இளைஞர்மணி

'நட்சத்திரங்களை' அடைந்த விண்வெளி வீராங்கனை!

26th Apr 2022 06:00 AM | எஸ்.ராஜாராம்

ADVERTISEMENT

 

அமெரிக்கா, ரஷியா, ஜப்பான், ஐரோப்பா, கனடா ஆகிய நாடுகளின் விண்வெளி நிலையங்கள் இணைந்து சர்வதேச விண்வெளி நிலையத்தைச் செயல்படுத்தி வருவது அறிந்த விஷயம்.

அதேபோல, சீனா தனக்கென சொந்தமாக ஒரு விண்வெளி நிலையத்தை அமைத்து வருகிறது. தியான்காங் என்ற அந்த விண்வெளி நிலையம் பூமியிலிருந்து 340-450 கி.மீ. உயரத்தில் கீழ்சுற்றுவட்டப் பாதையில் அமைக்கப்பட்டு வருகிறது.

இந்தப் பணிகளை நிகழாண்டுக்குள் நிறைவு செய்ய சீனா திட்டமிட்டுள்ளது. இதற்காக அவ்வப்போது விண்கலம் மூலம் விண்வெளி வீரர்களை அனுப்பி விண்வெளி நிலைய கட்டமைப்புப் பணிகளை மேற்கொண்டு வருகிறது.

ADVERTISEMENT

அந்த வகையில் கடந்த நவம்பரில் விண்வெளி நிலையத்துக்கு அனுப்பிவைக்கப்பட்ட ஷாய் ஜிகாங், வாங் யாபிங், யி குவாங்ஃபு ஆகிய மூவர் சுமார் 6 மாதங்களுக்குப் பின்னர் (183 நாள்கள்) ஷென்úஸா-13 என்ற விண்கலம் மூலம் அண்மையில் பூமிக்குத் திரும்பினர். இந்தப் பயணம் 9 மணி நேரம் நீடித்தது. சீன விண்வெளி வீரர்கள் தொடர்ச்சியாக அதிக நாள்கள் தங்கியிருந்தது இதுவே முதல் முறை.

இந்த ஆறு மாத காலத்தில் விண்வெளி நிலையத்துக்கான கட்டமைப்புப் பணிகளில் ஈடுபட்டதுடன், அங்கிருந்தவாறே நேரடியாக அறிவியல் உரையையும் நிகழ்த்தினர். அறிவியல் பரிசோதனைகளிலும் ஈடுபட்டனர்.

இவர்களில் வாங் யாபிங் (42) ஒரு பெண். சீன விமானப் படை வீரரை திருமணம் செய்துகொண்டுள்ளார். இவர்களுக்கு ஒரு மகள்.

ஷென்úஸா விண்கலமானது கோபி பாலைவனத்தின் தரையை அடைந்ததும், அதன் உள்ளே இருந்து வெளியே வந்த யாபிங், "நட்சத்திரங்களை அடைந்த பின்னர் திரும்பியுள்ளேன் என என் மகளிடம் சொல்ல விரும்புகிறேன்' என்றார்.

இந்த விண்வெளிப் பயணத்தின்போது, 2021, நவம்பர் 7-ஆம் தேதி "விண்வெளி நடையில்' ஈடுபட்டார் யாபிங். அதன்மூலம் விண்வெளியில் நடந்த முதல் சீன விண்வெளி வீராங்கனை என்ற பெருமையையும் அவர் பெற்றார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT