இளைஞர்மணி

இளைய சமுதாயமே - தூக்கம் நன்று !

12th Apr 2022 06:00 AM | சுரேந்தர் ரவி

ADVERTISEMENT


எந்த வயதினராக இருந்தாலும், தூக்கம் மிகவும் அவசியமான ஒன்று. தூக்கம் என்பது கிடைத்தற்கரிய பொக்கிஷம் என்றே கூறலாம். ஆனால், தூங்கும் நேரத்தை, வீணாகும் நேரமெனக் கருதும் போக்கு இளைய தலைமுறையிடையே தற்போது அதிகரித்துள்ளது. இளைஞர்கள் தூக்கத்துக்கு முக்கியத்துவம் வழங்குவதில்லை. 

தொழில்நுட்ப வளர்ச்சியானது இளைஞர்களின் அன்றாட வாழ்வில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. முன்பெல்லாம் பொழுதுபோக்காகத் திகழ்ந்த விஷயங்கள், தற்போது பொழுது முழுவதும் இளைஞர்களை ஆக்கிரமித்துள்ளன. மாறிவரும் பணிச்சூழலும் இளைஞர்களின் அன்றாட வாழ்க்கைச் சுழற்சியில் மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது. 

பல இளைஞர்கள் இரவில் நீண்ட நேரம் விழித்திருந்து பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளையும், திரைப்படங்களையும் கண்டு களிக்கின்றனர். தொழில்நுட்ப நிறுவனங்கள் உள்ளிட்ட பல நிறுவனங்களில் பணியாற்றும் இளைஞர்கள் இரவு நேரத்தில் பணியில் ஈடுபடுகின்றனர். பள்ளி, கல்லூரி மாணவர்கள் சிலர் இரவில் அமைதியான சூழல் நிலவுவதால், அதுதான் படிப்பதற்கு ஏற்ற சமயம் எனக் கூறுகின்றனர். 

பொழுதுபோக்குக்காகவும் படிப்பதற்காகவும் தூக்கத்தைத் துறப்பது சரிதானா? தூக்கத்தை விட அவை அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததா? என்பதை இளைஞர்கள் சிந்தித்துப் பார்ப்பது அவசியம். முதலில் தூக்கத்தைப் பற்றிய தவறான எண்ணமே பலரிடமும் உள்ளது. தூக்கத்தின் பல்வேறு பலன்களை அறிந்துகொண்டால்தான் அது எவ்வளவு முக்கியமானது என்பது தெரியவரும். 

ADVERTISEMENT

தூக்கம் தேவையில்லாத ஒன்று கிடையாது. தூங்கும் நேரத்தை, வீணாகும் நேரமாகக் கருதுதல் முற்றிலும் தவறு. மனித உடலானது பகல்பொழுதில் பல்வேறு பணிகளில் ஈடுபடுவதற்கும், இரவில் முழுமையாக ஓய்வெடுப்பதற்குமே பழக்கப்பட்டுள்ளது. பகலிரவைப் பொருத்தே உடலின் இயக்கங்கள் தீர்மானிக்கப்படுகின்றன. 

இரவுப்பொழுது என்பது முழுவதுமாக தூங்குவதற்கு உரியது. மின்சாரம் கண்டுபிடிக்கப்படாத சமயத்தில், மக்கள் வானில் இருள் சூழ்ந்ததுமே தூங்கிவிடுவர். அதிகாலை சூரிய வெளிச்சம் படரத் தொடங்கியதுமே கண்விழித்துவிடுவர். பகல் முழுவதும் பல்வேறு பணிகளில் ஈடுபடுவர். பல கிராமங்களில் தற்போது வரை கூட சீக்கிரம் தூங்கி சீக்கிரமாக விழிக்கும் பழக்கத்தை மக்கள் கடைப்பிடித்து வருகின்றனர். 

தூங்கும்போது உடலின் உள்ளுறுப்புகள் தங்களை மறுகட்டமைப்பு செய்து கொள்கின்றன. மூளையின் செல்கள் புத்துணர்ச்சி பெறுகின்றன. அதன் காரணமாக, பகலில் உடல் சுறுசுறுப்புடன் இயங்க முடிகிறது. நாள்முழுவதும் சீராக இயங்குவதற்கான ஆற்றலை இரவுப் பொழுதின் சிறப்பான தூக்கம் வழங்குகிறது. 

தூக்கம் பல்வேறு பலன்களை வழங்குவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இரவில் நன்றாகத் தூங்குபவர்களால், பகல் பொழுதில் குறிப்பிட்ட பணிகளில் தீவிர கவனம் செலுத்த முடிவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். சரியாகத் தூங்காதவர்கள், பல்வேறு கவனச் சிதறலைச் சந்திக்க நேரிடும் என்றும் அவர்கள் எச்சரிக்கின்றனர். 

நல்ல தூக்கம், இதயத்தின் செயல்பாட்டை வலுப்படுத்துகிறது; நீரிழிவு, மனஅழுத்தம் உள்ளிட்ட பல்வேறு உடல்சார்ந்த பிரச்னைகள் ஏற்படாமல் தடுக்கிறது; உடலின் நோய்எதிர்ப்பாற்றலை அதிகரிக்கிறது; அன்றாடப் பிரச்னைகளுக்கு எளிதில் தீர்வு காண்பதற்கான ஆற்றலை வழங்குகிறது. ஒட்டுமொத்தத்தில் நமது பழக்கவழக்கங்களிலும் தூக்கம் பெரும் மாற்றங்களை ஏற்படுத்துவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். 

இரவு நேரத்தில் இருள் சூழ்ந்த அறையில் தூங்குவது அவசியம். இருளில் தூங்கும்போது "மெலடோனின்' என்ற ஹார்மோன் உடலில் சுரந்து, உடல் வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. உடல் வளர்ச்சியைத் தூண்டும் பல்வேறு ஹார்மோன்கள் இரவில் சுரந்து நன்மையை உண்டாக்குகின்றன. 

தினமும் எவ்வளவு மணி நேரம் தூங்க வேண்டும் என்பது மற்றொரு பிரச்னையாக உள்ளது. வளரிளம் பருவத்தில் உள்ள மாணவர்கள், இரவில் 8 மணி நேரம் தூங்கலாம். 8 மணி நேரத் தூக்கம் பல்வேறு நன்மைகளை வழங்குமென்பது ஆராய்ச்சியாளர்களின் கருத்தாக உள்ளது. இளைஞர்கள் ஏழரை மணி நேரம் தூங்கலாம். குறைந்தபட்சம் 7 மணி நேரம் தூங்க வேண்டியது கட்டாயம். அதற்கும் குறைவாகத் தூங்குவது பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்த வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். 

இரவில் முறையாகத் தூங்காமல் இருப்பது, உடல் பருமன், இதயம் சார்ந்த பிரச்னைகள், ரத்த அழுத்தம், மனஅழுத்தம், சோம்பல், செயலில் கவனமின்மை உள்ளிட்ட பல்வேறு உடல் மற்றும் மனம் சார்ந்த பிரச்னைகளை ஏற்படுத்தும். எனவே, தூக்கத்தைத் துறந்து நாம் செய்யும் செயல்கள் அத்தியாவசியமானதா என்பதை இளைஞர்கள் மீண்டும் சிந்தித்து முடிவெடுக்க வேண்டும். இரவில் நல்ல தூக்கம், ஒவ்வொரு நாளையும் மகிழ்ச்சியாக்கும். தினசரி மகிழ்ச்சி, வாழ்க்கையை முழுமையாக மகிழ்ச்சிகரமானதாக மாற்றும். 

ADVERTISEMENT
ADVERTISEMENT