பர்களுடன் நல்ல நேரம் செலவழிக்க முடிகிறது. தனிப்பட்ட வேறு வேலைகளையும் பார்த்துக்கொள்ள முடிகிறது. போக்குவரத்து நேரம் குறைந்துள்ளது, வெளியில் செல்லாததால் பணச்செலவும் குறைந்துள்ளது, வீட்டிலேயே அலுவலக சூழ்நிலை இருப்பதால் அலுவலகத்திற்கு போக விருப்பமில்லை என்றே பெரும்பலானோர் கூறுகின்றனர். 

இதனால் நடுத்தர, சிறு நிறுவனங்கள் பலவும் அதிர்ச்சி அடைந்துள்ளன. ஒரு சில நிறுவனங்களில் மட்டுமே பகுதி ஊழியர்கள் அலுவலகத்திற்கு வருகின்றனர். 

இதுகுறித்து சென்னையைச் சேர்ந்த பிரபல ஐடி நிறுவன ஊழியர் ஒருவர் தெரிவித்ததாவது:

""அலுவலகத்திற்குச் சென்ற காலத்தில் முன்பெல்லாம் தினமும் 2}3 மணி நேரம் போக்குவரத்திலே சென்றுவிடும். இப்போது அந்த நேரம் மிச்சமாகியுள்ளது. என்னுடைய குழந்தையுடன் நேரம் செலவளிக்கிறேன். வீட்டில் இருந்து வேலை செய்வதால் ஊதியத்துடன் சுகாதார பாதுகாப்பு இருக்கிறது. எனது குடும்பத்தினர்,நண்பர்களுடன் நேரம் செலவழிப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. பொருளாதார ரீதியாகவும் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. வேறு வேலைகளிலும் என்னால் கவனம் செலுத்த முடிகிறது. 

அலுவலக ரீதியாகப் பார்த்தால், நிறுவனங்களுக்கு செலவு குறைந்துள்ளது உண்மைதான். ஆனால், புதிதாக பணிக்கு வருவோருக்கு ஆன்லைன் மூலமாக பயிற்சி கொடுப்பது சற்று கடினமாக உள்ளது. ஊழியர்களின் பணித்திறனும் குறைவதாக ஒரு சில நிறுவனங்கள் எண்ணுகின்றன. இதனால் ஊழியர்களை மீண்டும் அலுவலகத்திற்கு அழைக்கிறார்கள். 

ஊழியர்கள் பெரும்பாலாக இன்று அலுவலகத்திற்குச் செல்லும் எண்ணத்தில் இல்லை. அவர்களும் தற்போது அதிக தேவையை முன்வைக்கின்றனர். புதிதாக பணிக்கு சேர்பவர்கள்கூட, வீட்டில் இருந்து மட்டுமே வேலை செய்ய முடியும் என்றே கோரிக்கை வைக்கின்றனர். மேலும் ஊதியமும் அதிகமாகக் கேட்கின்றனர்'' என்று தெரிவித்தார். 

இது அனைத்திற்கும் ஒருபடி மேலாக, அலுவலகத்திற்கு வரச்சொன்னால் வேலையை விட்டுவிடுவதாகவும் சில ஊழியர்கள்  கூறுவது வியப்பாக இருக்கிறது. இந்தியாவில் சமீபத்தில் எடுத்த ஒரு கணக்கெடுப்பின்படி, ஊழியர்களை அலுவலகத்திற்கு வரவழைத்தால் 10ல் 6 பேர் தங்கள் பதவியை ராஜிநாமா செய்யத் தயாராக இருப்பதாக தெரிய வந்துள்ளது. 

இந்தியாவில் 50%க்கும் அதிகமானோர் வீட்டில் இருந்து வேலை செய்யவே விரும்புவதாகவும் வீட்டில் அமைதியான சூழ்நிலையில் வேலை  செய்யும் வசதி இல்லாதவர்களே  அலுவலகம் செல்ல விருப்பப்படுவதாகவும் மற்றொரு ஆய்வு கூறுகிறது. குறிப்பாக சொந்த ஊரில் இருந்து நகரங்களுக்கு வந்து பணியாற்றும் நபர்கள், நிரந்தரமாக தாங்கள் வீட்டில் இருந்து வேலை செய்ய அனுமதிக்கக் கோருகிறார்கள். அவ்வாறே நிறுவனமும் பலருக்கு அந்த வாய்ப்பை வழங்கியிருக்கிறது. 

ஆனால், அலுவலகத்திற்கு வராமல் இருந்தால், ஊழியர்களுக்கு இடையேயான இணக்கம் சரியாக பேணப்படுவதில்லை என்றும் இதனால் வேலையில் பாதிப்பு ஏற்படுவதாகவும் சில நிறுவனங்கள் கூறுகின்றன.

இறுதியாக, வீட்டில் இருந்து வேலை செய்வதால் சமூகப் பணிகளில் அவர்களின் ஈடுபாடு குறைந்து காணப்படுகிறது. மேலும் ஓரிடத்தில் அமர்ந்து வேலை செய்வதாலும் உடல் இயக்கம் குறைந்து இருப்பதாலும் உடலியல் பிரச்னைகளும் ஏற்படுகின்றன. சிலருக்கு சில நேரங்களில் மன அழுத்தமும் அதிகமாக இருப்பதாக மருத்துவர்கள் தரப்பு கூறுகிறது. 

எனினும், இன்று சூழ்நிலைக்கு ஏற்ப அலுவலக வேலையில் மறுசீரமைப்புகளைச் செய்ய நிறுவனங்கள் தயாராக இருக்கின்றன. ஊழியர்களின் வசதிக்கேற்ப நிறுவனங்கள் மாற்றத்தை கொண்டுவருவதில் தவறொன்றும் இல்லை. அது வரவேற்கத்தக்கதும்கூட. 

ஊழியர்களுக்கு வசதியான சூழ்நிலையை ஏற்படுத்திக்கொடுத்துவிட்டால் வேலையின் வெளிப்பாடும் மிகச்சரியாகவும் வேகமாகவும் இருக்கும் என்பதில் ஐயமில்லை. ஊழியர்களின் விருப்பத்தை முடிந்தவரை நிறைவேற்றும் நிறுவனங்களே வெற்றியை நோக்கிச் செல்கின்றன. நிறுவனத்தின் வெற்றிக்கு ஊழியர்களின் பங்கு மிகவும் அவசியம் என்பதை உணர்ந்தே நிறுவனங்கள் இந்த முடிவுகளுக்குச் செல்கின்றன. 

எப்படியோ, கரோனா ஊரடங்கினால் ஐ.டி. துறையில் மிகப்பெரும் மாற்றம் தொடங்கியிருக்கிறது. வரும்காலத்தில்தான் இதன் சாதக, பாதகங்களை மிகவும் துல்லியமாக அலச முடியும். 

தற்போது மீண்டும் கரோனா பாதிப்பு அதிகரித்திருக்கும் சூழ்நிலையில் இந்த மாற்றத்தை வரவேற்க வேண்டியதைத் தவிர வேறு வழியில்லை.  
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

துருக்கி அதிபருடன் ஹமாஸ் தலைவர்கள் முக்கிய ஆலோசனை

பெண் கெட்டப்பில் நடிகர் கவின்!

மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி

மக்களவை தேர்தல்: தமிழ்நாட்டில் மறுவாக்குப் பதிவு இல்லை -தேர்தல் ஆணையம்

தமிழ்நாட்டில் 69.46% வாக்குகள் பதிவு

SCROLL FOR NEXT